Cardinal Peter Turkson
கோவிட் 19-ன் பின்விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் -கர்தினால் பீட்டர் டர்க்சன்
கொரோனா தொற்றுக்கிருமி பரவல் சூழலில், தலத்திருஅவைகள், மக்களின் வாழ்வைக் காப்பாற்றவும், கடும் வறுமையிலுள்ள மக்களுக்கு உதவுவதற்குமென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, கோவிட் 19 திட்டக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளது என்று அந்த அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.
இது பற்றி வத்திக்கான் செய்தித்துறையிடம் பகிர்ந்துகொண்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், கோவிட்19 நெருக்கடி நிலையில், திருஅவையின் அன்பையும், அக்கறையையும் முழு மனித குடும்பத்தின் மீது வெளிப்படுத்துவதற்கென, இத்தகைய ஒரு திட்டக்குழுவை உருவாக்குமாறு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார் என்று கூறினார்.
குறிப்பாக, கோவிட் 19-ன் பின்விளைவுகளால், வருங்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும், சமுதாய-பொருளாதார மற்றும், கலாச்சார சவால்கள் குறித்து ஆய்வுசெய்வதற்கும், அவற்றை எதிர்கொள்ள வழிகாட்டுதல்களைப் பரிந்துரைப்பதற்குமென, திருப்பீட தலைமையகத்திலுள்ள மற்ற அவைகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இந்த திட்டக்குழுவை உருவாக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தையின் வேண்டுகோளின்படி, ஐந்து விதமான பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஆற்றும் பணிகள் குறித்த விவரங்களை அவரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.
கொரோனா தொற்றுக்கிருமியின் பின்விளைவுகளை எதிர்கொள்வதில், உலகெங்கும் திருஅவை முன்னணியில் நிற்கின்றது என்றும், நலவாழ்வு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தைப் பொறுத்தவரை, குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதையும், கர்தினால் டர்க்சன் அவர்கள் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை உருவாக்கியுள்ள திட்டக்குழுவில் முதல் பணிக்குழு, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, வத்திக்கான் மருந்தகம், நற்செய்தி அறிவிப்பு பேராயம், திருப்பீட தர்மச் செயல்கள் அலுவலகம் போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் பிறரன்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் என்றும், சுற்றுச்சூழல், பொருளாதாரம், தொழில், நலவாழ்வு, அரசியல், சமூகத்தொடர்பு, பாதுகாப்பு போன்ற துறைகளில் இடம்பெறும் ஆய்வுகளை, இரண்டாவது குழு ஒருங்கிணைக்கும் என்றும் கர்தினால் டர்க்சன் விவரித்தார்.
மூன்றாவது பணிக்குழு, கோவிட் 19க்கு பின்னுள்ள உலகின் நிலைக்கு, உண்மையான மற்றும், நம்பகமான வழிகளில் உதவுவது குறித்து, தலத்திருஅவைகளோடு சேர்ந்து, தகவல் தொடர்புகளை ஊக்குவிக்கும் எனவும், நான்காவது குழு, திருப்பீட செயலகத்தின் வெளியுறவுத் துறை, நாடுகளோடு ஆற்றும் பணிகளுக்கு ஆதரவு வழங்கும் எனவும், ஐந்தாவது குழு, மற்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளுடன் இணைந்து, தலத்திருஅவைகளுக்கு நிதி உதவி கிடைப்பதை ஒருங்கிணைக்கும் எனவும் கர்தினால் டர்க்சன் எடுத்துரைத்தார்.
Comment