No icon

புதன் மறைக்கல்வியுரை

மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுகள்

நற்செய்தி அறிவிப்புக்கான பேரார்வம் குறித்த தன் புதன் பொது மறைக்கல்வித்தொடரில் சான்றுபகர்தல் என்ற உபதலைப்பில் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 19 ஆம் தேதி, புதன்கிழமை, மறைசாட்சிகள் குறித்து எடுத்துரைத்தார். முதலில், மத்தேயு நற்செய்தி 10ஆம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது. அதன் பின் தன் கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

அப்போஸ்தலிக்க ஆர்வம் குறித்த நம் தொடர் மறைக்கல்வி போதனையில் இன்று மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுகள் குறித்து நோக்குவோம். மறைசாட்சிகள் என்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும், மொழியிலும் காலத்திலும் நற்செய்திக்கு சான்று பகர்வதற்காக தங்கள் உயிரையும் தந்தவர்கள். “கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால், அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே, நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்” (1 யோவா 3:16)  என்று நாம் திருப்பலியில் சிறப்பிப்பதுபோல், அந்த அன்பிற்கு மறைசாட்சிகள் மிக உன்னத எடுத்துக்காட்டுகளாக இருந்தார்கள். நம்பிக்கைகளுக்கான சித்ரவதைகளின் காலத்தில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் விசுவாசத்திற்கு சான்று பகர தயாராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வார்த்தையில் கூறவேண்டுமானால், மறைசாட்சிகள் என்பவர்களோ, “மிக உயரிய கொடை மற்றும் அன்பின் மிக மேலான அடையாளம்” (லூமென் ஜென்சியும், 42).  தங்கள் விசுவாசத்திற்காக சித்ரவதைகளை அனுபவித்து உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை தொடக்கத் திரு அவைக்காலத்தில் இருந்ததைவிட நம்முடைய இக்காலத்தில் மிக அதிகமாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஏமன் நாட்டில் முதியோருடனும் மாற்றுத்திறனாளிகளுடனும் பணிபுரிந்துவந்த பிறன்பு மறைப்பணியாளர்களின் இரு குழுக்கள், அந்த நாட்டு உள்நாட்டுச் சண்டைகளின்போது மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டலாம். உலகார்ந்த ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியின் இறையரசிற்கான வருகைக்காகக் காத்திருக்கும் நமக்கு நற்செய்திக்கு சான்றுபகரும் ஆர்வத்தை மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டு  தூண்டுவதாக.

இவ்வாறு, மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டு குறித்து தன் புதன் மறைக்கல்வி போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.    

Comment