No icon

Pope Francis helps

திருத்தந்தையின் நாம விழா பரிசு - மூச்சுவிட உதவும் கருவிகள்

ஜார்ஜோ மாரியோ என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாள், ஏப்ரல் 23, வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது.

இவ்வியாழனன்று, தன் நாம விழாவை சிறப்பித்த திருத்தந்தை, இந்நாளையொட்டி, ருமேனியா, இஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளுக்கு மூச்சுவிட உதவும் கருவிகளை அனுப்பியுள்ளார்.

இந்நாடுகளிலுள்ள ஒரு சில மருத்துவ மனைகள், திருத்தந்தைக்கு அனுப்பியிருந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில், மூச்சுவிட உதவும் கருவிகள் அனுப்பிவைக்கப்பட்டன என்று, திருத்தந்தையின் தர்மப்பணிகளை ஒருங்கிணைக்கும் கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்கள் கூறினார்.

ருமேனியா நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 25 விழுக்காட்டினர்  சுக்கேவா (Suceava) நகரில் இருப்பதாகவும், அந்நகரம் மிகவும் வறுமைப்பட்ட நகரம் என்பதால், அந்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மூச்சுவிட உதவும் கருவிகள் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவண்ணம், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், மிக அதிகமான தேவையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு, மூச்சுவிட உதவும் கருவிகள், மத்ரித் பேராயர் கர்தினால் கார்லோஸ் ஓசோரோ சியரா  (Carlos Osoro Sierraஅவர்கள் வழியே அனுப்பப்பட்டுள்ளன.

இத்தாலியின் தென்பகுதியில் உள்ள லெஸ்சே ( Lecce) நகரின் மருத்துவமனைக்கு கர்தினால் கிராஜூவ்ஸ்கி அவர்கள், மார்ச் 23ம் தேதி நேரடியாகச் சென்று, மூச்சுவிட உதவும் கருவிகளை வழங்கியதோடு, அவர் திரும்பி வந்த வழியில், நேபிள்ஸ் நகரிலிருந்து, உரோம் நகரில் வாழும் வறியோருக்குத் தேவையான மருந்துகளைக் கொணர்ந்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாளன்று, பிறரிடமிருந்து பரிசுகள் எதையும் பெறாமல், தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு பரிசுகளை அனுப்பி வந்துள்ளார் என்று, கர்தினால் கிராஜூவ்ஸ்கி  அவர்கள் கூறினார்.

Comment