மரியா
அன்றும் இன்றும்
புதிய ஏற்பாட்டில் மரியா பற்றிய பகுதிகள்
மானிட வரலாற்றில் நாசரேத்தைச் சார்ந்த மரியாவைப் போன்று எந்த ஒரு பெண்ணும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கத் திரு அவையின் தொடக்ககால மரபில் இருந்து இன்றுவரை கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியா சிறப்பான பங்கு ஆற்றியுள்ளார். கத்தோலிக்கத் திரு அவையின் அடையாளமாகவும் உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க மரியாவைப் பற்றிய புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை நாம் இந்த அலகில் காண்போம்.
அ. மரியா: பெயர் விளக்கம்
மரியா என்னும் பெயர் அரமேய மொழியில் ‘மரியம்’(Maryam) எனவும், எபிரேய மொழியில் ‘மிரியம்’ (Maryam) எனவும், கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் ‘மரியா’ (Maria) எனவும் அழைக்கப்படுகின்றது. ‘மரியா’ எனும் இப்பெயர் எகிப்திய மூல மொழியில் உள்ள ‘mrjt’எனும் வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்பது ஒரு மரபு. இதன் பொருள் அன்பு (mr = love, mry = beloved) என்பதாகும்.
பழைய ஏற்பாட்டில் மோசே, ஆரோன் ஆகியோரின் சகோதரி பெயர் மிரியாம் (விப 15). இதுபோன்று, அன்று பலருக்கும் வழங்கப்பட்ட பெயர் ‘மரியா’ என்பதாகும். மரியா என்ற பெயருக்கு வேறுசில பொருள்களும் வழங்கப்படுகின்றன: “to be bitter”, “to be rebellious”. அரமேய பெயர்ச் சொல் marar என்பது “to be bitter” எனவும், அரமேய வினைச்சொல்லாகிய mara என்பது “to be rebellious”எனவும் பொருள்படும்.
ஆ. புதிய ஏற்பாட்டில் மரியா எனும் பெயர் கொண்ட ஆறு பெண்கள்
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தாயாகிய மரியா உட்பட ஆறு பெண்கள் ‘மரியா’ எனும் பெயரைக் கொண்டுள்ளார்கள்.
1. மகதலா மரியா: இவர் பெண்கள் பலருடன் இணைந்து இயேசுவின் பணி வாழ்வின்போது கலிலேயாவில் உதவியவர் (லூக் 8:1-2); இயேசுவின் சிலுவை மரணத்தின்போதும், அடக்கத்தின்போதும் உடன் இருந்தவர் (மாற் 15:47, யோவா 19:25-26), உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் கண்டவர், அச்செய்தியை இயேசுவின் சீடர்களுக்கு முதன்முதலில் அறிவித்தவர் (யோவா 20:17). எனவேதான், மகதலா மரியாவை திருத்தூதர்களின் திருத்தூதர் எனவும், முதல் நற்செய்தியாளர் எனவும் திரு அவை போற்றுகின்றது.
2. இலாசர், மார்த்தா ஆகியோரின் சகோதரி மரியா (லூக் 10:38-42).
3. யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியா (மத் 27:56); இவர்தான் குளோப்பாவின் மனைவி (யோவா 19:25).
4. மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா (திப 12:12). இவர்தான் பவுல், பர்னபா ஆகியோருக்குப் பணிவாழ்வில் உதவியவர்.
5. உரோமையைச் சார்ந்த மரியா (உரோ 16:6).
6. இயேசுவின் தாய் மரியா: மரியாவின் பெயர் 19 முறை புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. மத்தேயு நற்செய்தியில் 5 முறையும் (1:16,18,20; 2:11; 13:55), மாற்கு நற்செய்தியில் 1 முறையும் (6:3), லூக்கா நற்செய்தியில் 12 முறையும் (1:27,30,34,38,39,41,46,56;2:5,16,19,34), திருத்தூதர் பணிகள் நூலில் 1 முறையும் (1:14) மரியாவின் பெயர் இடம்பெறுகின்றது.
இ. புதிய ஏற்பாட்டில் மரியா பற்றிய பகுதிகள்
1. பவுலின் கடிதங்கள்
புதிய ஏற்பாட்டின் பல்வேறு பிரிவுகளில் முதன் முதலாக எழுதப்பட்ட பகுதி பவுலின் கடிதங்கள் ஆகும். பவுல் தமது கடிதத்தில் மரியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, மரியாவை மறைமுகமாக அவர் குறிப்பிடுகின்றார்: “... கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்...” (கலா 4:4). இப்பகுதி தவிர்த்து பவுல் தம் கடிதங்களில் மரியாவின் பெயரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு எங்கும் குறிப்பிடவில்லை. மரியாவைப் பற்றிப் பவுல் எழுதாததற்குப் பவுலின் கடிதங்களின் நான்கு முக்கிய நோக்கங்களைக் குறிப்பிடலாம்.
1) பவுலின் கடிதங்களின் தலையாகிய நோக்கம் என்பது, இறந்து உயிர்த்த இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தி, ஆழப்படுத்துவதாகும். எனவேதான், புனித பவுல் தாம் எழுதிய முதல் கடிதத்தில், அதாவது, தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஆண்டவரின் வருகையைப் பற்றி அதிகம் எழுதுகின்றார் (4:13-5:11): “இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகின்றோம்” (4:14); “ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்” (4:16) எனக் குறிப்பிடுகின்றார். மேலும், தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை வழங்குகின்றார் (2:1-17).
2) இரண்டாவதாக, பல்வேறு தலத்திரு அவைகளில் காணப்பட்ட சிக்கல்கள், தவறான வாழ்வுமுறை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, உண்மையான கிறித்தவ வாழ்வு வாழ்வதற்குப் பவுல் தம் பல்வேறு கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார். எடுத்துக்காட்டாக, கொரிந்தியத் திரு அவைக்கு எழுதிய கடிதங்களில், கொரிந்தியத் திரு அவையில் காணப்பட்ட பிளவு (1கொரி 1), தந்தையின் மனைவியை வைத்துக்கொண்டிருக்கும் ஒழுக்கக்கேடு (1கொரி 5), பொது நீதிமன்றங்களுக்குச் செல்லல் (1கொரி 6), திருமணம், கன்னிமை, மணமுறிவு, மறுமணம் பற்றிய போதனைகள் (1கொரி 7), சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணுதல் (1கொரி 8), ஆண்டவரின் திருவிருந்தில் முறையாகப் பங்கேற்றல் (1கொரி 11), ஆவிக்குரிய கொடைகளை முறையாகப் பயன்படுத்துதல் (1கொரி 12), உயிர் பெற்றெழுதல் பற்றிய போதனை (1கொரி 15) ஆகியவை பற்றியும், உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், கிறித்தவ வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் (உரோ 12-15) பற்றியும் பவுல் எழுதுகின்றார்.
3) மூன்றாவதாக, பவுலின் இறையியல் கருத்துகள் அவரின் கடிதங்களில் மையம் பெறுகின்றன. குறிப்பாக, உரோமையருக்கு எழுதிய கடிதத்தின் 1 - 11 அலகுகள் பவுலின் பல்வேறு இறையியல் கருத்துகளைக் கொண்டுள்ளன.
4) இறுதியாக, பவுல் தம் கடிதங்கள் அனைத்தையும் ஏறத்தாழ கி.பி. 60 க்குள் எழுதி முடித்துவிட்டார். இக் காலக்கட்டங்களில் வாழ்ந்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு, அவரின் குடும்பப் பின்னணி ஆகியவை அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். எனவே, தெரிந்தவை பற்றி மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்காது எனக் கூறுவர்.
பவுல் தம் கடிதங்களின் தலையாகிய நோக்கமாக மேற்கூறியவற்றைக் கொண்டிருந்த காரணத்தால்தான், மரியாவைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பர் விவிலிய அறிஞர்கள்.
2. நான்கு நற்செய்திகள்
2.1. மாற்கு நற்செய்தி
மாற்கு நற்செய்தியில், இரண்டு இடங்களில் மரியாவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று, மரியா இயேசுவைக் காண்பதற்காகத் தேடிவரும் நிகழ்வு (மாற் 3:31-35); இரண்டு, மரியாவின் பெயர் முதன்முறையாக நேரடியாகக் குறிப்பிடப்படும் பகுதி: “இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!” (மாற் 6:3). இவ்விரண்டு பகுதிகளையும் வாசிக்கும்போது, அவை மரியாவை மதிப்புக்குரிய, உயர்வான ஒருவராகக் காட்டவில்லை.
மாற் 3:31-35 பகுதி, ‘இயேசுவின் உண்மையான உறவினர்’ பற்றிய பகுதி. இப்பகுதி மரியாவின் ஊனுடல் தாய்மைக்கு முக்கியத்துவம் தருவதைவிட, இறையாட்சிச் சமூகத்திற்கே அதிக அழுத்தம் தருகின்றது: “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்” என இயேசு கூறுவதாய் உள்ளது.
மாற் 6:3 பகுதி, ‘சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்’ பற்றிய பகுதி. மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை, “மரியாவின் மகன்தானே” எனக் கூறுவதற்கு விவிலிய ஆசிரியர்கள் பின்வரும் விளக்கங்களைக் கூறுகின்றார்கள்:
i) இயேசுவின் பல்வேறு வல்ல செயல்களைக் கண்டு மக்கள் பலரும் வியப்புற்றனர். எனவே, அவர்கள் இயேசுவைச் சாதாரண மனிதர்களில் இருந்து வேறுபட்டவராகக் கண்டார்கள். சிறப்பான வல்லமையும், ஆற்றலும் கொண்டவராகக் கண்டார்கள். எனவேதான், மாற்கு நற்செய்தியாளர் இயேசுவைத் தச்சராக, மரியாவிடம் இருந்து பிறந்த ஒரு சாதாரண மனிதராகக் காட்டும் விதமாக இவ்வாறு எழுதியிருக்கலாம் என்பர். இங்கு, ‘பெண்ணிடம் பிறந்தவராக’ எனப் பவுல் கூறுவதைக் காட்டிலும், மரியாவுக்குப் பிறந்தவர்தாம் இயேசு என்பதை மாற்கு தெளிவுபடுத்துகின்றார்.
2) யூதச் சமூகத்தில் ஒருவரின் தந்தை யார் என்று தெரியாவிட்டால்தான் தாயின் பெயரை இணைத்துக் கூறுவது வழக்கம். மேலும், இயேசுவின் பிறப்பில் யோசேப்புக்குத் தொடர்பில்லை என்பதை விளக்கும் விதமாய், இயேசுவின் கன்னிப்பிறப்பை விளக்கும் விதமாய் இப்பகுதி உள்ளது என விவிலிய ஆசிரியர்கள் சிலர் கூறுவர். இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி மாற்கு நற்செய்தியாளர் தனியாக எழுதவில்லை என்பது நோக்கத்தக்கது. எனவே, மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை “இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!” (6:3) என்று வெளிப்படையாய்க் கூறுகின்றார்.
3) மாற்கு நற்செய்தியாளர் 3:31-35; 6:1-6 ஆகிய இந்த இரண்டு பகுதிகளிலும் யோசேப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதற்குக் காரணம், இயேசுவின் பணிவாழ்விற்கு முன்பே யோசேப்பு இறந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. எனவேதான், இயேசுவை ‘மரியாவின் மகன்தானே’ எனச் சுட்டி அழைத்திருக்கலாம்.
2.2. மத்தேயு நற்செய்தி
மத்தேயு நற்செய்தியில் காணப்படும் மரியா பற்றிய பகுதிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் (1-2 அலகுகள்).
2. மாற்கு நற்செய்தியில் காணப்படும் மரியா பற்றிய பகுதிகளுக்கு இணையான இரண்டு பகுதிகள்: மத் 12:46-50 (மாற் 3:31-35), மத் 13:53-58 (மாற் 6:1-6அ).
மத்தேயு நற்செய்தி 12, 13 ஆகிய அலகுகளில் காணப்படும் மரியா பற்றிய பகுதிகளை ஏற்கனவே மாற்கு நற்செய்தியில் விளக்கிவிட்டதால் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை மட்டும் இங்குக் காண்போம்.
இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள்
1. தலைமுறை அட்டவணையில் இடம்பெறும் பெண்கள்
மத்தேயு நற்செய்தியாளர் சிரியாவில் உள்ள அந்தியோக்கியாவில் வாழ்ந்த யூதக் கிறித்தவர்களை மையப்படுத்திப் பெரும்பாலும் தமது நற்செய்தியை எழுதினாலும், அவர் பிறவினத்துக் கிறித்தவர்களையும் உள்ளடக்கித்தான் தமது நற்செய்தியை எழுதினார் என்று, விவிலிய அறிஞர்கள் ஏற்கின்றனர். யூத, பிறவினத்துக் கிறித்தவர்களுக்கு ஏற்புடையவராக இயேசுவைக் காட்ட வேண்டும் என்பதுதான் மத்தேயுவின் நோக்கமாகும். இப்பின்னணியில், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19) என்னும் உயிர்த்த ஆண்டவரின் கட்டளை நோக்கத்தக்கது. இப்பின்னணியில்தான், தலைமுறை அட்டவணையில் மரியா தவிர்த்து, நான்கு பெண்கள் இடம் பெற்றுள்ளதை நாம் காணவேண்டும். தலைமுறை அட்டவணையில் காணப்படும் தாமார் (தொநூ 38:6-30), இராகாபு (யோசு 2:9-21), ரூத்து (3:6-9,14), பத்சேபா (2சாமு 12:24) ஆகிய நான்கு பெண்களுமே பிறவினத்தைச் சார்ந்த பெண்கள். தாமார், இராகாபு ஆகியோர் கானானியர்; ரூத்து மோவாபியப் பெண்; பத்சேபா ஓர் இத்தியர் (பத்சேபா இஸ்ரயேல் பெண்ணாக இருப்பினும், இத்தியர் இனத்தைச் சார்ந்த உரியாவை மணமுடித்தவர்). இந்த பிறவினத்துப் பெண்கள் நால்வரையும் மத்தேயு இணைத்துள்ளார். இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மக்களுக்கும் உரியது என்ற உண்மையைச் சுட்டிக்காட்ட மத்தேயு நற்செய்தியாளர் இந்த நான்கு பிறவினத்துப் பெண்களையும் இணைத்திருக்க வேண்டும் என்பது, விவிலிய ஆசிரியர்களின் கருத்து.
தலைமுறை அட்டவணையில் காணப்படும் பழைய ஏற்பாட்டுப் பெண்களின் வாழ்வு நமக்கு வியப்பைத் தருகின்றது. அவர்கள் தங்களின் வீரச் செயல்களாலும், தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தன் மூலமாகவும், கடவுளின் வாக்குறுதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதில் அவரின் கருவியாய் செயல்பட்டுள்ளார்கள். இந்த நான்கு பேருமே நடைமுறை இலக்கணத்தைத் தாண்டி, கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றியவர்கள். இவ்வரிசையில்தான் மரியாவும், கடவுளின் மீட்புத்திட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் என்பதைக் குறிக்கும் விதமாய் அவருடைய பெயரும் உள்ளது. இவ்வாறாக, தலைமுறை அட்டவணையில் இடம்பெறும் அனைத்துப் பெண்களுமே மீட்பின் திட்டத்தில் இறைபராமரிப்பை உணர்ந்தவர்கள் ஆவர்.
தலைமுறை அட்டவணையில் காணப்படும் நான்கு பெண்களைப் பற்றிய பகுதிகளை பழைய ஏற்பாட்டில் மேலோட்டமாக வாசிக்கும்போது, அவர்கள் நால்வருமே ‘பாவிப் பெண்களாகவே’ அன்றைய சமூகத்தில் கருதப்பட்டனர் என்று தெரிகிறது. இப்பின்னணியில், மத்தேயு நற்செய்தியாளர் இந்த நான்கு பெண்களையும் தலைமுறை அட்டவணையில் சேர்த்ததன் நோக்கம் தெரிகிறது. மரியா வழியாக இயேசு மானிட உடல் ஏற்றது, அவர் மானிட இனத்தை அவர்களின் பாவங்களில் இருந்து மீட்கவே என்ற உண்மையை வலியுறுத்தவே மத்தேயு இவ்வாறு சேர்த்துள்ளார்.
எனவேதான், மத்தேயு நற்செய்தியாளர் “அவர் (இயேசு) தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (1:21) எனக் கூறுகின்றார். இந்நற்செய்தி எழுதப்பட்ட காலத்திலேயே இயேசுவை மீட்பராக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். எனவேதான், அவரின் பிறப்பு நிகழ்விலேயே அக்கருத்து ஏற்றிக் கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
2. தலைமுறை அட்டவணையில் யோசேப்பு
இயேசுவின் பிறப்பில் யோசேப்புக்குத் தொடர்பில்லை என்பதை மத்தேயு தெளிவாகக் கூறினாலும், தலைமுறை அட்டவணையைக் காணும்போது அங்கு யோசேப்பின் பெயர் இடம்பெறுகின்றது. இதற்கு முக்கியக் காரணம் இயேசுவைத் தாவீதின் மகனாகக் காட்டவேண்டும் என்பதே. தாவீதின் வழியாக ஆசியும், மீட்பும் வரும் (2 சாமு 7 ஆம் அலகு) எனும் பின்னணியில், இயேசுவைத் தாவீதின் மகனாகக் காட்டி, அவரே மீட்பும், ஆசியும் வழங்குபவர் என்று சுட்டிக்காட்டுகின்றார் மத்தேயு நற்செய்தியாளர்.
மேலும், யூதச் சமூகத்தில் மண ஒப்பந்தம் என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. சகோதரனோ, தந்தையோ தாம் திருமண ஒப்பந்தம் நிறைவேற்றுவார்கள். பெண் சம்மதம் என்பதுகூட முக்கியமல்ல. எனவே, சாட்சிகள் முன்பாக மண ஒப்பந்தம் நிறைவேற்றிவிட்டாலே மணமகளுக்கு, மணமகன்மேல் எல்லா உரிமையும் வந்துவிடும். மண ஒப்பந்தமான அந்நேரம் முதல் மண ஒப்பந்தமான அப்பெண் மண ஒப்பந்தமான ஆணுடைய மனைவியாகின்றார். இருப்பினும், மணமகள் தம் தந்தையின் வீட்டில் ஏறத்தாழ ஓர் ஆண்டு வாழ்வார். பின்புதான் மணமகன் வீட்டிற்கு அவர் வருவார். இப்பின்னணியில், மண ஒப்பந்தமான மரியாவுக்கு, தூய ஆவியாரின் துணையுடன் பிறக்கும் குழந்தைக்கு யோசேப்பைத் தந்தை எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை என்பார்கள்.
3. குழந்தைப் பருவ நிகழ்வுகளில் மரியா
மத்தேயு நற்செய்தியில் உள்ள குழந்தைப் பருவ நிகழ்வுகளை வாசிக்கும்போது, மரியா பொதுவாகவே செயல்பாடு குறைவான, அமைதியான பெண்ணாகத்தான் தெரிகிறார். எடுத்துக்காட்டாக, மரியா தூய ஆவியின் துணையோடு இயேசுவைக் கருத்தாங்கியவராகக் காட்டப்படுகின்றார். இங்கு மரியாவின் சம்மதம் கூட கேட்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. எனவே, மத்தேயு நற்செய்தியைப் பொறுத்தமட்டில் குழந்தைப் பருவ நிகழ்வில் மையம் பெறுவது யோசேப்பேயொழிய மரியா அல்ல என்பது தெளிவு. இதற்குக் காரணம், அன்றைய யூதச் சமூகம் ஆண்மையச் சமூகம் என்பதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக, பின்வரும் நிகழ்வுகளைக் கூறலாம்:
i) இயேசுவின் பிறப்பில் யோசேப்புக்கு எந்தப் பங்கும் இல்லையென்றாலும், தலைமுறை அட்டவணையில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது (மத்1:16).
ii) மரியா-யோசேப்பு மண ஒப்பந்தம் ஆன நிலையில் ஆண்டவரின் தூதர் யோசேப்பிடம்தான் வருகின்றார் (மத்1:20).
iii) யோசேப்புதாம் தம் மனைவி மரியாவை தம் இல்லத்தில் ஏற்கின்றார் (மத்1:24).
iஎ) யோசேப்புதாம் தம் மனைவியையும், பிள்ளையையும் அழைத்துக்கொண்டு எகிப்த்துக்குத் தப்பி ஓடுகின்றார் (மத் 2:13); மீண்டும் கலிலேயாவுக்கு அழைத்துச் செல்கின்றார்.
2.3. லூக்கா நற்செய்தி
மத்தேயு நற்செய்தியைப் போன்றே லூக்கா நற்செய்தியிலும் மரியாவைப் பற்றிய பகுதிகளை இரண்டு பகுதிகளாய்ப் பிரிக்கலாம்:
ஒன்று, இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் (1-2 அலகுகள்);
இரண்டு, இயேசுவின் பணிவாழ்வில் காணப்படும் இரண்டு பகுதிகள்: மாற்கு, மத்தேயு நற்செய்திகளில் காணப்படும் ‘இயேசுவின் உண்மையான உறவினர்’ பற்றிய பகுதியும் (லூக் 8:19-21; மாற் 3:31-35; மத் 12:46-50), லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் ‘உண்மையான பேறு’ பற்றிய பகுதியும் (லூக் 11:27-28) ஆகும்.
இப்பகுதியில் குழந்தைப் பருவ நிகழ்வையும், லூக்கா நற்செய்திக்கு மட்டுமே உரிய மரியாவைப் பற்றிய பகுதியையும் காண்போம்.
(தொடரும்)
Comment