No icon

அருள்பணி டென்னிஸ் குழந்தைசாமி

அன்னை மரியாவின் காட்சி தொடர்பான நிகழ்வுகளுக்கான கண்காணிப்பகம்

உலகில் அன்னை மரியாவின் காட்சி மற்றும் புதுமை நிகழ்வுகளுக்கான கண்காணிப்பகத்தை உருவாக்கி அதற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக PAMI எனப்படும் வத்திக்கானின் பன்னாட்டு மரியியல் நிறுவனத்தின் தலைவர் அருள்பணி ஸ்டெபனோ செச்சின் தெரிவித்தார் .

ஏப்ரல் 13 ஆம் தேதி வியாழனன்று வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள ஸ்டெபனோ செச்சின் அவர்கள், அன்னை மரியா தொடர்பான புதுமை நிகழ்வுகளுக்கான ஆய்வு, அங்கீகாரம், சரியான பரவல் ஆகியவற்றிற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்காக இக்கண்காணிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

அக்கண்காணிப்பகத்தின் மத்திய அறிவியல் குழு பொறுப்பாளர்களுள் ஒருவராக தமிழ்நாட்டைச் சார்ந்த மரியின் ஊழியர் சபை அருள்பணி டென்னிஸ் குழந்தைசாமி (..) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். புதுமை நிகழ்வுகளின் நம்பகத்தன்மை தொடர்பான திரு அவை அதிகாரத்தின் அறிவிப்புக்காக பல ஆலயங்கள் காத்திருக்கின்ற நிலையில் அதனைப் பகுப்பாய்வு செய்து விளக்குவதும் இக்கண்காணிப்பகத்தின் முக்கிய நோக்கம் என்றும், ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை PAMI தலைமையகத்தில் தனது முதல் கூட்டத்துடன் அதிகாரப்பூர்வமாக தனது நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் அருள்பணி ஸ்டெபனோ செச்சின் தெரிவித்தார்.

திரு அவையின் அன்னையான மரியா, இரக்கத்தின் தாயாக, அமைதியின் அரசியாகப் போற்றப்படுபவர் என்றும், அன்னையின் இத்தகைய ஒருங்கிணைந்த உயர் பண்புகளைக் குறைத்து மதிப்பிடுவது அச்சத்தையும் எதிர்ப்பையும் விதைப்பதால் சில வழக்குகளை கையாள்வதற்கு போதுமான தயாரிப்பு மற்றும் பயிற்சியை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் அருள்பணி ஸ்டெபனோ செச்சின் கூறினார்மத்திய அறிவியல் குழுக்கள் போன்று உள்ளூர் அறிவியல் குழுக்களும் அந்தந்த மாவட்ட அளவில் விரைவில் உருவாக்கப்படும் என்றும், ஒரு செயல்பாட்டு வலையமைப்பின் வரம்பை அதிகமாக நீட்டித்து செயல்படுவது, தேவைகள் அல்லது ஆதரவு கோரிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வு நடந்த இடத்தை சந்தித்து செயல்படுவது போன்றவற்றை இக்கண்காணிப்பகத்தால் செய்ய இயலும் என்றும் அருள்பணி ஸ்டெபனோ செச்சின் கூறினார்.

Comment