 
                     
                மேயர் மொரிசியோ ரஸெரோ
திருத்தந்தை பிரான்சிஸ் ஆஸ்தி நகரின் கவுரவ குடிமகன்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 22 Nov, 2022
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆஸ்தி நகரின் கவுரவ குடிமகனாக ஏற்ற சான்றிதழை, அந்நகர மேயர் மொரிசியோ ரஸெரோ அவர்கள், நவம்பர் 20, ஞாயிறன்று வழங்கியுள்ளார்.
நவம்பர் 19 சனிக்கிழமையன்று வட இத்தாலியின் பீட்மாண்ட் மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகரில் வாழ்ந்து வருகின்ற வயதுமுதிர்ந்த தனது இரு நெருங்கிய உறவினர்கள் உட்பட தனது குடும்ப உறவுகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20, ஞாயிறு காலையில், ஆயர் இல்லத்தில் ஆஸ்தி நகரின் கவுரவ குடிமகன் என்ற சான்றிதழைப் பெற்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அமைதி நிலவ மேற்கொண்டுள்ள முயற்சிகள், அனைத்துவிதமான பாகுபாட்டுச் செயல்களுக்கு எதிராக, ஒருமைப்பாடு மற்றும், உடன்பிறந்த உணர்வுச் செய்திகளை அவர் தினமும் வழங்கிவருவது போன்றவற்றைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்தக் கவுரவ குடிமகன் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று மேயர் மொரிசியோ ரஸெரோ அவர்கள் கூறியுள்ளார்.
.jpg)
ஆஸ்தி நகரின் அரசியலமைப்பிலும் இந்த விழுமியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றுரைத்த மேயர், திருத்தந்தை, அஸ்தி மற்றும், பீட்மாண்டீஸ் பகுதியோடும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களோடு கொண்டிருக்கும் வலுவான உறவு ஆகியவற்றைக் குறிக்கும்வண்ணம், பிரிக்கோ மர்மோரிட்டோவிலிருந்து எடுக்கப்பட்ட ஆஸ்தி நகர மண் நிரப்பப்பட்ட ஒரு சிறிய பையையும் அவரிடம் கொடுத்தார்.
மேலும், ஞாயிறு காலையில், அவ்வாயர் இல்லத்தில் பீட்மாண்ட் மாநிலத் தலைவர் ஆல்பர்டோ சிரியா மற்றும், ஏனைய அப்பகுதியின் அரசு அதிகாரிகளும் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
அதற்குப்பின்னர், ஆயர் இல்லத்திலிருந்து 1.7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கேட்டனா வளாகத்திற்குத் திறந்த காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அவ்விடத்தில் மாற்றுத்திறனாளிகளும் நோயாளிகளும் திருத்தந்தையைக் காண்பதற்காகக் காத்திருந்தனர். அவர்களை ஆசிர்வதித்த பின்னர், ஆஸ்தி நகரின் பேராலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment