நற்செய்தி அறிவிப்புப் பணி
நேர்மைச் செயல்களால் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்களாகுங்கள்
- Author குடந்தை ஞானி --
- Friday, 27 Jan, 2023
நாம் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்கள் என்பது நாம் அணியும் ஆடையிலும் வெளிப்புற அணுகுமுறையிலும் வெளிப்படுவதல்ல, மாறாக நமது எளிமை மற்றும் நம்பிக்கையுள்ள நேர்மையின் செயல்களால் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
சனவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் உர்பான் பாப்பிறைக் கல்லூரியைச் சார்ந்த ஏறக்குறைய 200 அருள்பணியாளர்கள் தலைவர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துப் பேசிய போது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
உறுதியான நம்பகத்தன்மை, தனக்குள்ளிருந்து வெளியேறும் திறன், சிறந்த உரையாடல் என்னும் மூன்று தலைப்புக்களில் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் ஒவ்வொருவரும் வாழும் காலத்தின் பல தேவைகள், கேள்விகள் மற்றும் தங்கள் வாழ்வை சவாலுக்கு அனுமதிக்கும் ஆக்கப்பூர்வமான வழியில் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
உறுதியான நம்பகத்தன்மை
மக்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பகத்தன்மை, அவர் கடவுளின் வார்த்தையை அறிவித்ததற்கும், தான் யார் என்று வெளிப்படுத்தி அவர் செய்த செயல்களுக்கும் இடையிலான இணக்கத்திலிருந்து வந்தது என்று கூறிய திருத்தந்தை நாம் யார் என்பதைக் காட்ட பயப்பட வேண்டாம் என்றும், தன்னைத் தாழ்த்தி யாரென்று வெளிப்படுத்திய ஆயக்காரரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார் என்றும் எடுத்துரைத்தார்.
தனக்குள்ளிருந்து வெளியேறும் திறன்
தனக்குள்ளிருந்து வெளியேறும் திறன் என்பது நமது மனத்திட்டங்கள், அச்சங்களின் அடைப்புக்கள், நமக்கு உறுதியளிக்கும் சிறிய உறுதிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறுதல் என்று வலியுறுத்திய திருத்தந்தை, நம்பிக்கையின் வாழ்க்கை என்பது நமக்குள்ளிருந்து வெளியேறும் இத்தகைய ஒரு தொடர்ச்சியான வெளியேற்றத்தால் வலுப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
சமூக வாழ்வில், பல கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்திறன்கள் கொண்ட உங்களைப் போன்ற வளமையான, மாறுபட்ட சமூகத்தில் அதைச் செய்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு உள்ளது என்றும், ஒவ்வொருவரும் மற்றவர்கள், அவர்கள் உலகம், கலாச்சாரம் போன்ற தங்களது சொந்த அறையை விட்டு வெளியேறும் அளவிற்கு நீங்கள் வளப்படுத்த முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
சிறந்த உரையாடல்
உரையாடலுக்கான திறந்த தன்மையை வளர்க்க முதலில் கடவுளுடன் செபத்தில் உரையாடுவது முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை, ஜெபத்தில், அவர் நம்மிடம் பேசும்போதும், நம் குரலுக்கு செவிசாய்க்கும்போதும், அவரை வரவேற்று நமது சுய விருப்பு வெறுப்புக்களிலிருந்து வெளியேறுகின்றோம் எனவும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறுவது போல, உரையாடல் என்பது மறைப்பணியாளரின் சரியான செயல்பாடாக இருக்க வேண்டும் என்றும், அமைதியைத் தேடி, துன்பப்படும் மனிதகுலத்தின் நிகழ்வுகள், கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளைத் தழுவி, மனிதனாவதன் மூலம் இயேசு அதை நமக்குக் காட்டினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
உலகிற்கு உரையாடல் தேவை, அதற்கு அமைதி தேவை, அதற்கு சாட்சியாக இருக்கும் ஆண்களும் பெண்களும் தேவை, என்று கூறிய திருத்தந்தை, சிறந்த உரையாடலை மேற்கொள்ள அமைதியைப் பின்பற்ற பயப்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
நற்செய்தி அறிவிப்புப் பணித்துறை, தனது 400 ஆவது ஆண்டு நிறைவை மாற்கு நற்செய்தியில் (3:13) குறிப்பிட்டுள்ள இறைவார்த்தைகளான, கடவுள் தான் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுத்து, நற்செய்தியைப் பறைசாற்ற அவர்களை அனுப்பினார் என்பதன் அடிப்படையில் வாழ்வில் ஆன்மீக உடனிருப்பில் நம்மோடு பயணிக்கும் இயேசு என்ற கருப்பொருளில் கொண்டாடி மகிழ்கின்றது.
Comment