Ministry for Refugees
புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றுவோர்க்கு மேய்ப்புப்பணி வழிமுறைகள்
- Author Fr.Gnani Raj Lazar --
- Thursday, 07 May, 2020
நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழும் மக்களுக்குரிய மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஏடு ஒன்றை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையானது மே 05 ஆம் தேதி செவ்வாயன்று வெளியிட்டுள்ளது,.
நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே பணியாற்றும் கத்தோலிக்க பங்குத்தளங்கள், மற்றும், நிறுவனங்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் இந்த ஏட்டை வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் பிரிவு, புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலைகள் குறித்து விரிவாக விளக்குவதுடன், அவர்கள் மீது காட்டப்படவேண்டிய சிறப்புக் கவனம் குறித்தும் விவரித்துள்ளது.
நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்வோர் குறித்த அக்கறையின்மை, தவறான புள்ளிவிவரங்கள், சமூகங்களின் வீண் அச்சம், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் சந்தைப் பொருட்களாக கடத்தப்படுதல், முகாம்களில் வாழும் அம்மக்களுக்கு பொருளாதார உதவிகள், போர் நிறுத்தங்கள், இவர்களின் ஆன்மீக வளர்ச்சியில் கவனம், இவர்களுக்கான நடவடிக்கைகளில் மதக்குழுக்களிடையே ஒத்துழைப்பு போன்ற வெவ்வேறு தலைப்புக்களில் புலம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்த அவையின் ஏடு விவாதித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர்க்குரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போதும், புதிய திட்டங்களை வகுக்கும்போதும் இந்த ஏடு காட்டும் வழிமுறைகள் உதவுவதாக இருக்கும் என உரைக்கும் இவ்வேட்டின் முன்னுரை பகுதி, மக்களிடையே தகவல் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி, புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர்களை ஊக்குவித்து, சமூகத்தோடு ஒன்றிணைக்கவும், இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது.
புலம்பெயர்ந்த மக்களுக்கு ஒன்றிணைந்த திட்டங்களை வகுக்கும்போது, இந்த வழிகாட்டுதல் ஏட்டை கத்தோலிக்க நிறுவங்கள் ஏனைய அரசு சாரா அமைப்புகளுடனும், நிறுவனங்களுடனும் பகிர்ந்துகொள்ளுமாறும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எட்டில் தரப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் துணைகொண்டு, புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும், இவ்வேடு அழைப்பு விடுக்கிறது.
Comment