போலந்து கிறிஸ்தவத்தை தழுவிய இடத்தில் இளையோர் கூட்டம்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 26 Jun, 2019
போலந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளையோரும், சில ஐரோப்பிய நாடுகள், மற்றும், பனாமாவைச் சேர்ந்த இளையோரும் நடத்திய கூட்டம் ஒன்றிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், இயேசுவின் குரலுக்குக் கவனமுடன் செவிமடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
போலந்தின் லெட்னிக்கா திறந்த வெளியில், ஜூன் 01 ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில், செபம், மற்றும் ஆடல் பாடலுடன் ஏறத்தாழ அறுபதாயிரம் இளையோர் கலந்துகொண்டனர். “எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என இயேசுவிடம், புனித பேதுரு கூறிய பதில், இந்த இளையோர் கூட்டத்திற்குத் தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் உரை வழங்கிய போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஸ்தனிஸ்லாஸ் காடேக்கி, அனைத்து விதமான அன்புக்கு ஆதாரமாகவும், உரமூட்டுவதாகவும் கிறிஸ்துவின் அன்பு உள்ளது என்றார். இளையோருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை மையப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், நள்ளிரவிலும், ஆடல், பாடல் மற்றும் செபத்துடன் செலவிட்டனர். இக்கூட்டத்தில், திருநற்கருணைமுன் மௌனமாகச் செபித்தல், திருப்பலி போன்றவைகளும் இடம்பெற்றன.
போலந்து நாட்டில், முதன்முதலில் திருமுழுக்கு இடம்பெற்ற லெட்னிக்கா பகுதியில், கடந்த 23 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் இந்த இளையோர் கூட்டம், அடுத்த ஆண்டில், ஜூன் மாதம் 6 ஆம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comment