No icon

தமிழக திருவழிபாடுப் பணிக்குழு -வாழ்த்துரை

குடும்பமாக செபமாலையைக் செபிப்போம்-கொரோனாவிலிருந்து விடுபடுவோம். -அருள்முனைவர் S.அற்புதராஜ்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஐரோப்பாவில் முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எப்போது என்ன நடக்கும்?  என்று தெரியாத அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த பின்னணியில்தான் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஞாயிறன்று, புனித கன்னி மரியா போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா நகர் அருகில் உள்ள ‘கோவா தா இரியா’ என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிந்த லூசியா, பிரான்செஸ்கோ, ஜெஸிந்தா ஆகியோருக்குத் தோன்றி “அஞ்சாதீர்கள்; நான் உங்களுக்கு தீங்கு ஒன்றும் செய்யமாட்டேன்; நான் விண்ணகத்திலிருந்து வருகிறேன்.  இவ்வுலகம் சந்திக்கப்போகிற துன்பங்களையெல்லாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, கடவுளை மனம் நோகச் செய்த பாவங்களுக்கு பாவிகள் மனந்திரும்பச் செபியுங்கள். ஒவ்வொரு நாளும் செபமாலை செய்யுங்கள்.  போர்கள் முடிவு பெற்று உலகில் அமைதி நிலவச் செபியுங்கள்” என்று கேட்டுக்கொண்டு விண்ணில் மறைந்தார்.
    113 ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலையில் இன்று உலகமே கொரோனா நோய்த் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. செய்வது அறியாது திகைக்கிறது.  அச்சமும் பயமும் ஒவ்வொரு நாளும் நம்மை ஆட்டிப்படைக்கிறது.
    புனித கன்னி மரியா பாத்திமா நகர் லூசியா, பிரான்சிஸ்கோ மற்றும் ஜெஸிந்தாவிற்கு 1917, அக்டோபர் 13 அன்று ஆறாவது முறையாகத் தோன்றி, “நானே திருச்செபமாலையின் அன்னை. எனக்கு ஒரு சிற்றாலயம் கட்டி வணங்குங்கள். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுங்கள்.  போர் முடிவுக்கு வரும்.   படைவீரர்கள் வீடு திரும்புவார்கள். மனித சமூகம் இறைவனை மனம் நோகச் செய்யாதிருக்கட்டும்.  ஏனெனில் ஏற்கெனவே அதிகம் மனம் நோகச் செய்துவிட்டார்கள்;” என்று கேட்டுக்கொண்டதைப் போன்று, இன்று கொரோனா தொற்றுநோய் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அதே சூழலில் அதாவது கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் காப்பாற்றப்பட செபிப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
    எனவே, நம்முடைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதே புனித செபமாலை அன்னையிடம் அதே செபமாலையை இக்கொரோனாத் தாக்கத்திலிருந்து விடுபட்டு, நலம்பெற தனியாகவும், குடும்பமாகவும் இந்த மே மாதத்தில்  கூடி செபிக்க அழைக்கிறார்.
இதனைக் கருத்தில்கொண்டு, நம் திருத்தந்தை விடுத்த அழைப்பினை ஏற்று ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குடந்தை ஞானி அவர்கள் இச்செபமாலை கையேட்டை தனியாகவோ, குடும்பமாகவோ துறவற இல்லங்களில் குழுமமாக இம் மேமாதம் கூடி செபிக்க தயாரித்திருக்கிறார். ஆகவே  அருட்தந்தை ஞானி அவர்களின் அற்புதமான இந்தப் படைப்பை தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு மனதார பாராட்டுகின்றது.

https://www.namvazhvu.in/magazine/details/823/------Marian-May-Devotions---FLIPBOOK
இறைமக்கள் அனைவரும் இணைந்து, சமூக தொடர்புச் சாதனங்களின்  உதவியுடன் இதைப் பெற்று, குடும்பமாக செபமாலையைக் செபிப்போம். இக்கொரோனா நோய்த் தொற்றின் பிடியிலிருந்து விடுபடுவோம்.
  அன்புடன்,

அருள்முனைவர் S.அற்புதராஜ்
பொதுச் செயலர்

 தமிழக ஆயர் பேரவையின் 
திருவழிபாடுப் பணிக்குழு

Comment