 
                     
                கல்வி
மக்களுக்கு எழுத்தறிவை வழங்குவதில் முக்கிய பணியாற்றிவரும் OPAM
- Author குடந்தை ஞானி --
- Friday, 27 Jan, 2023
நற்செய்தி அறிவிப்பு மற்றும் மனிதகுல வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருப்பது கல்வி என்ற மையக்கருத்துடன் மக்களுக்கு எழுத்தறிவை வழங்குவதில் முக்கிய பணியாற்றிவரும் OPAM அமைப்பினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
உலகின் அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவை வழங்கும் நோக்கத்துடன் 50 ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்ட கத்தோலிக்க அமைப்பான OPAM என்பதன் அங்கத்தினர்களை சனவரி 23 ஆம் தேதி, திங்கள்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து வழங்கிய உரையில், அமைதியை நோக்கிய பாதை வளர்ச்சி என்பதால், கல்வியின்றி வளர்ச்சி இடம்பெறமுடியாது என்பதை மனதில் கொண்டதாக இவ்வமைப்பு செயலாற்றிவருவதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கல்வித்திட்டங்களுடன், எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைகளுக்கான கல்வியில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, சமூக அளவிலும், திருஅவை அளவிலும் எண்ணற்ற பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றபோதிலும், சமுதாய வளர்ச்சியின்மைக்கான காரணங்கள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்ற கவலையை வெளியிட்டார்.
அனைவரும் தங்களின் சிறந்ததை மற்றவர்களுக்கு வழங்கவும், அனைவரும் சரிநிகரான மனித மாண்புடன் வாழவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டு ஏழை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து, அவர்களுக்கு கல்வி வழங்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ள OPAM அமைப்பின் பணிகள் தொடர தன் வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment