தூயஆவியாரின் உயிருள்ள தண்ணீர்
முடிவற்ற வாழ்வை வழங்கும் நீரை வாக்குறுதி அளிக்கும் இயேசு
- Author குடந்தை ஞானி --
- Saturday, 18 Mar, 2023
நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கும் வகையில், வாழும் நீரை தர வாக்குறுதி அளிக்கும் இயேசு நம் அன்பிற்காக தாகமாக இருக்கிறார் என பிப்ரவரி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார்.
தாகமாய் இருந்த இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணிற்கும் இடையே கிணற்றடியில் இடம்பெற்ற உரையாடல் பற்றி விவரிக்கும் ஞாயிறு நற்செய்தி குறித்து தன் மூவேளை செபவுரையை புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தாகத்தால் தண்ணீர் கேட்டது, அவர் நம்மைப்போல் அனைத்துவிதத்திலும் மனித தேவைகளோடும் மனித துயர்களோடும் வாழ்ந்தவர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்றார்.
இங்கு இயேசுவின் தாகம் என்பது அவரின் உடலளவிலான தாகத்தை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, நம் வாழ்விற்கான, நம் அன்பிற்கான தாகத்தைக் குறிக்கின்றது. ஏனெனில், பாடுகளின் உச்ச நிலையில், ‘நான் தாகமாக இருக்கிறேன்’ என்பதில் அது வெளிப்பட்டது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
தாகமாக இருந்து சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்பதுடன், நமக்குள் முடிவற்ற வாழ்வை பொங்கியெழச் செய்யும் தூயஆவியாரின் உயிருள்ள தண்ணீரை தரவல்லவராக தன்னை வெளிப்படுத்தும் இயேசு, நம் வாழ்வு நடவடிக்கைகளில் நம்மோடு உடன்வந்து தன் அன்பால் நம் தாகங்களைத் தீர்க்கிறார் என திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நாம் இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நம் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், உடனுழைப்பாளர்கள் ஆகியோரின் தாகத்தை, அதாவது, மற்றவர்களின் அருகாமைக்கான, செவிமடுத்தலுக்கான, அக்கறைக்கான தாகத்தைத் தீர்க்க நாம் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, தேவையிலிருக்கும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக இயேசு நம்மை நோக்கி பலவேளைகளில மௌனமாகக்கூட கூக்குரலிடுகிறார் என மேலும் எடுத்துரைத்தார்.
பலவேளைகளில் பாராமுகத்தாலும் உள்மன வெறுமையாலும் பாலைவனமாகியுள்ள நம் சமூகங்களில் வாழும் மக்கள் இறைவார்த்தைக்கான தாகத்துடன் திருஅவை என்னும் நீர்த்தடாகத்தைத் தேடி வருவதுண்டு என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர், இன்றையை சூழலில் வறட்சியாலும், மாசுப்படுத்தலாலும் பாதிக்கப்பட்டிருப்பதால், நம் பொது இல்லமாகிய இவ்வுலகமும் சுற்றுச்சூழலும் துயருறுகிறது என மேலும் கூறினார்.
நாம் மற்றவர்களுக்கு நீரூற்றாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் நமக்கு உயிருள்ள நீரை இயேசு வழங்க முன்வரும் இவ்வேளையில், நாம் கடவுளுக்கான தாகம் கொண்டுள்ளோமா, வாழ்வதற்கு தண்ணீர் தேவை என்பதுபோல் இறையன்பு நமக்குத்தேவை என்பதை உணர்கிறோமா, மற்றவர்களின் தாகம் குறித்து அக்கறைக் கொள்கிறோமா என்ற கேள்விகளையும் முன்வைத்து தன் மூவேளை செபவுரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுச் செய்தார்.
Comment