No icon

திருத்தந்தை

பங்குத்தளம் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட இடம்

ஆசீர்வதிக்கப்பட்ட இடமான பங்குத்தளத்தில், அன்பு செய்யப்படுவதை நாம் உணர்கின்றோம் என்றும், நம்மைச் சந்திக்க வருபவர்கள் வரவேற்கும் புன்னகை, திறந்த மனம் மற்றும் கைகள், சந்திக்க ஆர்வமுள்ள கண்கள், அன்பு போன்றவற்றை நம்மிடம் காண விரும்புகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மார்ச் 25 ஆம் தேதி சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் மிலான் மறைமாவட்டம் ரோவில் உள்ள இரண்டு பங்குத்தள மக்கள் ஏறக்குறைய 2000 பேரைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்குத்தளப் பணிக்குழுக்களில் பணியாற்றும் அம்மக்களின் ஆர்வத்தையும் பாராட்டினார்.

தங்கள் சொந்த சுமையை சுமக்கும் தலத்திருஅவையில் உள்ள ஒவ்வொருவரும், அதை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளவும், குறைக்கவும், நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவைக்குத் தாராளமான மற்றும் பலனளிக்கும் வரலாற்றைக் கொண்டதும் ஆன்மிகம் நிறைந்ததுமான உயிரோட்டமுள்ள அம்புரோசியன் வழிபாட்டு முறை பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்தார்

பல உறுப்பினர்களாலான தலத்திரு அவை ஒவ்வொன்றும், பணிகள் மற்றும் அன்பினால் உயிர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் இவ்வகையான அழகும், வளமையும், ஒற்றுமையும் தான் இயேசுவை உலகிற்குக் கொண்டு வர உதவுகின்றன என்றும் நற்செய்தியை அறிவிக்கும் மிக வலிமைவாய்ந்த வழிமுறையும் இதுவே என்றும் கூறினார்.

உரோம் தலத்திரு அவை ஆயராக, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒன்றிணைந்து இப்பயணத்தைத் தொடங்குவோம் என்று தான் கூறியதை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உறவு, அன்பு மற்றும் நம்பிக்கையின் பாதை கொண்டு செயல்படுவதே தனது விருப்பம் என்றும் எடுத்துரைத்தார்.

உடன்பிறந்த உறவு மக்களை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்றது என்றும், உலகம் நம்முடன் முடிவடையவில்லை, நாளுக்கு நாள் ஒன்றிணைந்து நடப்பதன் வழியாக மட்டுமே நாம் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்றுதல், ஒருவர் மற்றவரைச் சந்தித்தல், அறிந்துகொள்ளுதல், வளப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றின் இடமாக தலத்திருஅவை அமைவதால் அது முக்கியமானது என்றும் எடுத்துரைத்தார்.

வெவ்வேறு தலைமுறையினர், பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நிலைமைகள், அனைத்திற்கும் தனித்துவம் வாய்ந்த ஒன்றைத் தலத்திருஅவைக் கொடுக்கிறது என்றும், இதை மறந்துவிட்டால் நமது எல்லைகள் சுருங்கி நாம் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஒன்றிணைந்து அன்புடன் நடக்கவேண்டும் என்றும், அன்பே எப்போதும் உங்களிடத்தில் முதலிடத்தைப் பெறட்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி நடவடிக்கைகள், சிறார் பள்ளிகள், குழுக்கள், கருத்தரங்கச் செயல்பாடுகள், ஏழை எளியவர்கள் மீது கவனம் செலுத்துதல், முதியவர்கள் மற்றும் தனிமையில் உள்ளவர்கள், குடும்பங்கள், இளம் தம்பதிகள், இசைக்குழு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பணிபுரியும் அம்மக்களுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

வறண்ட மற்றும் கடினமான பகுதிகளில், அன்பை விதைத்து, வாழும் பகுதியை நற்செய்தியின் பலன்கள் நிறைந்த, வளமான கிராமப்புறமாக மாற்றவும், குறிப்பாக, அன்பின் எல்லையை விரிவுபடுத்துதல், நம்பிக்கை ஏற்றுக்கொள்ளுதல், ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், ஒன்றாகச் செயல்படுதல் போன்றவற்றில் வளரவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.                 

Comment