திருத்தந்தை
ஆண்டவருக்காக வழியைத் தயார் செய்யுங்கள்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 18 Jan, 2023
நம் வாழ்வில் ஆண்டவருக்காக வழியைத் தயார் செய்வதற்கும், மற்றவருக்குத் தொண்டுபுரிவதற்கும் எல்லாவித பற்றுக்களிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி 15, ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
திருமுழுக்கு யோவான், இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தபின் பகர்ந்த சான்று பற்றிக்கூறும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” (யோவா.1:30) என்ற திருமுழுக்கு யோவானின் இச்சொல்லாடல்கள், அவரது பணி ஆர்வத்தை எடுத்துரைக்கின்றது என்று கூறினார்.
பணியில் ஆர்வம்
திருமுழுக்கு யோவான், மெசியாவுக்காக வழியைத் தயார் செய்தவேளை, அவர் தன் பணியிலிருந்து விலகிக்கொள்ளத் தயாராய் இருந்தார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் பொதுப் பணியில் திருமுழுக்கு யோவானுக்கு வெகுமதி அல்லது முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கும் என ஒருவர் நினைக்கலாம், ஆனால், யோவானோ தன் பணி முடிவடைந்துவிட்டது என்பதை அறிந்திருந்தார் என்று கூறினார்.
திருமுழுக்கு யோவான், இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தபோது அவர் மீது தூய ஆவி இறங்கி வந்ததைக் கண்டவுடன், “இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி! இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என இயேசுவைச் சுட்டிக்காட்டினார் என்று கூறியத் திருத்தந்தை, மக்களுக்குப் போதித்து வந்தவர் மற்றும், சீடர்களுக்குப் பயிற்சி அளித்துவந்தவருமான யோவான், ஓர் உண்மையான ஆசிரியருக்குரிய அடையாளமாகிய தான் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்பதை வெளிப்படுத்தினார் என்றார்.
தனது பணியை ஆற்றிய யோவான், அதில் நிலைத்திருக்கவோ அல்லது தனது வெற்றிக்காகப் பாராட்டப்படவேண்டும் என்பதிலோ ஆர்வம் காட்டவில்லை என்றும், இயேசுவை சந்திப்பதில் பலர் மகிழ்வுறவேண்டும் என்பதற்காக அவர் இயேசு குறித்து சான்று பகர்ந்தார் மற்றும், தனது பணியிலிருந்து விலகிக்கொண்டார் என்றும் திருத்தந்தை எடுத்தியம்பினார்.
பற்றுக்களிலிருந்து விடுதலை
திருமுழுக்கு யோவானின் பணியுணர்வு மற்றும், பணியை நிறைவுசெய்து அதிலிருந்து அவர் ஒதுங்கிக்கொண்டது ஆகியவை, பற்றுக்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியை முடிக்கும்போது அங்கீகரிக்கப்படவேண்டும் அல்லது வெகுமதி அளிக்கப்படவேண்டும் என நினைப்பது இயல்பானதே என்று தெரிவித்தார்.
ஆயினும், கைம்மாறு கருதாமல் மற்றவருக்குத் தொண்டுபுரியும்போது மற்ற ஆசைகள் எல்லாம் இரண்டாம்தரமாக மாறிவிடும் எனவும், திருமுழுக்கு யோவான் போன்று, நாமும் சரியான நேரத்தில் பணியிலிருந்து விலகிக்கொள்ளும் பண்பைப் பேணிவளர்க்க கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் திருத்தந்தை கூறினார்.
பணியிலிருந்து விலகிக்கொள்ளும் காலத்தை அறிந்திருத்தல்
ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அருள்பணியாளர் ஒருவர், மற்றவரை இயேசுவிடம் அழைத்துச்செல்லும்வண்ணம் நற்செய்தி அறிவிக்கவும், அருளடையாளங்களை நிறைவேற்றவும் அழைப்புப்பெற்றிருப்பதைப் போன்று, மக்கள் பல்வேறு நிலைகளைக்கொண்டிருக்கலாம் என்று கூறினார்.
எப்போதும் பணியுணர்வைக் கொண்டிருக்கிற சூழல்களில், ஒருவர் தன்மையினின்று (தந்நலத்திலிருந்து) விடுபட்டு அல்லது, அதனால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பணியுணர்வில் வளர்வதற்கு, அதிலிருந்து விலகிக்கொள்வதற்குத் தீர்மானம் எடுப்பது இன்றியமையாதது, அதேநேரம் அது சவாலானது என்று குறிப்பிட்டார்.
இப்பண்பில் வளர ஆண்டவரின் பணியாளராகிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடுந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களை மறவாது, நம் சிந்தனைகள், உதவிகள் மற்றும், இறைவேண்டல்களால் அவர்களோடு உடனிருப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
Comment