காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
புதிய அருள்பணியாளர்களே!
காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
- திருத்தந்தை
மே மாதம் 12 ஆம் தேதி பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இறையழைத்தல் ஞாயிறு அன்று காலை 9.15 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், 19 திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தினார்.
பணிவிடை பெறுவதற்கல்ல, மாறாக, பணிவிடைபுரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொண்டவர்களாக, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என, புதிதாக திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
மேலும் இறைத்தந்தையைப்போல், அருள்பணியாளர்களும், இரக்கமுள்ளவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நீங்கள் இலவசமாகப் பெற்ற அனைத்தையும் இலவசமாகவே வழங்குங்கள் என்று கூறிய இயேசுவின் குரலுக்கு செவிசாய்த்தவர்களாகவும், ஆயர்களுடனும், உடன் அருள்பணியாளர்களுடனும், இறைமக்களுடனும் செபத்தில் ஒன்றித்திருப்பவர்களாகவும் வாழ அருள்பணியாளர் அழைப்பு பெற்றிருப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார் .
திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்ட 19 திருத்தொண்டர்களும், இத்தாலி, ஹெயிட்டி, பெரு, ஜப்பான் மற்றும் குரோவேஷியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பாஸ்கா கால நான்காம் ஞாயிறாகிய, நல்லாயன் ஞாயிறன்று, திருத்தந்தையர் ஒவ்வோர் ஆண்டும், திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகின்றனர்.
புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment