No icon

சென்டேசிமுஸ் அனூஸ் பாப்பிறை அறக்கட்டளையின் விருது

‘நூறாவது ஆண்டு’ என்று பொருள்படும் Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை, “பொருளாதாரமும், சமுதாய மும்“ என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு விருதை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் பேராசிரியர் மேரி ஹிர்ஸ்ஃபீல்டு அவர்களுக்கு, மே 29 ஆம் தேதி வழங்கி கௌரவித்தது. 
இந்த விருதுக்கென உலகின் 12 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டிருந்த 45 நூல்களில், “அக்குவினாசும் வணிகச் சந்தையும்: மனிதாபிமானப் பொருளாதாரம் நோக்கி” என்ற பெயரில், ஹிர்ஸ்ஃபீல்டு எழுதியுள்ள நூல், இவ்வாண்டின் விருதுக்கென தெரிவு செய்யப்பட்டது.
இந்த விருதைத் தீர்மானிக்கும் குழுவுக்கு தலைவராகப் பணியாற்றிய ஜெர்மன் கர்தினால் ரெயின்ஹார்டு மார்க்ஸ், இவ்விருது வழங்கும் விழாவில் உரையாற்றுகையில், திரு அவையில், சமுதாயச் சிந்தனைகள், திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களின் காலத்திலிருந்து எழுந்தது என்பது பொதுவான கருத்து என்றாலும், புனித தாமஸ் அக்குவினாஸ் வாழ்ந்த காலம் முதல், திருஅவை, மனித சமுதாயத்தைக் குறித்த எண்ணங்களை வெளியிட்டு வந்துள்ளது என்று கூறினார்.
இன்றைய உலகம், பொருளாதாரத்தை, வெறும் எண்ணிக்கைகள் அடங்கிய கண்ணோட்டத்துடன் சிந்திக்கும் வேளையில், கத்தோலிக்கத் திருஅவை, பொருளாதாரத்தை யும், மனிதர்களையும் இணைத்துச் சிந்திக்க நம்மைத் தூண்டுகிறது என்று நூறாவது ஆண்டு’ பாப்பிறை அறக் கட்டளையின் தலைவர், பேராசிரியர், அன்னா மரியா தரான்டோலா இவ்விழாவில் உரையாற்றினார்.
இவ்விருதைப் பெற்றுக்கொண்ட பேராசியர் ஹிர்ஸ்ஃபீல்டு, பொருளாதாரத்தைக் குறித்துத்தான் பல ஆண்டுகள் சிந்தித்து வந்த போதெல்லாம், தனக்குள் கவலைகள் அதிகம் உருவாயின என்றும், 20 ஆண்டுகளுக்கு முன், தான் கிறிஸ்தவ மறையைத் தழுவியபின், தன் கவலைகளை, நம்பிக்கைகளாக மாற்ற முடிந்தது என்றும், அந்த நம்பிக்கையை, தன் ஆசிரியப் பணி வழியே மற்றவர்களுக்குப் பகிர முடிகிறது என்றும், எடுத்துரைத்தார்.
திருஅவையின் சமுதாய எண்ணங்களை வளர்க்கும் நோக்கத்துடன் திருத்தந்தை புனித 2 ஆம் ஜான்பால் அவர்களால் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘நூறாவது ஆண்டு’ பாப்பிறை அறக்கட்டளை, 2018 ஆம் ஆண்டு தன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.

Comment