No icon

திருத்தந்தை

மதங்கள் கல்வியுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளன

சந்திப்பின் கலாச்சாரம் என்பது உறவு பாலங்களை உருவாக்குகிறது என்றும், மற்றவர்களை ஊக்குவிக்கும் உயர்ந்த மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளுக்குப் புதிய வழிகளைத் திறக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மார்ச் 16 ஆம் தேதி, வியாழனன்று, பல்சமய கல்வித் திருப்பயணமாக உரோமை வந்துள்ள தைவான் புத்தமதத் துறவியரைத் திருப்பீடத்தில் சந்தித்த வேளை, இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சந்திப்பின் கலாச்சாரம், மக்களை பிளவுபடுத்தும் சுவர்களைத் தகர்த்தெறிகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

பல்சமய கல்வித் திருப்பயணமானது, ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், நமது பல்வேறு அனுபவங்களைப் பாராட்டுவதற்கும் பல வாய்ப்புகளை வழங்குவதன் வழியாக, வளமைக்கான ஆதாரமாகவும் அமைகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒரு மதத்தின் புனித இடங்களுக்கு மேற்கொள்ளப்படும் கல்வித் திருப்பயணம் என்பது, தெய்வீகத்திற்கான அதன் அணுகுமுறையின் தனித்துவத்தைப் பற்றிய நமது நல்லெண்ணங்களை மேம்படுத்த உதவுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வத்திக்கானிலும், உரோமை முழுவதிலும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மதக் கலையின் தலைசிறந்த படைப்புகள், இயேசு கிறிஸ்துவில், கடவுளே நம் மனித குடும்பத்தின் மீதுள்ள அன்பினால் இந்த உலகில் ஒரு திருப்பயணியானார் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றும், எடுத்துக்காட்டினார்.

மதங்கள் எப்போதும் கல்வியுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன என்றும், கல்வி மற்றும் கல்வி சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் மத நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கினார். கடந்த காலத்தைப் போலவே, இக்காலத்திலும், நமது மதப் பாரம்பரியத்தின் ஞானம் மற்றும் மனிதாபிமானத்துடன், நமது உலகில் உலகளாவிய உடன்பிறந்த உறவை வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு புதுப்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைக்கு ஒரு தூண்டுதலாகவே நாம் இருக்க விரும்புகிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

Comment