 
                     
                திருப்பீடம்
பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Monday, 07 Nov, 2022
பெண்களின் தலைமைத்துவம், அவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதைச் சார்ந்துள்ளது என்று, பாரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள் பற்றிய கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
“மனித சமுதாயத்தின் முழுமையான முகம்: ஒரு நீதியான சமுதாயத்திற்காக தலைமைத்துவத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் பங்குபெற்ற கர்தினால் பரோலின் அவர்கள் அக்டோபர் 27 ஆம் தேதி, வியாழனன்று ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
வருவாய், இனம், பல்வேறு ஆபத்தான சூழல்கள் போன்றவை, பல சிறுமிகளும் இளம்பெண்களும் புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருப்பதற்கும், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கும் காரணமாகியுள்ளன என்பதையும் கர்தினால் பரோலின் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்கள் கல்விபெறுவதற்குரிய உரிமையின்றி அவர்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெறும் எவ்விதக் கலந்துரையாடலும் பயனற்றதாகவே இருக்கும் எனவும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் எச்சரிக்கைவிடுத்தார்.
மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், தற்போது காரித்தாஸ் அமைப்பின் பணியாளர்களில் 53 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், அவர்களின் தலைமைத்துவத்தை அதிகரிக்க கூடுதலாக முயற்சிகள் அவசியம் என்றும் அறிவித்துள்ளார்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment