கஹரமான்மாராஸ்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை இரங்கல்
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Feb, 2023
வடமேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆன்மீக உடனிருப்பையும் ஆறுதலையும் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்திகளை அனுப்பியுள்ளார்.
பிப்ரவரி 6 திங்கள்கிழமை, அதிகாலை துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையில் உள்ள கஹரமான்மாராஸ் என்னும் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கும் காயமடைந்ததற்கும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இரங்கல் தந்தியினை அந்நாடுகளின் திருப்பீடத்தூதர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம்வல்ல இறைவனின் அருள்கரத்தில் இறந்தவர்களை ஒப்படைத்து அவர்களின் ஆன்மா நிறையமைதி பெற செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் ஆன்மிக உடனிருப்பை அளிப்பதாகவும் அவ்விரங்கல் தந்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோர்க்கு இறைவனின் வல்லமை அதிகமாகக் கிடைக்கப்பெற்று விடாமுயற்சியுடன் அவர்கள் செயல்பட தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
10000க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்நிலநடுக்கத்தால் தென்கிழக்கு துருக்கியிலும் மற்றும் சிரியாவிலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பகுதிகளையும் தாக்கியுள்ள மிக மோசமான நிலநடுக்கங்கள் 7.9 மற்றும் 7.5 ரிக்டர் அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும், மீட்புப் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் தொடர் மீட்புப்பணிகளை செய்துகொண்டிருப்பதால் உயிரழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Comment