திருத்தந்தை பிரான்சிஸ்
பாலியல் முறைகேடுகள் நம் உலகில் கண்ணீரை வரவழைத்துள்ளன
- Author குடந்தை ஞானி --
- Friday, 12 May, 2023
திருநிலையினர் குழுவால் (Clergy) சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு மற்றும் திருஅவைத் தலைவர்களால் அதன் தவறான நிர்வாகம் ஆகியவை நமது காலத்தில் திருஅவைக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மே 5 ஆம் தேதி வெள்ளியன்று, சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட அவையினருக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் தீமையைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் சரியாகச் செயல்படத் தவறியது கடவுளின் அன்பிற்குரிய நமது சாட்சிய வாழ்வை சிதைத்துள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.
இன்று திருஅவையில் நடக்கும் பாலியல் முறைகேடுகளின் எதார்த்தத்தால் நான் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று யாரும் நேர்மையாகச் சொல்ல முடியாது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் பணியில், இந்தப் பிரச்சனையின் பல அம்சங்களைப் பற்றி நீங்கள் பேசும்போது, பின்வரும் மூன்று கொள்கைகளை நீங்கள் மனதில் வைத்து, அவற்றைப் ஒப்புரவு ஆன்மீகத்தின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்று தான் விரும்புகிறேன் என்றும் கூறினார்.
பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்படுவோர் மத்தியில் முழு அர்ப்பணமுடன் பணியாற்ற தங்களை அர்பணித்துள்ள அவர்களிடம், சோர்வடைய வேண்டாம், புதிய வாழ்வைக் கட்டியெழுப்புங்கள் மற்றும் இளகிய மனம் கொண்டிருங்கள் என மூன்று முக்கியமான காரியங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறினார்.
சோர்வடைய வேண்டாம் முன்னேறுங்கள்
முதலாவதாக, உயிருக்கு காயம் ஏற்படும் வேளைகளில், நம்பிக்கையை விரக்தியிலிருந்தும், வாழ்க்கையை மரணத்திலிருந்தும் வெளியே கொண்டு வருவதற்கான கடவுளின் படைப்பாற்றலை நினைவுகூர நாம் அழைக்கப்படுகிறோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலியல் முறைகேடு காரணமாக பலர் உணரும் பயங்கரமான இழப்பு, சில வேளைகளில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகத் தோன்றும் என்றும், திருஅவையின் தலைவர்கள் கூட, இக்காரியத்தில் செயல்படத் தவறியதற்காக அவர்கள் அவமானமும் வருத்தமும் அடைகின்றனர் என்றும் உரைத்தார்.
பாலியல் முறைகேடு என்னும் இந்த ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம், அதிலிருந்து வெளியே வாருங்கள் என்றும், நீங்கள் சந்திப்பவர்கள் மற்றும் உங்களுடன் இதுகுறித்துப் பகிர்ந்துகொள்பவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காரியத்தில் நல்ல மாற்றம் வருவதாகத் தோன்றும்போது சோர்வடைய வேண்டாம். விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
புதிய வாழ்வைக் கட்டியெழுப்ப உதவுங்கள்
இரண்டாவதாக, பாலியல் முறைகேடுகள் நம் உலகில் கண்ணீரை வரவழைத்துள்ளன, திருஅவையில் மட்டுமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பாலியல் முறைகேடுகள் கூட இன்னும் தங்கள் வாழ்க்கையில் தடைகளையும் விரிசல்களையும் உருவாக்குகின்றன என்று பாதிக்கப்பட்டவர்களில் பலர் வருத்தப்படுகிறார்கள் என்றும் தனது கவலையை திருத்தந்தை பதிவு செய்தார்.
மேலும் பாலியல் முறைகேடுகளின் விளைவுகள் வாழ்க்கைத் துணைவர்களிடையே, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையே, சகோதரர் சகோதரிகளுக்கிடையே, நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே ஏற்படலாம் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பாலியல் முறைகேடுகள் சமூகங்களை சிதைப்பதுடன, மக்களின் இதயங்களிலும், தங்களுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
நமது மனித வாழ்க்கை பிளவுபட வேண்டும் என்பதற்காக அல்ல, அல்லது, உடைந்தது உடைந்ததாகவே இருக்கட்டும் என்று கருதப்படுவதற்காகவும் அல்ல. ஆகவே, வாழ்க்கை எங்கே உடைப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டறியும்போது, அதனை மீண்டும் இணைக்க முடியும் என்றும் நம்பிக்கைக்கொள்ளுங்கள் என்றும், உடைந்த துண்டுகளை ஒன்றுசேர்த்து புதியதொரு வாழ்வைக் கட்டியெழுப்ப உதவுங்கள் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார்.
இளகிய மனதுடன் செயல்படுங்கள்
மூன்றாவதாக, கடவுளின் பொருட்டு மரியாதையையும் இரக்க உணர்வையும் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் செயல்களில் இளகிய மனதுடன் இருங்கள் என்றும், ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள் (காண். கலா. 6:1-2), குறை கூறாமல், ஆனால், திருஅவையில் இந்த இழப்பீட்டுத் தருணம் மீட்பின் வரலாற்றில் மற்றொரு புதிய நிலைக்கு வழி வகுக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comment