No icon

அருள்பணியாளர்களின் மறைப்பணி

குருமாணவர்களின் வாழ்வு நன்றிச் செபமாக இருக்கவேண்டும்

கிறிஸ்து மனிதரின் இதயங்களில் பிறக்கும்வண்ணம் திருநற்கருணை, அருளடையாளங்கள் மற்றும் உலகில் பிரசன்னமாக இருக்கின்றவராக அவரை அறிவிப்பதே அருள்பணியாளர்களின் மறைப்பணியாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 10 ஆம் தேதி, சனிக்கிழமையன்று இஸ்பெயின் நாட்டின் பார்செலோனா குருத்துவக் கல்லூரி குழுமத்தின் முப்பது பேரை வத்திக்கானின் திருத்தந்தையர் அறையில் சந்தித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குருமாணவர்களின் வாழ்வு, நன்றி செபத்திலிருந்து பிறப்பதாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இக்குழுமத்திற்கென தயாரித்து வைத்திருந்த உரையை அவர்களிடம் அளித்துவிட்டு, அந்நேரத்தில் தன் மனதில் எழுந்த எண்ணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை, குருத்துவ வாழ்வின் தனிச்சிறப்பைச் சுட்டிக்காட்டுவதற்கு கொதிக்கும் பாத்திரத்தில் எழுகின்ற குமிழை உருவகமாகப் பயன்படுத்தி, அத்தகைய ஆர்வத்தோடு கடவுளின் அன்பை இவ்வுலகிற்குக் கொணருமாறு குருமாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

செப வாழ்வு

கிறிஸ்துவின் அருள்பணியாளராக இருப்பதன் பொருளை விளக்கிய திருத்தந்தை, அருள்பணியாளர் செப மனிதராகவும், பாவிகளின் வாழ்வில் உடன்பயணிப்பவராகவும் இருக்கவேண்டும் என்றும், ஒருவர் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டபின்னர், அவரின் வாழ்வு செப வாழ்வாகவும், இவ்வாழ்வுக்கு அழைத்த கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அருள்பணியாளர், வெள்ளியாலும் பொன்னாலும் ஆன்மாக்களை ஆள்பவர் அல்ல, மாறாக அவரது செல்வம், இயேசுவின் பெயரை அறிவிக்கும் புண்ணியப் பண்பு மட்டுமே, அதாவது அவரை, திருநற்கருணை, அருளடையாளங்கள் மற்றும் உலகில் பிரசன்னமாக இருக்கின்றவராக வெளிப்படுத்த வேண்டும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

ஆண்டவர் நம் தியாகங்களைக் கேட்கிறார் எனவும், அருள்பணித்துவ வாழ்வில் தூய ஆவியார் உடன்பயணிக்கிறார் எனவும், நற்செய்தியை அச்சமின்றி போதிக்கும் ஆர்வத் தீயை ஒருபோதும் அணைத்துவிடாதீர்கள் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

அருள்பணித்துவ வாழ்வுக்குத் தங்களையே தயாரித்துவரும் மாணவர்கள், செபமாலை செபிக்குமாறும், கடவுள் அழைத்துள்ள அருள்பணித்துவ வாழ்வின் மறையுண்மைகளைக் கண்டுணர இரக்கத்தின் அன்னையும் அரசியுமான மரியாவின் உதவியை நாடுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Comment