No icon

கர்தினால் மைக்கிள் செர்னி

மறைசாட்சியரின் வாழ்வு நம் பணிகளை ஊக்குவிக்கின்றன

1989-ஆம் ஆண்டு சான் சால்வதோர் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இயேசு சபை அருள்பணியாளர்களின் வாழ்வும் உயிர் தியாகமும் நம் பணியை ஊக்குவிக்கின்றன என்று தான் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் மைக்கிள் செர்னி கூறியுள்ளார்.

1989-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி இரவு, சான் சால்வதோரில் உள்ள இயேசு சபையினரின் மத்திய அமெரிக்க பல்கலைக் கழக (UCA) வளாகத்தில் சால்வதோர்  ஆயுதப்படையின் தலைவரால் ஆறு இயேசு சபை அருள்பணியாளர்கள் படுக்கையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதன் 33-ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கர்தினால் செர்னி குறிப்பிட்டுள்ளார்.

தனது தோழர்களான இந்த ஆறு பேரின் படுகொலையை நினைவு கூர்ந்துள்ள இயேசு சபையைச் சேர்ந்தவரான கர்தினால் செர்னி அவர்கள், சான் சால்வத்தோரில் நடைபெற்ற இந்தப் போரானது, இது மூன்றாம் உலகப்போர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிக் கூறி வருவதன் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் அமைதியின் பலவீனத்தின் அறிகுறிகள் இருந்தபோதிலும், நமது இறைவன் ஒன்றிணைந்த பாதையின் வழியாக நம்மைப் புதுப்பிக்க அழைக்கிறார் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ள கர்தினால் செர்னி அவர்கள், விழிப்புடன் இருப்பதும் பயணம் செய்வதும்தான் திருஅவையின் உண்மையான வாழ்க்கை முறை என்றும் இதனைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள்தாம் மறைசாட்சிகளாய் இறந்த நம் சகோதரர்களும் சகோதரிகளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இயேசு சபையின் 34 வது பொது அமர்வு  இறுதி ஆவணத்தில் காணப்படும் வார்த்தைகளின் உறுதியான எடுத்துக்காட்டுகளாக இவர்கள் வாழ்கிறார்கள் என்று தனது கடிதத்தில் கர்தினால் செர்னி எடுத்துக்காட்டியுள்ளார்.

மத்திய அமெரிக்க பல்கலைக் கழக அதிபர் இக்னாசியோ எல்லாகுரியா மற்றும் அருள்பணியாளர்கள், இக்னாசியோ மார்ட்டின் பரோ, செகுண்டோ மான்டெஸ், அமண்டோ லோபஸ், ஜோக்வின் லோபஸி லோபஸ், ஜூவான் ரமோன் மோரேனோ பார்டோ ஆகிய ஆறு இயேசு சபை அருள்பணியாளர்களும் FMLN (Farabundo Martí National Liberation Front) என்ற புரட்சிக் குழுக்களை ஆதரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு சமையல் செய்த எல்பா ராமோஸ் என்ற பெண்ணும் 16 வயது நிரம்பிய அவரது மகளும் இச்சம்பவத்தின்போது கொல்லப்பட்டனர்.

 

Comment