ஏப்ரல் 14 முதல் அக்டோபர் 28
வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வையாளார் நேரம் நீட்டிப்பு
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 19 Apr, 2023
பகல் நேரம் அதிகமாக இருக்கும் இத்தாலியின் வசந்த காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் அக்டோபர் 28 வரை வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வையாளார் நேரத்தை நீட்டிப்பு செய்துள்ளதாக வத்திக்கான் அருங்காட்சியகத்தின் இயக்குனர் பார்பரா ஜத்தா அறிவித்தார். ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இச்செயல்பாடானது உரோம் நகரத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அருங்காட்சியகத்தின் எழிலை இரவு நேர ஒளியில் மக்கள் காண வாய்ப்பளிப்பதாகவும் உள்ளது என ஜத்தா அறிவித்தார்.
அமைதியான இரவு நேரங்களில் வானின் அழகை இரசிக்கவும் அதில் மூழ்கித் திளைக்கவும் விரும்புபவர்களுக்கு இது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும் என்றும், புனித பேதுரு பெருங்கோவிலின் கோபுர உச்சியில் சுடரும் நிலவொளியில் வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பொருள்கள் மின்னுவது கண்கொள்ளாக் காட்சியாகும் என்றும் ஜத்தா கூறியுள்ளார்.
இரவு நேரங்களில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இசை நிகழ்ச்சிகள் பல இத்தாலிய இசைக்குழுக்களாலும் இளையோராலும் நடத்தப்படுகின்றன என்றும், இவ்விசைக் கச்சேரிகளுக்கான நுழைவுக் கட்டணம் அருங்காட்சியகத்தின் நுழைக் கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் ஜத்தா தெரிவித்தார்.
இத்தாலியின் இலையுதிர் காலம் வரை தொடரும் இந்த கால நீட்டிப்பானது வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இறுதி நுழைவு உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.30 மணி வரை நீடித்து இரவு 10.30 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும் எனவும் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் வத்திக்கான் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
இணையதளத்தில் முன்பதிவு செய்வதன் வழியாக இரவு நேர இசைக் கச்சேரிகளில் பங்கேற்கலாம் என்றும், அன்றாட கடமைகள் செயல்பாடுகள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு இயற்கை அழகைக் காணவும் இசையில் மூழ்கி இரசிக்கவும் இக்கால நீட்டிப்பு மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் ஜத்தா கூறினார்.
Comment