திருத்தந்தை பிரான்சிஸ்
கிறிஸ்துவில் துன்பம் கூட அன்பாக மாற்றப்படும்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 26 Apr, 2023
நவீன கால சிந்தனையில் நோய் மற்றும் இறுதிநிலை என்பது பெரும்பாலும் ஒரு இழப்பாகவும், மதிப்பற்றதாகவும், தொல்லையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இது எல்லா நிலையிலும் அகற்றப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 20, வியாழனன்று, ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெற வந்த பாப்பிறை விவிலியப் பணிக்குழுவின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்திற்கான கருப்பொருள் தன் இதயத்திற்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
‘விவிலியத்தில் நோய் மற்றும் துன்பம்’ என்ற தலைப்பில் நீங்கள் தேர்ந்துள்ள மையப்பொருள், நம்பிக்கையுடையவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் என அனைவருக்கும் சம்மந்தப்பட்டது என்றும், உண்மையில், பாவத்தால் காயப்பட்ட மனித இயல்பு, வரம்பு, பலவீனம் மற்றும் மரணம் ஆகியவற்றின் எதார்த்தத்தை தனக்குள் கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நோயை அனுபவிக்கும் மனிதர் தனது எண்ணங்களை கடவுளிடம் திருப்புகிறார். கண்ணீரின் வேளைகளில், அவர் தன்னை கடவுளிடம் ஒப்படைக்கிறார் (காண்க.திபா 38) எனவும், பலவீனத்தில் கடவுளிடம் தான் குணமடைய இறைவேண்டல் செய்கிறார் (காண்க திபா 6:3; எசா 38), மற்றும் சோதனையின் போது மனமாற்றம் பெறவேண்டி அடிக்கடி கடவுளிடம் திரும்புகிறார் (காண்க திபா 38:5, 12; 39:9; எசா 53:11). என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
புதிய ஏற்பாட்டில் இறைத்தந்தையின் அன்பு, அவரது பரிவிரக்கம், மன்னிப்பு மற்றும் பாவமுள்ள, இழந்த மற்றும் காயமடைந்த மனிதனைத் தேடுவதை வெளிப்படுத்துகிறார் அவரது ஒரே திருமகனாகிய இயேசு கிறிஸ்து என்றும், கிறிஸ்துவின் பொதுப் பணி என்பது, நோயாளர்களுடனான உறவின் வழியாக பெருமளவில் வெளிப்படுத்தப்படுகிறது என்றும் திருத்தந்தை விளக்கினார். (காண்க மத் 9:35; 4:23, மாற் 1:40-42; 2:10-12, மத் 8:5-15).
துல்லியமாக நோயாளர்களுக்காக இயேசு காட்டும் இரக்கம் மற்றும் நிகழ்த்தும் எண்ணற்ற குணப்படுத்துதல்கள் பணி, ’கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்’ (காண்க. லூக் 7:16) மற்றும், ’இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது’ (காண் லூக் 10:9) என்பதற்கான அடையாளமாக முன்வைக்கப்படுகிறது என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ’நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் (காண்க மத் 25:36) என்று அவர் கூறும்போது, அவருடைய தெய்வீக அடையாளத்தையும், உண்மை மெசியாவுக்குரிய அவருடைய பணியையும் (காண்க லூக் 7:20-23) மற்றும் பலவீனமானவர்கள் மீது அவர் கொண்ட அன்பையும் வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
இந்தத் துயரத்தின் உச்சம் கல்வாரியில் நிகழ்கிறது என்றும், இதனால் கிறிஸ்துவின் சிலுவை கடவுளின் ஒன்றிப்பின் சிறந்த அடையாளமாக மாறும் அதேவேளையில், மீட்பின் பணியில் நாம் அவருடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு, கிறிஸ்துவில் துன்பம் கூட அன்பாக மாற்றப்பட்டு இவ்வுலகின் முடிவு உயிர்த்தெழுதல் மற்றும் மீட்பின் நம்பிக்கையாக மாறுகிறது என்று திருவெளிப்பாட்டின் ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் அடிப்படையில், ஒரு கிறிஸ்தவருக்கு பலவீனம் கூட ஒன்றிப்பின் சிறந்ததொரு கொடையாக அமைகிறது என்றும், இதனால் கடவுள் நமது பலவீனத்தின் அனுபவத்தின் வழியாக துல்லியமாக அவரது நன்மையின் முழுமையில் நம்மை பங்குபெற வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.
நோய் என்ற அனுபவம், கடவுளின் வழிகளான நெருக்கம், பரிவிரக்கம், மென்மை ஆகியவற்றின் வழியாக மனித மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமையை வாழ கற்றுக்கொடுக்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல சமாரியர் உவமையை எடுத்துக்காட்டி இதுவே பொதுவாழ்வுக்குக்கான நன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்
Comment