No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவுடன் சிறிது நேரத்தை செலவிட கற்றுக்கொள்வோம்

அனைத்துப் பொருட்களின் வித்தியாசமானக் கோணங்களை நமக்குக் கற்றுத்தரும் இயேசுவுடன் ஒவ்வொரு நாளும், இரவு படுக்கைக்கு முன்னர் சிறிது நேரத்தைச் செலவிட கற்றுக்கொள்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார். ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் செல்லும் வழியில் இரு சீடர்கள், உயிர்த்த இயேசுவைச் சந்தித்த நிகழ்வு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

எருசலேமில் இருந்து சென்ற சீடர்கள் தங்களுடன் நடந்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில், இறைவார்த்தையின் ஒளியில் அனைத்து நிகழ்வுகளுக்கும் புது கண்ணோட்டத்தை வழங்கி அவர்களை ஆறுதல்படுத்திய இயேசுவின் செயலை திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

இந்த சீடர்களைப் போல் நாமும் நம் வாழ்வு நிகழ்வுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொணர்ந்து, துன்ப துயர வேளைகளை இயேசுவுடன் பகிரும்போது அவரும் நம்முடன் உடனிருப்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளிடம் கூறினார். ஒவ்வொரு நாள் மாலையிலும் நாம் நம் தினசரி நிகழ்வுகளின் நினைவுகளை இயேசுவுடன் பகிரும்போது அவைகளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இயேசு வழங்கும் உண்மையால் நம்மைக் காயப்படுத்த நம்மை நாம் அனுமதிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் இரவு படுக்கைக்கு முன்னர் நம் மனக்கண்முன் கொணர்ந்து, நம் செயல்பாடுகளில் அன்பு இருந்ததா என்ற கேள்வியைக் கேட்டு, நம் வீழ்ச்சிகள், துயர்கள், சந்தேகங்கள், அச்சங்கள் ஆகியவைகளை இயேசுவின் முன்வைக்கும்போது, நம்மை ஊக்கப்படுத்தும் புதிய வழிகளை அவர் நமக்குத் திறக்கக் காண்போம் என தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார்.              

Comment