திருத்தந்தையின் முழக்கம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
“மக்கள் திருமுழுக்குப் பெற ‘வெறுங்காலுடனும், வெறுமையான ஆன்மாவுடனும்’ திருமுழுக்கு யோவானிடம் சென்றனர்; அதாவது, கடவுளால் கழுவப்பட விரும்பிய ஓர் ஆன்மா, வெறுமையோடு வந்து, கடவுளைப் பெற்றுக்கொண்டது. இயேசுவின் வல்லமையையும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆற்றலையும் நாமும் பெறுவதற்காக ‘வெற்று ஆன்மாக்களுடன்’ ஆலயம் வரவேண்டும்.”
- சனவரி 09, இயேசுவின் திருமுழுக்கு விழாவின் திருப்பலியின் மறையுரை
“நம் ஒற்றுமையாக வளர இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நம்மை மூடிக்கொள்ளவோ அல்லது அனைத்தையும் தனியாகச் செய்ய முடியும் என்று நினைக்கவோ வேண்டாம்; மாறாக, நாம் ஒருவருக்கொருவர் செவிமடுப்போம், ஒன்றாகப் பேசுவோம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்.”
- சனவரி 11, ஏஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி
“ஒவ்வொரு மனித உயிருக்கும் மரியாதை தேவைப்படுகிறது; இது தாயின் கருப்பையில் வளரும் குழந்தையின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது; அதை அடக்கவோ அல்லது வணிக ஒப்பந்தத்தின் பொருளாக மாற்றவோ கூடாது. வாடகைத் தாய்மை என்பது பெண் மற்றும் குழந்தையின் கண்ணியத்தைக் கடுமையாக மீறுவதைக் குறிக்கிறது.”
- சனவரி 12, எஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி
“போர் என்பதே மனிதகுலத்திற்கு எதிரானக் குற்றம்தான். மக்களுக்கு அமைதி தேவை. உலகிற்கு அமைதி தேவை. ஆனால், ஆயுதங்கள் தொடர்ந்து அந்த அமைதியை அழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மோதல்களைத் தீர்க்க போர் என்பது வழி அல்ல என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும்.”
- சனவரி 14, மூவேளைச் செப உரை செய்தி
“குழந்தைகள் இயல்பாகவே சிரிப்பார்கள்; ஆனால், உக்ரைன் நாட்டுக் குழந்தைகளை நான் சந்திக்கும் போது அவர்கள் யாரும் சிரிக்கவில்லை. நான் அவர்களுக்குச் சாக்லேட் கொடுத்தும், அவர்கள் சிரிக்கவில்லை. எப்படிச் சிரிப்பது என்பதையே அவர்கள் மறந்துவிட்டார்கள். ஒரு குழந்தை எப்படிச் சிரிக்க வேண்டும் என்பதை மறப்பது பெரும் குற்றம். போர் இதைத் தான் செய்கிறது; அது அவர்கள் கனவு காண்பதைத் தடுக்கின்றது.”
- சனவரி 14, தொலைக்காட்சி உரையாடலின்போது பகிர்ந்த செய்தி
Comment