சிரிசி மரியானி
மரியாவின் வாழ்க்கையைப் பின்பற்றுங்கள் - திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Saturday, 18 Feb, 2023
இறைவனின் தாயாம் அன்னை மரியாவின் நற்செய்தி வாழ்க்கையைப் பின்பற்றுங்கள் என்றும், அன்னை மரியா மீதான அன்பு, செபம், ஏழைகளுக்கு முன்னுரிமையளித்து கவனம் செலுத்துதல் ஆகிய மூன்று கருத்துக்களின் வழியாக உயிரோட்டமுள்ள துறவு, மற்றும் துடிப்பான மேய்ப்புப்பணியாற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் புனித கொன்சிஸ்தோரோ அறையில் சிரிசி மரியானி என்னும் அமல உற்பவ அன்னை மரியா சபையினரின் பொதுப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து மகிழ்ந்த போது திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
அன்னை மரியா மீது அன்பு
அன்னை மரியாவை வழிபடுவது என்பது அவரது நற்செய்தி வாழ்க்கையை முக்கியமாக பின்பற்றுவது என்றும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டல், தியானித்தல் வழியாகவே இறைவனின் தாயாம் மரியா மீது கொண்ட பக்தி ஊட்டமளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இரண்டாவது செபம்
சபையின் நிறுவனரான புனித ஸ்தனிஸ்லாஸ் அவரது காலத்தில் நிலவிய இரண்டு பெரும் பிரச்சனைகளான போரால் இறந்தோர் மற்றும் பிளேக் நோயால் இறந்தவர்களுக்காக தன்னுடைய செபத்தை அர்ப்பணித்தது போல, துன்புறும் ஒவ்வொருவருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் அச்சபையினர் செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.
மூன்றாவது ஏழைகளுக்கு கவனம் செலுத்துதல்
திருஅவை அருள்பணியாளர்களுக்கு ஆதரவாக மரியாவின் அருள்பணியாளர்கள் அந்தக் காலத்தின் சில தீவிரமான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க உதவியது போல, நம்பிக்கை பலவீனமடைந்தவர்களுக்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே, நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
அருள்பணியாளர்கள் பற்றாக்குறை, மக்களின் வறுமை நிலை, வேலையின்மை ஆகியவற்றால் துன்புற்றாலும் சபையின் ஆரம்பகால நிலையைக் கருத்தில் கொண்டு எளிய மக்களிடம் திறந்த மனப்பான்மை, கருவுறுதல் முதல் இறப்பு வரை மக்கள் உயிரைப் பாதுகாத்தல், எளிய மக்கள் மீது கவனம் செலுத்துதல் மற்றும் சிரமத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றைச் செய்து வரும் அச்சபை உறுப்பினர்களின் பணிகளையும் திருத்தந்தை பாராட்டினார்.
1670 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிராகோவில் புனித ஸ்தணிஸ்லாஸ் அவர்களால் உருவான இச்சபையின் 350வது ஆண்டு நிறைவையொட்டி, பொதுப்பேரவையானது அண்மையில் நடைபெற உள்ளது.
Comment