திருத்தந்தையின் முழக்கம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
“கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பில் வானதூதர்கள் எடுத்துரைத்ததும், கிறிஸ்துவின் உயிர்ப்பின் போது எடுத்துரைக்கப்பட்டதும் ‘அமைதி’ என்ற வார்த்தையே. ‘அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றவர்கள்’ என்ற முறையில் திருப்பீடத்துடனான உறவிற்கு உதவும் அரசு தூதுவர்கள் அனைவரும் அமைதியைக் கொண்டு வர உழைக்க வேண்டியது அவர்களின் கடமை.”
- சனவரி 8, வத்திக்கான் திருப்பீட அரசு தூதர்களுக்கான செய்தி
“திருமுழுக்கு அருளடையாளம் வழியாகக் கடவுள் நம்முடன் மிக நெருக்கமாகி விட்டார். திருமுழுக்கு என்பது மறுபிறப்பு; கடவுளின் அருளை நாம் பெற்றுக்கொண்ட நாள்; எனவே, அந்த நாளை நாம் கட்டாயம் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.”
- சனவரி 7, ஞாயிறு மூவேளை செபவுரை
“ஞானியர் குழந்தை இயேசுவைக் கண்டது போல நாமும் நம்பிக்கை, ஆச்சர்யம், ஆர்வம் கொண்டு குழந்தை இயேசுவைக் காண வேண்டும். மேலும், கடவுள் எளிய குழந்தையாக, அன்பானவராக நமக்காகப் பிறந்தார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.”
- சனவரி 6, திருக்காட்சிப் பெருவிழா மறையுரை
“திரு நற்கருணையில் இயேசுவை வணங்கி ஆராதிப்பது என்பது நேரத்தை வீணாக்குவதல்ல; மாறாக, நேரத்திற்கான அர்த்தத்தை வழங்குவது மற்றும் இதயத்திற்கு ஊட்டமளிக்கும் எளிமையான அமைதியில் வாழ்வின் பாதையைக் கண்டறிவது.”
- சனவரி 5, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ செய்தி
“கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள ஒவ்வோர் ஆணும்-பெண்ணும் பல்வேறு விதமான போர்களாலும், மோதல்களாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுக் காயமடைந்துள்ள இவ்வுலகில், அமைதியின் பாலங்களைக் கட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.”
- சனவரி 4, அசிசியார் சபை மாத இதழுக்கான நேர்காணல்
Comment