No icon

பிறரன்பு நடவடிக்கைகளில் முதலிடம் பெறுவோர்

இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவையொட்டி, புலம்பெயர்ந்தோருடன், ஜூன் 8 ஆம் தேதி, வத்திக்கானில் நிறைவேற்றிய திருப்பலியில், ‘கடவுளே நம்மை நோக்கி இறங்கி வருகிறார், அவரே நம்மை மீட்கிறார்’, என்ற கருத்தை மையமாக வைத்து திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை வழங்கினார்.
மீட்பையும், விடுதலையையும் குறித்துப் பேசும் இன்றைய திருப்பலி வாசகங்களில், பெயேர்செபா விலிருந்து கரானை நோக்கிச் சென்ற யாக்கோபு கண்ட கனவு குறித்து முதல் வாசகத்தில் கேட்டோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நிலத்தில் ஊன்றியிருந்த ஏணியின் மறுமுனை வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்க, இறைவனே அங்கிருந்து யாக்கோபிடம் பேசியதைச் சுட்டிக்காட்டினார்.
பாபேல் கோபுரத்தைக் கட்டி அதன் வழியாக வானகத்திற்கு ஏறிச் செல்ல முயன்ற மக்களின் எண்ண ஓட்டத்திற்கு நேர் மாறாக, இறைவனே மேலிருந்து கீழிறங்கி வந்தது, மனித குலத்திற்கும் இறைவனுக்கும் இடையே நிலவும் நெருங்கிய தொடர்பின் வெளிப்பாடாக இருந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். 
இன்றைய நற்செய்தியில், தொழுகைக்கூடத் தலைவரின் மகளுக்கு இயேசு உயிர் கொடுத்ததையும், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அந்நோயிலிருந்து விடுதலை பெற்றதையும் வாசிக்கும் நாம், நோயிலிருந்தும் சாவிலிருந்தும் இயேசு விடுவித்ததைக் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, வாழ்வில் ஓரந்தள்ளப்பட்டுள்ள மக்களுக்குப் பிறரன்பு நடவடிக்கைகளில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என இயேசு தன் சீடர்களுக்குக் காண்பிக்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.
லாம்பதூசா தீவுக்கு மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொள்ளப்பட்டதன் 6ஆம் ஆண்டை நினைவுகூரும் இவ்வேளையில், பாலைவனங்களில் உயிரிழப்போர், தடுப்பு மையங்களில் சித்ரவதைப்படுவோர், கடலில் பலியாவோர் ஆகியோரை எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கூறினார். 
அத்துடன், நம்மிடையே ஒடுக்கப்பட்டோர், பாகுபாட்டுடன் நடத்தப்படுவோர், உரிமை மீறல், சுரண்டல், கைவிடப்படுதல் ஆகிய கொடுமைகளால் துன்புறுவோர், மற்றும், ஏழைகள், ஆகியோரை அன்பு கூர்ந்து காக்கவேண்டிய இயேசுவின் விண்ணப்பத்தை நிறைவேற்றுவோம் என்ற அழைப்பையும் தன் மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ்,  கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற 2013 ஆம் ஆண்டு, உரோம் நகரை விட்டு வெளியே சென்ற முதல் பயணமாக, ஜூலை 8 ஆம் தேதி, லாம்பதூசா தீவுக்கு மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்டார்.

Comment