No icon

திருத்தந்தை வழங்கிய “எங்கள் தந்தையே” உரை

வணக்கத்திற்குரிய அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த புனித ஆலயத்தில், நாம் ஒன்றிணைந்து வந்துள்ளதற்கு நன்றி கூறுகிறேன். சகோதரர்களான அந்திரேயா, மற்றும் பேதுருவை, அவர்களது வலையை விட்டு விட்டு, மனிதரைப் பிடிப்பவர்களாக வரும்படி, இயேசு அழைத்தார். (காண்க. மாற்கு 1 : 16-17) ஒரு சகோதரரை அழைத்துவிட்டு, மற்றொரு சகோதரரை அழைக்காமல் விட்டிருந்தால் அது நிறைவாக இருந்திருக்காது. இன்று, இந்நாட்டின் இதயத்தில் இணைந்து நின்று, ஆண்டவரின் செபத்தை எழுப்புகிறோம்.
ஒவ்வொரு முறையும் “எங்கள் தந்தையே” என்று நாம் கூறும்போது, ‘தந்தை’ என்ற சொல், ‘எங்கள்’ என்ற சொல்லிலிருந்து பிரிந்து நிற்க இயலாது என்பதைக் கூறுகிறோம். ‘என்னது’ என்ற நிலையிலிருந்து, ‘எங்களது’ என்ற நிலைக்கு இந்த செபம் நம்மை அழைக்கிறது.
தந்தையே, என் சகோதரரை, சகோதரியை, அனைத்திற்கும் மேலாக, உமது மகனாக, மகளாக வரவேற்க எங்களுக்கு உதவியருளும். மூத்த மகனைப் போல், அடுத்தவர் என்ற கொடையை மறந்துபோய்விடும் அளவு, எங்களைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிராமல் இருக்க உதவியருளும். நல்லோர் மேலும், தீயோர் மேலும், உதித்தெழும் கதிரவனையும், நேர்மையுள்ளோர் மேலும், நேர்மையற்றோர் மேலும், பெய்யும் மழையையும் (காண்க, மத். 5:45) ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’, அமைதியையும், நல்லுணர்வையும் இவ்வுலகில் நாங்கள் இறைஞ்சுகிறோம்.
நாங்கள் ஆற்றும் அனைத்துச் செயல்களிலும் ‘உமது பெயர் தூயது எனப் போற்றப்படுவதற்கு’ விழைகிறோம். எங்கள் பெயர் அல்ல, உமது பெயர் போற்றப்படுவதாக. கடந்துசெல்லும் எத்தனையோ காரியங்களுக்காக நாங்கள் வேண்டுகிறோம். கடந்துசெல்லும் அனைத்தின் நடுவே, உமது பிரசன்னம் ஒன்றே எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நாங்கள் உணரச் செய்தருளும்.
‘உமது ஆட்சி வருவதை’ நாங்கள் எதிர் பார்த்திருக்கிறோம். உமது அரசுக்கு எதிரான முறையில் இயங்கும் இவ்வுலகச் செயல்பாடுகளிலும், நுகர்வுக் கலாச்சாரத்திலும் நாங்களும் மூழ்கிவிடாமல் காத்தருளும். எமது விருப்பம் அல்ல, மாறாக, ‘உமது திருவுளம் நிறைவேறுக’.
“வாழ்வு தரும் உணவாக” விளங்கும் கிறிஸ்து என்ற அப்பம் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவை. எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு வழங்கும் அதே நேரம், நாங்கள், எங்கள் சகோதரர், சகோதரிகளுக்கு கரம் நீட்டும் சக்தியைத் தந்தருளும். கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற அப்பத்தை பயிரிட்டு, அதை பொறுமையுடன் வளர்க்கும் சக்தியைத் தாரும். உணவைத் தாரும் என்று நாங்கள் வேண்டும் ஒவ்வொரு நேரமும், உணவின்றி தவிப்போரையும், அந்தப் பட்டினியைத் தீர்க்க விரும்பாமல், அன்புப் பட்டினியால் அவதியுறும் எங்கள் அக்கறையற்ற நிலையையும் இந்த மன்றாட்டு நினைவுபடுத்துகிறது.
எங்கள் குற்றங்களை மன்னியும் என்று வேண்டும் வேளையில், நாங்கள் அடுத்தவரின் குற்றங்களை மன்னிக்கும் மனத்தையும் வேண்டுகிறோம். எங்கள் கடந்த காலக் காயங்களை மறந்து, நிகழ்காலத்தை அணைத்துக்கொள்ளும் வரம் தாரும்.
எங்களை நாங்களே சுயநலத்தில் பூட்டி வைத்துக்கொள்ளும்போது, அத்தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் எங்கள் சகோதரரையும், சகோதரியையும் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பயணம் செய்வதற்கு உதவி செய்தருளும், எங்கள் தந்தையே, ஆமென்.

Comment