மார்ச் -25 ஆம் தேதி சனிக்கிழமை
முறைகேடுகளுக்கு எதிரான நடைமுறையான " Vos estis lux mundi " வெளியீடு
- Author குடந்தை ஞானி --
- Saturday, 01 Apr, 2023
மார்ச் 25 ஆம் தேதி சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், motu proprio, அதாவது, சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறார் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பாலியல் முறைகேடுகளைத் தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றிற்கான (வோஸ் எஸ்டிஸ் லக்ஸ் முண்டி) " Vos estis lux mundi " என்ற ஏட்டின் புதுப்பிக்கப்பட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற ஒழுங்குமுறை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து நான்காண்டு சோதனை நடைமுறைகளுக்குப்பின், தலத்திரு அவை ஆயர்கள், திருப்பீடத்துறையின் தலைவர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னர், கத்தோலிக்க திரு அவைக்குள் பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும் திட்டவட்டமாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய விதிகள் அடங்கிய " Vos estis lux mundi "யின் புதிய பதிப்பு சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட முந்தைய பதிப்பிற்கு மாற்றாக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிமுறைகள், முறைகேடுகள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவிருப்பதையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட தலத்திரு அவையை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள ஆயர்கள், திரு அவை சமூகத்தின் உயர்அதிகாரிகள், திரு அவையின் அங்கீகாரம் பெற்ற அல்லது திரு அவையால் உருவாக்கப்பட்ட அனைத்துல அமைப்பின் உயர்அதிகாரிகள் ஆகியோரின் பாலின முறைகேடுகள் தொடர்புடையதாக இப்புதிய விதிகள் உள்ளன.
முறைகேடுகளுக்கு எதிரான நடைமுறைகளையொட்டி 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அறிமுகப்படுத்தப்பட்ட பிற ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுடன் ஒத்திணங்கிச் செல்லும்வகையில் வேறு பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, (சாக்ரமென்டோரம் சான்டிடாடிஸ் டுடேலா) " Sacramentorum sanctitatis tutela " என்ற motu proprio, திரு அவைச் சட்டப் புத்தகம் VIஇல் திருத்தங்கள்(2021 இன் சீர்திருத்தம்), மற்றும் திரு அவை தலைமை நிர்வாகத்தின் புதிய அரசியலமைப்புடன், " Praedicate Evangelium " 2022 இல் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கன.
புகாரளிப்பவர் மீது எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், இப்போது இந்தப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம் கூறும் நபர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் நற்பெயருக்கும் தனிப்பட்ட முறையில் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும், விசாரணைக்கு உட்பட்டவர்கள் தங்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் போது குற்றமற்றவர்கள் என்ற அனுமானம் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு கேட்கப்படும் பகுதியும் வலுப்படுத்தப்படுகிறது.
சிறார் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபருடன் பாலியல் நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்ட நிலையில், புதிய பதிப்பு, ஆறாவது கட்டளையான கொலை செய்யாதே என்பது பற்றியும் வலியுறுத்துகின்றது. முறைகேடுகள் குறித்து புகாரளிக்க உதவும் வகையில் வசதிகள் உருவாக்கப்படவேண்டும் எனவும், விசாரணையைத் தொடரும் பணி, சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் இடத்தின் ஆயரின் பணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயர்கள், திரு அவை பணித்துறையின் உயர் அதிகாரிகள், திரு அவை பன்னாட்டுச் சங்கங்களின் தலைவர்கள் ஆகிய அனைவரும் அவரவர் பணிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்கள் அறிந்திருக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்துகின்றது. இந்த ஆவணம், சிறார், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மட்டுமன்றி அருள்பணியாளர்களால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், பாலியல் முறைகேடுகள் மற்றும் வயதுக்கு வந்த அருள்பணித்துவ மாணவர்கள், நவதுறவியர் ஆகியோரின் முறைகேடுகளையும் உள்ளடக்கவேண்டும் என உரைக்கிறது.
Comment