இறைவார்த்தை ஞாயிறு
மூவேளை செப உரை
- Author குடந்தை ஞானி --
- Friday, 27 Jan, 2023
ஆண்டவரைப் பின்பற்றத் தடையாய் இருப்பவற்றைப் புறந்தள்ளி அவரோடு நிலைத்திருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 22 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார். இறைவார்த்தை ஞாயிறாகிய ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கடுங்குளிரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.4,18-22) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
முதல் சீடர்கள் போன்று…...
இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது முதல் சீடர்களை அழைத்தது பற்றிய ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், அவர் அழைத்தவர்கள் உடனடியாக அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் என வாசிக்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, அந்நேரத்தில் அச்சீடர்கள் எடுத்த தீர்மானத்தில் எல்லாமே மாறிவிட்டன என்று கூறினார்....
புதிய பணியில் இறங்க...
இயேசுவைப் பின்பற்றுவதற்குத் தடைகளாய் இருக்கின்ற அனைத்தையும் விட்டுவிடவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, ஒரு தீர்மானம் எடுப்பதற்குத் தேவை ஏற்படும்போது, சில தவிர்க்கமுடியாதவற்றை விட்டுவிட்டு, ஒரு புதிய பணியில் துணிந்து இறங்குகிறேனா அல்லது முன்னைய நிலையிலேயே நிலைத்திருக்கிறேனா? என்ற கேள்வியை முன்வைத்தார்.
இது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் முக்கியமான தருணம் என்று கூறியத் திருத்தந்தை, நம்பிக்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேற துணிவைக் கொண்டிராவிடில் பாதிவழியில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகி விடுவோம் எனவும், இயேசுவோடு தங்கி இருப்பதற்கு எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிவு தேவை எனவும் எடுத்தியம்பினார்.
நாம் விட்டுவிடவேண்டியவை, தீயொழுக்கங்கள் மற்றும் பாவங்களே, ஏனெனில் இவை வளைகுடாவில் நிறுத்தப்பட்ட நங்கூரங்கள் போன்று பயணத்தைத் தொடரவிடாமல் தடைசெய்யும் என எச்சரிக்கைவிடுத்த திருத்தந்தை, முழுமையாக வாழ்வதிலிருந்து தடைசெய்கின்ற அச்சம், தன்முனைப்புகள், சுயப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் அரண்கள் போன்றவற்றையும் நாம் புறக்கணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பயனற்ற காரியங்களில் வீணாக்கும் நேரமும் இதில் உள்ளடங்கும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரோடு நட்புறவில் வளர, பிறரன்புப் பணியில் அல்லது இறைவேண்டலில் நேரத்தை அர்ப்பணிப்பது எத்துணை அழகானது என்றும் கூறினார். இளம் குடும்பங்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோரின் அர்ப்பண வாழ்வு குறித்து பாராட்டிப் பேசிய திருத்தந்தை, வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு, எவற்றை விட்டுவிலகவேண்டுமோ அச்சவாலை நாம் ஏற்கவேண்டும் என்றும், இவ்வாறு நாம் வாழ இயேசு இன்று அழைப்புவிடுக்கிறார் என்றும் கூறினார்.
அனைத்து கத்தோலிக்கர் மத்தியில் திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறை இறைவார்த்தை ஞாயிறாக, 2019 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
Comment