No icon

வத்திக்கான் அருங்காட்சியகம்

வத்திக்கான் தோட்டத்தில் அன்னை மரியாவிற்கு மே மாத வணக்கம்

அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில் திருப்பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆன்மீகம், கலாச்சாரம் கொண்ட இயற்கையான வத்திக்கான் தோட்ட சுற்றுலாப் பயணத்தை வழங்குவதாக வத்திக்கான் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள வத்திக்கான் அருங்காட்சியகம், வத்திக்கான் தோட்டத்தில் உள்ள அன்னை மரியாவின் படங்கள் திரு உருவங்கள் போன்றவற்றை மக்கள் கண்டு தியானிக்கவும், இயற்கை எழில் நிறைந்த பசுமையான பாதையில் ஆன்மாவின் ஆற்றலைப் புதிப்பிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

வருகின்ற மே மாதம் 3 முதல் 31 வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் திருத்தந்தையின் வழக்கமான புதன் பொதுமறைக்கல்வி உரையின் முடிவிலும், மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வத்திக்கான் தோட்டம் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

திருத்தந்தையர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடமான வத்திக்கான் தோட்டம் பொதுமக்களின் வருகைக்காக மே மாதத்தில் திறக்கப்படுவது  திருத்தந்தையர்கள் அன்னை மரியாவை எவ்வாறு போற்றி வணங்கினார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதாகவும் உள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து, ஏராளமான, இயற்கைச் சுவடுகளைக் கொண்ட கன்னி மரியாவின் உருவங்கள், பழமையான பிரான்சில் உள்ள லூர்து மாதாவில் தொடங்கி இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சமீபத்திய மாதா வரை அனைத்து சிற்பங்கள் மற்றும் படங்களாலும் வத்திக்கான் தோட்டம் நிறைந்துள்ளது. பாத்திமா அன்னை, குவாடலூப் அன்னையின் உருவப்படத்தை அடிக்கடி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வணங்கி மகிழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 வயதிற்கு மேற்பட்ட சிறாரைக் கொண்ட குடும்பங்கள் உடல்நலன் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் இத்தாலியம் மற்றும் ஆங்கிலம் மொழியில் கொடுக்கப்படுகின்றன. வத்திக்கான் தோட்டத்திற்கான முன்பதிவிற்கு education.musei@scv.va என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்

Comment