Fr.Federico Lombardi
’நிறைந்து வழியும் சதுக்கமும், காலியான சதுக்கமும்’
அண்மைய நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திவரும் வழிபாடுகள், திருப்பலிகள் ஆகியவற்றில், இத்தாலியிலும், உலகிலும் உள்ள பல்லாயிரம் மக்கள் பங்கேற்று வருகின்றனர் என்று, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர் அருள்பணி பெடரிக்கோ லம்பார்தி ( Federico Lombardi) அவர்கள் கூறியுள்ளார்.
"நெருக்கடி நிலையின் நாளேடு" (Diary of the crisis) என்ற தொடரை, வத்திக்கான் செய்தித்துறையுடன் பகிர்ந்துகொள்ள துவங்கியிருக்கும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், தன் முதல் பதிவாக, ’நிறைந்து வழியும் சதுக்கமும், காலியான சதுக்கமும்’ என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.
தன் முதல் சிந்தனையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றிவரும் திருப்பலியைப் பற்றி கூறும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், 2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த திருப்பலிகளை ஆற்றத் துவங்கிய வேளையில், அவை, தனிப்பட்ட ஒரு குழுவுக்கென்று நிறைவேற்றப்படுவதால், அவற்றை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டாம் என்று திருத்தந்தையும், தானும் இணைந்து எடுத்த முடிவைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலிகள், இல்லங்களில் தங்கியிருப்போருக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன என்பதைக் குறிப்பிட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், இதை மனதில் வைத்து, திருத்தந்தை, தன் மறையுரைகளை, மக்களிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பேசிவருகிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இச்சிந்தனையின் இரண்டாம் பகுதியில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றுள்ள சந்திப்புக்களைக் குறித்து பேசும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், அந்த வளாகம் பல்லாயிரம் முதல், பல இலட்சம் வரை மக்களைக் கொண்டிருந்த தருணங்கள் உள்ளன என்றும், அத்துடன், வளாக நிகழ்வுகளை ஊடகங்கள் வழியே கண்டவர்களின் எண்ணிக்கையை இணைத்தால், அது, பல கோடிகளாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
பல தருணங்களில், புனித பேதுரு சதுக்கத்தைத் தாண்டி, சுற்றிலும் உள்ள பாதைகள் அனைத்திலும் மக்கள் நின்று திருத்தந்தையின் நிகழ்வுகளில் பங்கேற்றதையும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் சிந்தனையில் நினைவுகூர்ந்துள்ளார்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், தன் ஊர்பி எத் ஓர்பி ('Urbi et Orbi') செய்திகளில், உலகின் பல்வேறு மக்கள் ஊடகங்கள் வழியே காண்பதை மனதில் கொண்டு, பல்வேறு மொழிகளில் மக்களை வாழ்த்தியதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய நிகழ்வுகளில், மக்களால் நிறைந்து வழிந்த புனித பேதுரு சதுக்கம், அண்மைய நிகழ்வுகளில் முற்றிலும் வெறிச்சோடி இருந்தது, மற்றொரு வகையான ஒன்றிப்பு நோக்கி நம்மை அழைத்துச் சென்றது என்பதை இச்சிந்தனையில் கூறியுள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், இயேசுவின் ’மறையுடல்’ என்பதன் பொருளை நாம் இந்நாள்களில் அனுபவமாகப் பெற்றுவருகிறோம் என்று எடுத்துரைத்துள்ளார்.
Comment