No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவோடு எப்போதும் வாழ்வை புதிதாகத் தொடங்கலாம்

நம் வாழ்வின் பலவீனங்களையும், தவறுகளையும் ஏற்பது மற்றும் அவற்றுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்பது, மனத்தாழ்மைக்கு இன்றியமையாதவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய டிசம்பர் 04 ஆம் தேதி ஞாயிறு பகல் 12 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, கடவுளிடம் திரும்புவதிலும், அவரது எல்லையற்ற அன்பை வரவேற்பதிலும், நாம் எப்போதும் இயேசுவோடு புதிதாகத் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎன்று ஞாயிறு நற்செய்தி வாசகம் (மத்.3,1-12) அனைவருக்கும் மனம் மாற அழைப்புவிடுக்கும்வேளை, இதில் திருமுழுக்கு யோவானின் பங்கு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, கண்டிப்பு மற்றும் பற்றுருதி உள்ளவராய் இருந்த திருமுழுக்கு யோவான், மக்கள் கடவுளிடம் திரும்புவதற்கு மனம் மாறுமாறு அன்புக் கூக்குரலோடு அழைப்புவிடுத்தார் என்று கூறினார்.

ஒவ்வாமை, வெளிவேடம்

திருமுழுக்கு யோவான் கடுமையானவராக, சிறிது அச்சத்தைக்கூட திணிப்பவராக இருந்துள்ளார். அத்தகையவர் இத்திருவருகைக்காலத்தில் நமக்கு முக்கியமானவராக இருப்பது எப்படி என நாம் வியக்கலாம், ஆனால் மக்களில் இரட்டைவேட வாழ்வைக் கண்டபோது அவர் மிகவும் கண்டிப்புள்ளவராக இருந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

வெளிவேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம் மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, இத்தகைய மனநிலையும், இரட்டைவேடமும், திருவருள் வழங்கப்படும் நேரத்தையும், ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்குரிய வாய்ப்பையும் வரவேற்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, மனம் மாறியவர்கள் என்பதை, அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் என்று யோவான் நம்மிடம் கூறுகிறார். இது, தன்னையே அழித்துக்கொள்ளும் மகனைப் பார்க்கின்ற ஒரு தந்தை, வாழ்வைத் தொலைத்துவிடாதே என்று அவனிடம் கூறுவது போன்ற அன்பின் அழைப்புக்குரலாகும் என்று திருத்தந்தை விளக்கியுள்ளார்.

வெளிவேடம் மிகப்பெரும் ஆபத்தை முன்வைக்கிறது என்றும், இது மிகவும் புனிதமான உண்மைகளைக்கூட அழித்துவிடுகின்றது என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, இதனாலேயே, திருமுழுக்கு யோவானும், பின்னர் இயேசுவும், தங்களின் பாவங்கள், பலவீனங்கள் பற்றிய உணர்வும், மனத்தாழ்மையும் இன்றி தங்களின் பிரச்சனைகளை மற்றவரில் பார்க்கின்ற வெளிவேடக்காரர்களை கடுமையாகச் சாடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

எனவே கடவுளை வரவேற்பதற்கு மனத்தாழ்மை முக்கியம் எனவும், தேக்கநிலையிலிருந்து வெளியேறி, மனம் வருந்துதல் என்ற நீரில் மூழ்கவேண்டும்  எனவும் கூறியுள்ள திருத்தந்தை, மனத்தாழ்மையின் பாதை பற்றியும் விளக்கியுள்ளார்.

மனத்தாழ்மை

நாம் மற்றவரைவிட சிறந்தவர்கள், அனைத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம், கடவுளும், நம் சகோதரர் சகோதரிகளும் தினமும் தேவையில்லை என நற்செய்தி கூறும் பரிசேயர்கள் போன்று சிலநேரங்களில் நாமும் நினைக்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, திருவருகைக்காலம், நம் கவசங்களை கழற்றிவிட்டு மனத்தாழ்மையுள்ளவர்களாக வாழ உதவும் திருவருளின் காலம் என்று கூறியுள்ளார். ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச்சென்று பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு சுயவிடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலம் இது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.   

அமைதிக்காக இறைவேண்டல்

டிசம்பர் 8 ஆம் தேதி, அமல அன்னை விழாவன்று, அவ்வன்னையிடம் அமைதிக்காக, குறிப்பாக போரால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காகவும், கிழக்கு ஐரோப்பாவில் துயருறும் திருஅவைக்காக நிதி திரட்டும் போலந்து நாட்டு மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.     

Comment