Vatican raises COVID FUND
கோவிட்-19 - வத்திகானில் அவசரக்கால நிதி அமைப்பு
- Author Fr.Gnani Raj Lazar --
- Tuesday, 07 Apr, 2020
கோவிட்-19 தொற்றுக்கிருமியின் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கும் வறியோருக்கு உதவும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் என்ற அமைப்பின் வழியே, ஓர் அவசரக்கால நிதியை உருவாக்கியுள்ளார்.
வறுமை நிறைந்த ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா ஆகிய கண்டங்களைச் சார்ந்த நாடுகளையும், அமேசான் பகுதியையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அவசரக்கால நிதிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 7,50,000 டாலர்கள், அதாவது, ரூ57 கோடி ரூபாயை, முதல் கட்டமாக வழங்கியுள்ளார்.
திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த நிதித்திட்டத்தைப் பெரிதும் வரவேற்ற, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில், நலப்பணிகளில் முன்னணி நிலையில் பணியாற்றுவோர், அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் என்பதை மனதில் வைத்து, திருத்தந்தை இத்திட்டத்தை உருவாக்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
ஆப்ரிக்க கண்டத்தில் மட்டும், கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் 7,274 மருத்துவமனைகள் மற்றும், 2,346 முதியோர் இல்லங்களில், 74,000த்திற்கும் அதிகமான அருள் சகோதரிகளும், 46,000த்திற்கும் அதிகமான அருள்பணியாளர்களும் பணியாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், மனிதர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது, நற்செய்தி அறிவிப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதை திருஅவை எப்போதும் உணர்ந்து செயலாற்றுகிறது என்று கூறினார்.
திருத்தந்தையின் பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் அமைப்பின் வழியே, ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா மற்றும் அமேசான் பகுதிகளில் உள்ள 1,110த்திற்கும் அதிகமான மறைமாவட்டங்கள் பயனடைந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அவசரக்கால நிதிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர்,
IT84F0200805075000102456047 என்ற வங்கிக்கணக்கு எண்ணுக்கு தங்கள் நிதியை அனுப்பலாம்.
Comment