மறைக்கல்வியுரை : Papal Catechism
உலக பூமி நாளின் ஐம்பதாவது ஆண்டு
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வந்த கடந்த புதனன்று (15.04.2020), தன் மறைக்கல்வித் தொடரின் ஒரு பகுதியாக, ஏழாவது பேறு குறித்து, அதாவது, அமைதிக்குப் பணியாற்றுவோர் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று ஏப்ரல் 22 ஆம் தேதி ’உலக பூமி நாள்’ குறித்து கருத்துக்களை வழங்கினார். கொரோனா தொற்று நோய் காரணமாக உலகமே முடக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரம், அதிலும் குறிப்பாக, ஏப்ரல் 22, இப்புதனன்று உலக ஐம்பதாவது ஆண்டு பூமி நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்விரண்டையும் இணைத்த சிந்தனைகளை வழங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரை இருந்தது.
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உலக பூமி நாளின் ஐம்பதாவது ஆண்டு நினைவை இன்று சிறப்பிக்கின்றோம். நம் பொது இல்லமாகிய இவ்வுலகின் மீது நம் அக்கறையை புதுப்பிப்பதற்கு இது சிறந்ததொரு வாய்ப்பாகும். படைப்பையும், படைப்பில் காணப்படும் அனைத்து உயிர்களையும் மனமகிழ்வுடன் எண்ணிப் பார்த்து இரசிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஏனெனில், இவ்வுலகின் இயற்கை அனைத்தும் கடவுளின் நற்செய்தியேயன்றி, நாம் சுரண்டுவதற்கென வழங்கப்பட்டுள்ள வளங்கள் அல்ல. நம்முடைய சுய நலன்களை வெற்றிகண்டு, உலகின் மீது நம் புனிதம் நிறை மதிப்பை மீண்டும் கண்டுகொள்ள, புதியதொரு கண்ணோட்டம் தேவைப்படுகின்றது. அதாவது, சுற்றுச்சூழலைக் குறித்த ஒரு மனமாற்றம் நமக்குத் தேவைப்படுகிறது. ஏனெனில், இவ்வுலகம் கடவுளின் இல்லமும்கூட. ஆகவே, நாம் அவரின் வீடு என்ற புனித நிலத்தின்மீது நின்று கொண்டிருக்கிறோம். இவ்வுலகைப் பொருத்தவரையில், நாம் அதன் உண்மையான, காவலர்களாக மட்டுமே இருக்கமுடியும். மேலும், இன்று நாம் எதிர்கொள்ளும் கொரோனா தொற்று நோய் போன்ற பல்வேறு சவால்களை, ஒருவர் மற்றவருடன் கொள்ளும் ஒருமைப்பாட்டின் வழியாகவே வெற்றிகொள்ள முடியும் என்பதையும் அறிவோம். டுயரனயவடி ளுi’ என்ற திருமடல் எடுத்துரைப்பதுபோல், நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்து இருப்பது மட்டுமல்ல, நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு பொதுவான, ஒன்றிணைந்த பதிலுரையும் தேவைப்படுகின்றது. புதுப்பித்தலை நினைவுறுத்தும் இந்த உயிர்ப்புப் பெருவிழா காலத்தில், நம் பொதுவான இல்லமாகிய இந்த பூமியையும், நம் சகோதரர், சகோதரிகளையும், குறிப்பாக, உதவி அதிகம் தேவைப்படும் மக்களையும், நாம் மேலும் ஆழமான விதத்தில் அன்புகூர முயன்றுவரும் வேளையில், விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி, ’உமது ஆவியை அனுப்பி, இறைவா, இப்பூமியின் முகத்தை புதுப்பித்தருளும்’ என மன்றாடுவோம்.
இவ்வாறு, உலக பூமி நாள் குறித்த தன் சிந்தனைகளை, வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து, காணொளி வழியாக விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்வில், உங்கள் மீதும் உங்கள் குடும்பங்கள் மீதும் இறைத்தந்தையின் அன்புநிறை இரக்கத்தை வேண்டுவதாக உரைத்து, தன் ஆசீரை அனைவருக்கும் வழங்கினார்.
Comment