No icon

மரியா அன்றும் இன்றும்

பெண், ஆண் தெய்வங்கள் மற்றும் மரியா பற்றிய பார்வைகள்

அ. மானிடருக்கு இடையேயான உறவே கடவுள் பற்றிய பார்வைக்கு அடிப்படை

இறையியல் கூற்றுகள் அனைத்தும் ஒருவகையில் மானிடவியல் கூற்றுகளே. வரலாற்றில் மானிட உறவுகள் எவ்வாறு காணப்பட்டனவோ அவ்வாறே கடவுளைப் பற்றிய பார்வையும் காணப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் பெண்மையச் சமூகம்தான் காணப்பட்டது என்பது இன்று பெரும்பாலும் எல்லாராலும் ஏற்கப்படுகின்றது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் கூறுவார்கள். ஒன்று, பெண்களை ஆண்கள் தங்களைவிட சக்தி படைத்தவர்களாய்க் கண்டார்கள். குறிப்பாக, அறிவியல் வளர்ச்சி பெறாத அக்காலத்தில் பெண்களுக்கே உரித்தான குழந்தைப்பேறு ஒரு புரியாத புதிராய் இருந்தது; ஆண்கள் தங்களால் இயலாத, தங்களிடம் காணப்படாத ஏதோ ஓர் ஆற்றல் பெண்களிடம் இருப்பதாகக் கண்டார்கள். இரண்டு, பெண்கள்தான் தோட்டத்தில் வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருள்களை விளைவித்தனர். இவ்வாறு, பொருளாதாரத்தின் மையமாய் பெண்களே இருந்தனர். இத்தகைய பின்னணியில், உலகில் காணப்பட்ட பல்வேறு இனக்குழுக்களிலும், வேதகாலத்திற்கு முன்பாக இந்தியாவின் தொடக்ககால மரபிலும் காணப்பட்டது பெண்தெய்வ வழிபாட்டு முறையே என்பர். பெண் தெய்வத்தைத் தாய்த் தெய்வமாகக் கண்டு வழிபடும் தாய்த் தெய்வ வழிபாட்டுமுறை தொடக்க காலத்தில் காணப்பட்டது; இந்தியாவைப் பொறுத்தமட்டில் இது முற்றிலும் உண்மை என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி.

வேதகாலம் தொடங்கிய பிறகே இத்தகைய பெண்(தாய்) தெய்வ வழிபாட்டுமுறை மறைய ஆரம்பித்தது. காரணம், வேதகாலத்தின்போதும் அதற்குப் பின்பும் சமூக வாழ்வின் மையமாக ஆண்கள் இருந்தார்கள். மேலும், ஆரியர்களின் மேய்ச்சல் சமூகத்தில் பொருளாதாரத்தின் மையமாய் ஆண்கள் இருந்தார்கள். எனவே, பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பெண்களின் பணி என்பது பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றுடன் மட்டுமே இணைத்துப் பார்க்கப்பட்டது. பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டியவர்களானார்கள். எனவேதான், வேதகாலத்திற்குப் பின்பு ஆண்மைய வழிபாட்டுமுறை உருவானது. பெண் கடவுள்களும் ஆண் கடவுள்களைச் சார்ந்து வாழ்பவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக, இந்திரன், வருணன் போன்ற ஆண் தெய்வங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்த சூழலில், அவர்களின் மனைவிகளான இந்திராணி, வருணானி போன்றோர் அவர்களின் கணவர்களைச் சார்ந்து இருந்த பெண் தெய்வங்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று தனித்தன்மை ஏதும் இல்லை. அவர்களின் பெயரிலேயே அவை புலப்படும்.  இருப்பினும், உலக அளவில் ஆண்-பெண் சமத்துவத்திற்கான ஒரு தேடல் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் சமூக மறுமலர்ச்சிக்காலம் (ஏறத்தாழ அதே காலக்கட்டம்) தொடங்கியும் ஆரம்பமானது. பெண்களும் ஆண்களைப் போன்று அனைத்துப் பணிகளையும் செய்ய ஆரம்பித்தார்கள்; தங்களின் சம உரிமைக்காகப் போராட ஆரம்பித்தார்கள். இத்தகைய தேடல் கடவுள்பற்றிய பார்வையையும் மாற்றியது. ஆண்மையக் கடவுள் சிந்தனை மங்கி, கடவுளையே ஆணும் பெண்ணுமாகக் காணும் நிலைக்கு அது வழிவகுத்தது. இது, ஒவ்வோர் ஆணிலும் “பெண்மைப் பண்புகள்” உள்ளன; ஒவ்வொரு பெண்ணிலும் “ஆண்மைப் பண்புகள்” உள்ளன என்ற சிந்தனையை விளக்குவதாய் உள்ளது. இவ்வாறு, மானிட உறவுகளில் ஆண்-பெண் நிலை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்பட்டதோ, அதுவே கடவுளைப் பற்றிய பார்வைக்கும் அடித்தளமாய் அமைந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆ. “ஆண்மை”, “பெண்மைப்” பண்புகள் ஆண்கள் உருவாக்கிய கட்டமைப்பு

கடவுள் மானிடரை “ஆணும் பெண்ணுமாக”ப்  படைத்தார் (தொநூ 1:27). ஆனால், ஆண்கள்தான் சில பண்புகளை “ஆண்களுக்குரிய பண்புகள்” என்றும், சிலவற்றைப் “பெண்களுக்குரிய பண்புகள்” என்றும் வரையறுத்தனர். இவ்வாறாக,  ஆண்கள் பெண்களை எப்படிப் பார்க்க விரும்பினார்களோ அவ்வாறே அவர்கள் பெண் கடவுள்களையும், புனிதைகளையும் (கிறித்தவச் சமயம்) பார்க்க ஆரம்பித்தார்கள். எடுத்துக்காட்டாக, ஆணாதிக்கம் நிறைந்து காணப்பட்ட தமிழ் மரபில் பெண்களைப் ‘பிள்ளைகளைப் பெற்றெடுக்கக் கூடியவராய், அவற்றிற்குப் பாலூட்டிப் பேணி வளர்ப்பவராய்’ மட்டுமே கண்டார்கள். எனவேதான் பெண் தெய்வங்களின் பிறப்புறுப்பையும் (நாகரிகம் கருதிப் பிறப்புறுப்பின் பின்பகுதியையும்) வயிற்றையும் மார்பகத்தையும் கண்களையும் மிகப் பெரிதாகக் காட்டினார்கள். பெண் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் பெற்றெடுத்தவள் என்ற வகையில் சில பெண் தெய்வங்களின் வயிற்றைப் பெரிதாகக் காட்டியுள்ளனர். தமிழில் “மோடி” என்ற தாய்த் தெய்வம் உள்ளது. “மோடி” என்ற வார்த்தை “மோடு” என்ற வார்த்தையில் இருந்து வருகின்றது. “மோடு” என்றால் ‘வயிறு’ என்பது பொருள். “மோடு” என்றால் ‘எல்லாரையும் பெற்ற வயிறு’ என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது (வரி 458). அவ்வாறே, உலக மாந்தர் அனைவருக்கும் பாலூட்டுபவர் ஒரு தாய் என்பதைக் குறிக்கும் விதமாக மார்பகங்களைப் பெரிதாகக் காட்டினார்கள். எடுத்துக்காட்டாக, மதுரை மீனாட்சிக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாக வருணிப்பார்கள். மேலும், அங்கயற்கண்ணி உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தமது அருள் நிறைந்த கண்பார்வையினால் பாதுகாக்கின்றார் என்கிறது தமிழ் மரபு. இவ்வாறாக, ஒரு பெண்ணின் பணியைப் பிள்ளைப்பேறு, பிள்ளைகள் வளர்ப்பு ஆகியவற்றுடன் சுருக்கி விட்டார்கள். அதே வேளையில் வலிமை, சக்தி போன்ற ‘ஆண்களுக்குரிய’ பண்புகளை ஒரு பெண் கொண்டிருந்தால் அப்பெண்ணைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைத்தனர். அவ்வாறே, வலிமை, எதிரிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவராய் காளி என்ற பெண் தெய்வம் இருப்பதால், அவரை ஊருக்கு வெளியே வைக்கும் நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக, ஆண்கள் வரையறை செய்த “பெண்மைப்” பண்புகள் ஒரு பெண் தெய்வத்திடம் காணப்பட்டால் அவரை ஊருக்குள் வைத்து வழிபடும் முறையும், “பெண்மைப்” பண்புகள் காணப்படவில்லையெனில், அவரை ஊருக்கு வெளியே வைக்கும் நிலையும் காணப்பட்டது.

கிறித்தவச் சமய மரபில் அன்னை மரியாவைப் பார்த்த விதத்தையும் மேற்கண்டவாறே அணுகவேண்டும். திரு அவையின் மரபில் எபேசு சங்கம் தொடங்கி ஏறத்தாழ 1970 வரை மரியா பற்றிய பார்வையை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அவர்கள் உருவாக்கிய மரியா பற்றிய சிந்தனைகளும் ஆணாதிக்கச் சார்புடையனவே. ஒரு பெண் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என ஆண்கள் விரும்பினார்களோ அத்தகைய பண்புகளை எல்லாம் அன்னை மரியாவுக்கும் ஏற்றிக் கூறினார்கள். ஆண்கள் வரையறுத்த “பெண்மைப்” பண்புகள் எல்லாவற்றையும் மரியாவுக்கு வழங்கினார்கள். இவ்வாறாக, அன்னை மரியாவை அமைதியான பெண்ணாக, ஆண்டவரின் அடிமையாக, கீழ்ப்படிந்து வாழ்ந்தவராகச் சித்தரித்தனர் (லூக் 1:38). அதுமட்டுமல்ல; அன்னை மரியாவை இறைத்தந்தையின் மகளாக, இயேசுவின் தாயாக, தூய ஆவியாரின் துணையாளராகச் சித்தரித்து, மரியாவை எப்பொழுதுமே ‘ஆண்’ கடவுளைச் சார்ந்து வாழ்பவராகவே காட்டினர். இதன்மூலம் பெண் என்பவர் ஆண்கள் சொல்வதை அமைதியாகக் கேட்பவராக, ஆண்களுக்கு அடிமையாக, அவர்கள் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து வாழ்பவராக இருக்கவேண்டும் என்பதை மரியாவின் வாழ்வைச் சுட்டிக்காட்டிக் கூறினார்கள். அவ்வாறே, ஒரு பெண் திருமணத்திற்கு முன்புவரை தந்தையையும், திருமணத்திற்குப் பின்பு கணவனையும், தமது வயதுமுதிர்ந்த காலத்தில் தான் பெற்றெடுத்த மூத்த ஆண் மகனையும் சார்ந்து வாழ வேண்டும் என்று கற்பித்தார்கள். ஆனால், அதேவேளையில், மரியாவைத் தூயவராய்க் காட்டி, ஏனைய பெண்களைப் பாவத்தின் அடையாளமாய், ஏவாளின் வழிவருபவர்களாய்ச் சித்தரித்தனர். இவ்வாறு, ஆண்கள் எவற்றால் பெண்களை அடையாளப்படுத்த விரும்பினார்களோ அவற்றையெல்லாம் அன்னை மரியாவுக்கு ஏற்றிக் கூறினார்கள். இவ்வாறாக, மரபில் உருவான பெண்கள் பற்றிய அனைத்துப் பார்வைகளும் இறையியல் சிந்தனைகளும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்த உதவுபவை, அவர்களின் வசதிக்காக ஆண்களால் ஏற்படுத்தப்பட்டவை, கட்டமைக்கப்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இ. பெண் தெய்வங்கள், மரியா பற்றிய நலமான பார்வை தேவை

எனவேதான், பெண் விடுதலையை, ஆண்-பெண் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் பெண்ணிய இறையியலாளர்கள், கடந்த காலத்தில் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண்கள் பற்றிய பார்வையையும், பெண் தெய்வங்கள் பற்றிய பார்வையையும் முற்றிலும் நிராகரிக்கின்றனர். பெண் தெய்வங்களையும் மரியாவையும் வெறுமனே “பெண்மைப்” பண்புகளுடன் இணைத்துப் பார்க்கும் பார்வையை முற்றிலும் தவறு எனச் சுட்டுக்காட்டுகின்றனர். அவை வரலாற்றில் உருவாக்கப்பட்ட தவறான கட்டமைப்புகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதேவேளையில், அவர்கள் தாங்கள் வாழும் இன்றைய சூழலில் இருந்து பெண் விடுதலைக்கான, ஆண்-பெண் சமத்துவத்திற்கான தேடலைத் தொடங்கியுள்ளனர்.

இன்று பெண் விடுதலையை முன்னிலைப்படுத்தும் பெண்ணிய இறையியலாளர்கள் மரியாவை இன்றைய பெண்களுடைய வாழ்வோடு இணைத்துப்பார்க்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். மேலும், பெண் விடுதலையை நிலைநிறுத்தும் நோக்கில் மூன்று வகையான சிந்தனைகள் பெண்ணிய இறையியலாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

1. பெண்ணிய இறையியலாளர்கள் சிலர், கடவுள்கள் எல்லாரும் ஆண்களாய் உள்ளவரை பெண் விடுதலை என்பது சாத்தியமற்ற ஒன்று எனக்கூறி, அதனால் பெண்களின் சக்தியை நிலைநிறுத்த, பெண் விடுதலை மலர, பெண் கடவுள்கள் தேவை என்கின்றனர். காரணம், கடவுள் என்று சொன்னாலே அவரை ஓர் ஆணாக உருவகப்படுத்திக் காணும் நிலைதான் உள்ளது. ஆகவே, மரியாவை ஏன் பெண் கடவுளாகக் காணக்கூடாது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இவர்களைப் பொறுத்தமட்டில், மரியாவை கடவுளாகக் கண்டால்தான் அவர் பெண் விடுதலைக்கான ஒரு சக்தியாக இருக்க முடியும். ஆனால், இவர்களின் கருத்தை நாம் ஏற்க இயலாது. காரணம், இது கிறித்தவச் சமயத்தின் அடிப்படை இறைநம்பிக்கையாகிய மூவொரு கடவுள் கோட்பாட்டிற்கு முரணான ஒன்று.

2. பெண்ணிய இறையியலாளர்கள் வேறு சிலர், மரியாவைப் பற்றி நாம் பேசும்வரை பெண் விடுதலை என்பது சாத்தியமே இல்லை என்கின்றனர். எனவே, மரியாவைப் பற்றி நாம் பேசவே கூடாது என்கின்றனர். காரணம், எப்பொழுதெல்லாம் நாம் மரியாவைப் பற்றி பேசுகின்றோமோ, அப்பொழுதெல்லாம் அவரை அமைதியானவராய், ஆண்டவரின் அடிமையாய், கீழ்ப்படிந்து வாழ்ந்தவராய், ‘ஆண்’ கடவுளைச் சார்ந்தவராகத்தான் பேசுவோம். இது ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த உருவாக்கிய பார்வை. இது ஒருவகையில் பெண்ணடிமைத்தனத்துக்கு வித்திடுமே தவிர, பெண் விடுதலைக்கு வழிவகுக்காது என்கின்றனர் இவர்கள். ஆனால், இவர்களின் கருத்திலும் நமக்கு உடன்பாடு இல்லை. காரணம், மரியாவைப் பெண் விடுதலையின் அடையாளமாக நாம் காட்ட முடியும். மேலும், கத்தோலிக்கத் திரு அவையில் மரியாவை விடுவித்துவிட்டு நாம் பேசமுடியாது. மரியாவுக்கென்று கத்தோலிக்கத் திரு அவையில் ஒரு தனிச்சிறப்பான இடம் இருக்கின்றது.

3. பெண்ணிய இறையியலாளர்கள் மற்றும் சிலர், மரியாவை பெண்கள் விடுதலையின் அடையாளமாகப் பார்க்க முடியும் என்கின்றனர். 1987 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மூன்றாம் உலக நாடுகளின் பெண்ணிய இறையியலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் இறுதியில் வழங்கப்பட்ட உரையில் இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டன:

(i) கடந்த காலத்தில் பெண்களை அழிவின் பாதைக்கு இட்டுச்சென்ற, ஆண்கள் உருவாக்கிய மரியா பற்றிய பார்வையில் இருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்.

(ii) பெண்களாகிய நாம், இன்று நாம் வாழும் சூழலில் இருந்து, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, சமயச் சூழலில் வாழ்ந்த மரியாவைக் காணவேண்டும். அன்றைய சூழலில் மரியா விடுதலை பெற்ற பெண்ணாக, விடுதலையின் அடையாளமாகத் திகழ்ந்ததை நாம் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் முன்னிலைப்படுத்தும்போது, இன்றைய சூழலில் அவரைப் பெண்கள் விடுதலைக்கு ஒரு மிகச் சிறந்த மாதிரியாகக் காட்ட இயலும்.

பெண்ணிய இறையியலாளர்களின் இவ்விரண்டு கருத்துகளுமே நமக்கு ஏற்புடையவை. இருப்பினும், கத்தோலிக்கத் திரு அவையின் மரபில் இறையியலாளர்களும் போதகர்களும் புதிய ஏற்பாடு காட்டும் “வரலாற்று” மரியாவுக்கு முக்கியத்துவம் தராது, அவரை இன்று வாழும் பெண்களில் இருந்து வேறுபடுத்தி, கன்னித்தாயாக, அமல உற்பவியாக, விண்ணக அரசியாகக் காட்டுவதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினர்; மறுபுறம் சீர்திருத்த திரு அவைகள் மரியாவுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்காது விட்டுவிட்டன. ஆனால், புதிய ஏற்பாட்டு அடிப்படையில் “வரலாற்று” மரியாவைத் தேடும் முயற்சியே மரியாவைப் பெண் விடுதலைக்கு அடையாளமாகக் காட்ட வழிவகுக்கும். மரியா ஒரு விழுமியச் சமய அடையாளம், அவரை வெறும் ஆணாதிக்கக் கற்பனைகளின் அடிப்படையில் அல்ல; உண்மை வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கட்டமைக்க வேண்டும். (தொடரும்...)

Comment