மெக்சிகோ நாடு-"என் வீடு உங்கள் வீடு”
மனித குடும்பத்திற்கு அழிவைத்தரும் போர்-திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Saturday, 18 Feb, 2023
போர்கள் முழு மனித குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டுவந்து துன்பத்தையும் வறுமையையும் ஏற்படுத்துகின்றன என்றும், இதனால் குடும்பம் என்ற உணர்வை இழந்து வருகிறோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் மெக்சிகோ நாட்டு தொழில் முனைவோர் ஏறக்குறைய 60 பேரை சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மற்றும் வன்முறை மனித குடும்பத்திற்கு அழிவைக் கொண்டு வந்து, துன்பப்படுபவர்களை காணும் பார்வையை இழக்கச் செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
முழு மனித குடும்பத்திற்கும் அழிவைக் கொண்டுவந்து துன்பத்தையும் வறுமையையும் ஏற்படுத்தும் போர்களினால் நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை இழந்து வருகிறோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, வேறுபாடுகள் மற்றும் சிரமங்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்கவும், பொறுத்துக்கொள்ளவும், நாம் முயற்சிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
"என் வீடு உங்கள் வீடு” என்று அண்மையில் மெக்சிகோவில் ஒலித்த வார்த்தைகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து கத்தோலிக்கர்களுக்கும், வத்திக்கான் அவர்களின் வீடு போன்றது என்றும், திருஅவையின் பிள்ளைகள் ஒரே குடும்பமாகக் கடவுளைச் சந்தித்து வழிபடக்கூடிய இடம் என்றும் எடுத்துரைத்தார்.
குடும்பத்தில் பொறுமை, அன்பு, உரையாடல், மற்றும் நமது பார்வைகள் வழியாக அனைவரின் தேவைகளையும் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் வழியாக பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன என்பதை மறந்து விடுகிறோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் காலத்தின் கலாச்சாரம், தனித்துவம் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கத்தோலிக்க தொழில்முனைவோர் அனைவரும், பொருளாதாரம், வேலை கொண்ட இவ்வுலகில் கடவுள் இருப்பின் அடையாளமாக இருக்க, இறைவனுடனான தனது உறவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் நமது மிக முக்கியமான மூலதனம் ஆன்மீக மூலதனமாக இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பொது நன்மையை முதலில் வைத்து குடும்பத்திற்கு ஏற்ற "நாம்” என்பதால் மட்டுமே “நான்” என்பது வெற்றி பெற முடியும் என்றும், வெற்றி, ஆதிக்கம் பணம் என்ற உலக நாட்டங்களை விட நமது பொதுவான இல்லத்திற்கான நமது பங்களிப்பை அளிக்கவே அழைக்கப்படுகிறோம் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
Comment