இர்மா பூம்
வத்திக்கான் நூலகத்தில் புத்தகக் கண்காட்சி
- Author குடந்தை ஞானி --
- Thursday, 24 Nov, 2022
வத்திக்கான் அப்போஸ்தலிக்க நூலகம் பாரம்பரியம், இளமை மற்றும் உயிர்த்துடிப்பு கொண்டு இயங்குகின்றது எனவும், சமகால கலைஞரான எழுத்தாளரும் புத்தக வடிவமைப்பாளருமான இர்மா பூம் இன் படைப்புக்கள், வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது எனவும் பேராயர் ஏஞ்சலோ வின்சென்சோ ஜானி கூறியுள்ளார்.
நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருப்பீடம் மற்றும் நெதர்லாந்து தூதரகம் இணைந்து வத்திக்கான் நூலகத்தில் இர்மா பூம் என்பவரின் புத்தகக் கண்காட்சியை தொடங்கி உள்ளதாக திருப்பீடச் செய்தித்தொடர்பகம் அறிவித்துள்ள நிலையில், அதுபற்றி பேசிய பேராயர் ஏஞ்சலோ வின்சென்சோ ஜானி இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்காலத்துவத்தை அடையாளப்படுத்துவதாக அமையும் இப்புத்தகக் கண்காட்சியில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டின் அருள்பணியாளரும் அறிஞருமான ஜூசப்பே தி லூக்காவின் மிக முக்கியமான சுவரொட்டி சேகரிப்புக்கள், மற்றும் புத்தகங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
பண்டைய மற்றும் நவீனகால கிரேக்க, இலத்தீன், அரேபிய எழுத்துக்குறிகளான கல்கிராமின் அற்புதமான படைப்புக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், இர்மா பூம் அவர்கள் வழியாக வத்திக்கான் நூலகத்திற்கு நன்கொடையைத் திரட்டும் பெரும் வாய்ப்பாகவும் அமைகின்றது.
வேகமாக முன்னேறிச் செல்லும் இணையதள காலகட்டத்தில், புத்தகம் கடந்த அறுநூறு ஆண்டுகளில் மிகவும் நிலையான தொடர்பு சாதனங்களில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இன்றியமையாததும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் அடிப்படை பகுதியாகவும் திகழ்வதாக எழுத்தாளர் இர்மா பூம் கூறியுள்ளார்.
அறிவு, ஞானம், மற்றும் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக நூலகம் திகழ்கின்றது எனவும், இதற்கு வத்திக்கான் நூலகமே சான்று என்றும் எழுத்தாளர் இர்மா பூம் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கான் நூலகத்துடனான இந்த புதுமையான ஒத்துழைப்புக்கு நெதர்லாந்து தூதரகம் பங்களிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று கூறிய நெதர்லாந்து அரசின் தூதுவர் அன்னெமிக் ரூய்க்ரோக் அவர்கள், ஒரு நவீன நெதர்லாந்து புத்தக வடிவமைப்பாளரான இர்மா பூம் படைப்புகளால் உருவாகி இருக்கும் இக்கண்காட்சி நமது பாரம்பரியத்தின் மறக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்வதற்கான வாய்ப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
இணையதளத்தில் முன்பதிவு செய்து இக்கண்காட்சியை அனைவரும் கண்டு இரசிக்கலாம் எனவும், நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சியானது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இர்மா பூம் - வரைகலை வடிவமைப்பின் பெண்மணி
1960 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள லோகேமில் பிறந்த இர்மா பூம் அவர்கள், அச்சுக்கலை வல்லுநரும், புத்தக வெளியீட்டாளரும், வரைகலை வடிவமைப்பாளரும் ஆசிரியருமாவார். 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை வடிவமைத்து வரைகலை வரைபடத்துறையில் தனது தனித்துவமானப் படைப்புக்களாலும் தைரியமான சோதனை அணுகுமுறைகளாலும் எல்லாராலும் அறியப்பட்டவர்.
2,136 பக்கங்கள் கொண்ட SHV திங்க் புத்தகம் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் வெளியிடப்பட்டது. பூம் 1992 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மூத்த விமர்சகராகவும், உலகம் முழுவதும் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தும் உரிமையைப் பெற்றவராகவும் உள்ளார்.
அவர் தனது புத்தகத் திட்டங்களுக்காக ஏராளமான விருதுகள், மற்றும் மதிப்புமிக்க குட்டன்பெர்க் பரிசைப் பெற்ற இர்மா பூமின் புத்தகங்கள் நியூயார்க்கில் உள்ள MoMA, சிகாகோவின் கலை நிறுவனம், வத்திக்கான் நூலகம், பாரிஸில் உள்ள சென்டர் பாம்பிடோ போன்றவற்றின் நிரந்தர சேகரிப்புகளில் உள்ளன.
Comment