பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயண விவரம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
திருத்தந்தை பிரான்சிஸ், மே மாதம் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மே 5ஆம் தேதி காலை உரோம் நேரம் 7 மணிக்கு உரோமையின் ப்யூமுச்சினோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரண்டு மணிநேரம் பயணித்து காலை 10 மணிக்கு பல்கேரியாவின் சோஃபியா நகர் விமானதளத்தை அடைவார்.
அன்று காலையில் அரசு அதிகாரிகளை சந்தித்தபின், பிற்பகலில் புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் அவர்களின் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பேராலயம் சென்று செபித்து அன்று மாலையே விசுவாசிகளுக்கான திருப்பலியை கினாஸ் அலெக்சாண்டர் சதுக்கத்தில் நிறைவேற்றுவார்.
மே 6ஆம் தேதி திருத்தந்தை புலம்பெயர்ந்த மக்கள் வாழும் ஒரு முகாமிற்குச் சென்று அங்குள்ள அகதிகளைச் சந்திக்கிறார். பின், ரக்கோவ்கை செல்லும் திருத்தந்தை, அங்கு புது நன்மை வழங்கும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மதிய உணவை பல்கேரிய நாட்டு ஆயர்களுடன் அருந்துகிறார். பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவச் சமுகத்தைச் சந்தித்து உரையாடுவார். அன்று மாலை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதிக் கான கருத்துப் பரிமாற்றங்களில் பங்குபெறுவார்.
தன் மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளான மே 7 ஆம் தேதி, செவ்வாயன்று சோஃபியா நகரிலிருந்து விடைபெற்று, வட மாசிடோனியா செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ், அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப்பின், புனித அன்னை தெரேசா நினைவிடத்திற்கு, துறவு சபைகளின் அதிபர்களுடன் செல்வதுடன், அங்கு ஏழையர் சமுதாயத்தை சந்தித்தும் உரையாடுவார்.
மே 7 ஆம் தேதி, உள்ளூர் நேரம் காலை 11.30 மணிக்கு மாசிடோனியா சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகலில் பிற கிறிஸ்தவ சபைகள், பிற மதத்தலைவர்கள், இளையோர் சமுதாயம் ஆகியோரைச் சந்தித்து உரையாடும் திருத்தந்தை, பின்னர் அருள்பணியாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் துறவறத்தாரைச் சந்தித்து உரையாடுவார்.
அன்று மாலையே வட மாசிடோனியா விலிருந்து புறப்படும் திருத்தந்தை, உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு உரோம் நகர் வந்தடைவார். இதனை வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண் டாம்“ என்ற விருதுவாக்குடன் திருத்தந்தையின் இத்திருப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இப்
பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச் சினையில், நாட்டுக் கொடி, திருத்தந்தையின் ஆசி வழங்கும் உருவம், மற்றும் அன்னை தெரேசாவின் துறவு சபையின் அடையாளமாக இருக்கும் நீல நிறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. (இது குறித்த செய்திகள் அடுத்துவரும் இதழில் இடம்பெறும்).
Comment