No icon

‘மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்’

உலக முதியோர் நாளுக்கான கருப்பொருள்

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார் (லூக்கா 1. 50) என்ற இறைவார்த்தையை தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும் வயது முதியோர்க்கான உலக நாளின் கருப்பொருளாக பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடப் பேராயம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் தேதி வியாழனன்று வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வுக்கான திருப்பீடப் பேராயம், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் முதியோர்களுக்கான 3வது உலக நாளைக் கொண்டாட தலத்திருஅவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இயேசுவின் தாத்தா பாட்டியான தூய சுவக்கீன் அன்னா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமைக் கொண்டாடப்படும் இந்நாள் 2021 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் பிறரால் மறக்கப்படுபவர்களாக இருக்கும் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள், தலைமுறைகளுக்கு இடையிலான இணைப்பாகவும், வாழ்க்கை மற்றும் நம்பிக்கையின் அனுபவத்தை இளையோர்க்கு அளிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் இந்நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளதாகவும் அப்பேராயம் தெரிவித்துள்ளது

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6 வரை லிஸ்பனில், ‘மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருக்கும் உலக இளையோர் நாளை முன்னிட்டு இக்கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இளவயதான மரியா முதிர்ந்த வயதுள்ள எலிசபெத்தை சந்திக்க விரைந்து சென்றது இளையோர் மற்றும் முதியோர் இடையிலான ஒன்றிப்பின் வலிமையை எடுத்துரைக்கின்றது என்றும் அப்பேராயம் தெரிவித்துள்ளது.

இந்நாளில், புனித பேதுரு பெருங்கோவிலில் திருநற்கருணை வழிபாட்டிற்கு தலைமை தாங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கிலும் உள்ள தலத்திருஅவைகள், மறைமாவட்டங்கள், அமைப்புக்கள், இயக்கங்கள் அந்தந்த தலத்திரு அவை ஆயர்களுடன் இணைந்து கொண்டாட அழைப்பு விடுப்பதாகவும் பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வுக்கான திருப்பீடப் பேராயம் தெரிவித்துள்ளது.

Comment