Pope Francis
தம் செபத்தில், திருப்பலியில் துன்புறுவோருடன் இணைந்திருக்கும் திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொருநாள் காலையிலும் 7 மணிக்கு நிறைவேற்றும் திருப்பலிகளில், வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு தன் திருப்பலியைத் துவக்குகிறார்.
ஒவ்வொருநாள் திருப்பலியின் கருத்துக்கள்
அவரவர் இல்லங்களில் தங்கியிருக்கவேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகியிருக்கும் சூழலில், அவர்களை ஒன்றிணைக்க உதவிவரும் ஊடகப் பணியாளர்களுக்கு, குறிப்பாக, இந்நாள்களில் வீடுகளிலேயே தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள ஊடகப் பணியாளர்களுக்கு செபிப்போம் என்று, ஏப்ரல் ஒன்றாம் தேதி, புதன் திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதி செவ்வாயன்று, வீடுகளின்றி தெருக்களில் தங்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கும் மனிதருக்காக செபிப்போம் என்றும், அவர்களின் நிலையை மற்றவர் உணரவும், திருஅவை அவர்களை வரவேற்கவும் செபிப்போம் என்றும், திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.
தனிமையில், அச்சத்தில் வாழ்வோருக்காக...
மார்ச் 29, ஞாயிறன்று ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில், தனிமையில் தவிப்போருக்காக, குறிப்பாக, தனிமைப்படுத்தப்பட்டு, அச்சத்தில் வாழும் முதியோருக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை, அதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை, (மார்ச் 28) அன்று, இந்த கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், பசியில் வாடும் வறியோருக்காக செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
’ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீர்
கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இவ்வுலகைக் காக்கவேண்டுமென்ற கருத்துடன், மார்ச் 27 ஆம் தேதி வெள்ளியன்று, மாலை 6 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஒரு சிறப்பு மாலை வழிபாட்டை நடத்தி, அந்த வழிபாட்டின் இறுதியில் நிகழ்ந்த திருநற்கருணை ஆராதனையைத் தொடர்ந்து, திருநற்கருணைப் பேழையைக் கொண்டு, ’ஊர்பி எத் ஓர்பி’ என்ற சிறப்பு ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment