No icon

வரலாற்றுத் தொடர் 04

தமிழகத்தில் கிறிஸ்தவம்

மயிலையில் போர்த்துக்கீசிய கத்தோலிக்கர்கள்

போர்த்துக்கீசிய மற்றும் ஸ்பெயின் கத்தோலிக்கர்கள் ஆழமான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் ஆவர். மத்திய காலக் கட்டத்தில் திருத்தந்தையின் தலைமையின் கீழ் தீவிரமாக செயல்பட்டனர். எனவே, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு இந்நாடுகளின் உதவியைத் திருத்தந்தையர்கள் நாடினர். இக்கண்டங்களில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கு 15 ஆம் நூற்றாண்டில் திருத்தந்தையர் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் அரசர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி அவர்களே, புதிய காலனி ஆதிக்க நாடுகளில் மறைத்தளங்கள் (Missions), மறைத்தூது வட்டங்கள் (Apostolic Prefectures), மறைமாவட்டங்கள் (Dioceses), ஆலயங்கள் எழுப்ப, நிர்வகிக்க அதிகாரம் பெற்றனர். மேலும் குருக்கள், ஆயர்களை நியமிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருத்தந்தை இவர்களுக்கு வழங்கிய இந்த ஞான சலுகையை போர்த்துக்கீசிய மொழியில்பதுரவாதோ, ஸ்பானிய மொழியில்பத்ரனாதோ என்றனர். ஆசியாவில் வணிகத்திற்காகக் கிழக்கிந்திய வாணிபக் கழகத்தை நிறுவி, போர்த்துக்கீசியர்கள் கிறிஸ்து அறிவிப்புப் பணியிலும் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டனர்.

இந்தியாவில் போர்த்துக்கீசியர்கள்

வாஸ்கோடகாமா போர்த்துக்கலிலிருந்து இந்தியாவிற்கான கடல்வழிப் பாதையைக் கண்டுப்பிடித்த பிறகு, போர்த்துக்கல் அரசர் முதலாம் மனுவேல், மலபாருடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திட, வணிகர்கள், மாலுமிகள் மற்றும் அவர்களின் ஆன்மீகத் தேவைக்காக அருட்பணியாளர்களையும் அனுப்பி வைத்தார். மார்ச் 09, 1500 இல், மாலுமிகளின் தலைவன் கப்ரால் தலைமையில் 13 கப்பல்கள் லிஸ்பன் துறைமுகத்திலிருந்து மலபாரை நோக்கி புறப்பட்டது. இவர்கள் 1500 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று, கோவாவின் அங்கதீவா என்ற துறைமுகத்தை அடைந்தனர். கோவாவில் சில வணிகர்களும், அருள்தந்தையர்களும் இறங்கிக் கொண்டனர். மற்றவர்கள் கள்ளிக்கோட்டை கரையை அடைந்து, மலபார் மன்னன் சாமுந்திரியின் ஆதரவுடன் வணிகத்திலும், மறைப்பணியிலும் ஈடுபட்டனர். அக்டோபர் மாதத்தில் சிலர், போர்த்துக்கீசியரின் முகாம்களைத் தாக்கி, சிலரைக் கொன்றனர். அவர்களில் மூன்று பிரான்சிஸ்கன் குருக்களும் அடங்குவர். இந்தக் கோர நிகழ்விற்குப் பிறகு, மாலுமி கப்ரால் கொச்சினுக்கு கப்பல்களைச் செலுத்தினார். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும், பேராதரவும் கிடைத்தது. எனவே, கொச்சின் நகரில் நிலையான வாணிபக் கழகத்தையும், மறைப்பணித் தளத்தையும் நிறுவினர்.

கி.பி. 1510 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், ஆல்புகெர்க் முகமதியரிடமிருந்து கோவாவை கைப்பற்றினார். அன்று முதல் 1961 ஆம் ஆண்டு வரை, கோவா போர்த்துக்கீசியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. கோவாவிலிருந்து முகமதியர்கள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டு, அவர்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தடயங்கள் அழிக்கப்பட்டன. முகமதியரின் கடும் வரிவிதிப்பால் அல்லலுற்ற இந்துக்கள், இசுலாமிய ஆட்சியின் முடிவால் மகிழ்ந்தனர். ஆளுநர் நுனோ டகுணா 1530 ஆம் ஆண்டு, போர்த்துக்கீசியரின் ஆசிய நாடுகளின் தொடர்புத் தலைநகரமாக கோவாவை மாற்றினார். போர்த்துக்கீசியர்கள் கோவா, டையு, டாமன், மும்பை, மங்களூர், கொச்சின், மலபார், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மன்னார், மயிலாப்பூர் போன்ற இந்தியாவின் கடலோரங்களில் தங்களின் வணிகத் தளங்களை நிறுவினர்.

புனித தோமாவின் கல்லறை

கி.பி. 1501 இல், போர்த்துக்கல் அரசர் தோம் மனுவேல், மயிலாப்பூரிலுள்ள திருத்தூதர் தோமாவின் கல்லறையைப் பற்றி, ஐரோப்பாவின் அனைத்து அரசர்களுக்கும் ஒரு சுற்றுமடலை அனுப்பினார். அதன்பிறகு, 1515 இல், கோவாவின் போர்த்துக்கீசிய ஆளுநர் பிரான்செஸ்கோ தெ அல்மெய்டா ஓர் ஆய்வுக் குழுவை மயிலாப்பூருக்கு அனுப்பினார். அவர்கள் கல்லறையையும், அதனருகில் இருந்த ஒரு சிற்றாலயத்தையும் கண்டுபிடித்தனர். 1517 இல், தி ஜியோ பெர்னாண்டஸ் மற்றும் பெஸ்தியோ பெர்னாண்டஸ் என்ற போர்த்துக்கீசிய கடற்பயணிகள் மயிலையில் தங்கி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அக்கல்லறை திருத்தூதர் தோமாவின் கல்லறை என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் 100 க்கும் மேற்பட்ட போர்த்துக்கீசியர்கள் புனித தோமாவின் கல்லறையைச் சுற்றி குடியேறி, அப்பகுதிக்கு சாந்தோம் (புனித தோமா) எனப் பெயரிட்டனர். 1538 ஆம் ஆண்டு முதல் திருத்தூதர் தோமா கல்லறை போர்த்துக்கீசிய குருக்களின் கண்காணிப்புக்கு வந்தது. அந்தோணி பெஞ்சியாதோ என்ற பிரான்சிஸ்கன் குரு, தோமா கல்லறையின் முதல் ஆன்மீக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கக்காலங்களில் பிரான்சிஸ்கன் துறவிகள் தோமாவின் கல்லறையில் தங்கள் வழிபாடுகளை நடத்தினர்.

ஏறக்குறைய 1545 ஆம் ஆண்டில், மூன்று மாதங்கள், புனித பிரான்சிஸ் சவேரியார் மயிலையில் தங்கி, மலாக்கா நோக்கிய தனது மறைப்பணி பயணத்திற்காக தயாரித்து வந்தார். புனித தோமாவின் கல்லறையில் தனது மறைத்தூதுப் பணிக்காக, சிறப்பாக மன்றாடினார். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க புனித சவேரியார், அல்போன்சோ சிப்பிரியன் என்ற இயேசு சபை குருவை 1547 இல், மறைப்பணிக்காக மயிலைக்கு அனுப்பி வைத்தார். 1575 இல், இயேசு சபையினர் இறையன்னைக்கு (Mater-Deus) ஆலயம் எழுப்பி, மறைப்பணி ஆற்றி வந்தனர். தொமினிக்கன், அகஸ்தீனிய சபையினர் மற்றும் மறைமாவட்டக் குருக்களும் இந்நகரில் இறைப்பணி ஆற்றினர். இவ்வாறு, கிறிஸ்தவர்களின் நகரமாகிய மயிலையை திருத்தந்தை ஐந்தாம் பவுல் கி.பி. 1606 ஆம் ஆண்டு, ஜனவரி 9 அன்று மறைமாவட்டமாக உயர்த்தினார். 1635 ஆம் ஆண்டு, மயிலையில் 120 போர்த்துக்கீசிய குடும்பங்களும், 200 இந்தியக் கிறிஸ்தவ குடும்பங்களும், மயிலைக்கு வெளியே 6000 இந்தியக் கிறிஸ்தவர்களும் வாழ்ந்ததாக பொக்காரே என்பவர் தனது மடலில் கூறுகின்றார். புனித தோமாவின் இன்றைய கல்லறை ஆலயமானது, புனித சாந்தோம் பேராலயம் 1896 இல், ஆங்கிலேய அரசு கோதிக் கலைநயத்துடன் கட்டியெழுப்பியது. 1927 இல், திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இவ்வாலயத்தை திருத்தலப் பேராலயமாக உயர்த்தினார். 1986 இல், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் இப்பேராலயத்திற்கு வருகை புரிந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் தேசியத் திருத்தலமாக அறியப்படுகிறது. இங்கு மயிலை அன்னையின் பக்தியும் புகழ்பெற்றது.

மயிலையில் கிறிஸ்தவ குழுமம்

இந்தியாவில் பதுரவாதோ அமைப்பின்கீழ் கோவா முதல் மறைமாவட்டமாக, 1533 ஆம் ஆண்டு, ஜனவரி 31 அன்று உருவாக்கப்பட்டது. மீண்டும் 1558 இல், உயர் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டு, மலாக்கா (1557), கொச்சின் (1558), மாக்கு, சீனா (1575), புனாய், ஜப்பான் (1588), கிராங்கனூர் (1601) மற்றும் மயிலாப்பூர் (1606) என, தெற்காசியாவின் அனைத்து மறைமாவட்டங்களும் இதன்கீழ் செயல்பட்டன. அந்நாட்களில் கோவா, கிழக்கு ரோமாபுரி என அழைக்கப்பட்டது. பதுரவாதோ ஆயர்களை, போர்த்துக்கீசிய அரசர் தெரிந்தெடுப்பார், அதற்கு திருத்தந்தை அங்கீகாரம் அளிப்பது பதுரவாதோ அமைப்பின் மரபாகும். 1539 இல், நிறுவப்பட்ட கோவாவின் முதல் ஆயராக பிரான்சிஸ்கன் குரு ஜோ தெ அல்புகர்க் நியமிக்கப்பட்டார். இவர் தனது மேய்ப்புப்பணியின்போது, மயிலாப்பூருக்கு வருகை தந்து, சாந்தோமில் கிறிஸ்தவ வளர்ச்சிக் கண்டு மகிழ்ந்தார். 1557 இல், கொச்சின் மறைமாவட்டமாகப் பிரிந்தபோது, மயிலை அதன் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. 1588 இல், கொச்சின் ஆயராக நியமிக்கப்பட்ட பிரான்சிஸ்கன் குரு ஆர்த்ரே தெ புனித மரியா, நான்கு முறை மயிலைக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு, மயிலையை தனி மறைமாவட்டமாக உயர்த்திட பரிந்துரை செய்தார். இவ்வாறு, திருத்தந்தை ஐந்தாம் பவுல், மயிலையை சாந்தோம் என்ற பெயரில் தனி மறைமாவட்டமாக 1606 ஆம் ஆண்டு, ஜனவரி 9 அன்று நிறுவி, அதன் முதல் ஆயராக அகஸ்தீனியக் குரு செபஸ்தியோ தெ புனித பேதுரு என்பவரை நியமித்தார்.

1639 இல், ஆங்கிலேயரால் கூவம் ஆற்றின் வடக்கே சென்னை மாநகர் நிறுவப்படுவதற்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பே சாந்தோம், கிறிஸ்தவ நகரமாக உருவெடுத்தது. 16 ஆம் நூற்றாண்டிலே லஸ் ஆலயம் (1516), சாந்தோம் பேராலயம் (1523), பரங்கி மலை (1547), சின்ன மலை (1551), இறையன்னை ஆலயம் (1575) போன்ற புகழ்பெற்ற ஆலயங்களை போர்த்துக்கீசியர்கள் எழுப்பி, மயிலையில் கத்தோலிக்க விசுவாசத்தை வேரோடச் செய்தனர். இங்கு வாழ்ந்த போர்த்துக்கீசிய கத்தோலிக்கர்கள், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, பழக்க-வழக்கம் ஆகியவற்றை தெரிந்துக் கொண்டு, அவற்றைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் செலுத்தினர். போர்த்துக்கீசிய வாணிபக் கழகத்தில் தலைமை பொறுப்பு அதிகாரிகள், படைவீரர்கள், எழுத்தர், விற்பனையாளர் போன்ற பணிகளையும், உள்ளூரில் வேறு சில பணிகளையும் மேற்கொண்டனர். ஆழமான கத்தோலிக்க இறைநம்பிக்கைக் கொண்ட போர்த்துக்கீசியர்கள், ஞாயிறு கூட்டு வழிபாட்டை தவறாமல் கடைப்பிடித்தனர். திருப்பலி, திருச்செபமாலை, திருப்பயணம், ஒறுத்தல், உதவிகள் செய்தல் போன்ற ஆன்ம காரியங்களில் சிறந்து விளங்கினர்.

1538 இல், போர்த்துக்கல் அரசருக்கு எழுதப்பட்ட மடலில், 60 போர்த்துக்கீசிய குடும்பங்கள் மயிலையில் வாழ்ந்ததாகவும், ஏறக்குறைய 1800 உள்ளூர் மக்கள் திருமுழுக்குப் பெற்றதாகவும் அக்குறிப்பு கூறுகின்றது. 1545 இல், மூன்று மாதங்கள் இங்கு தங்கிய புனித பிரான்சிஸ் சவேரியார் 100 போர்த்துக்கீசிய குடும்பங்கள் வாழ்வதாக எழுதியுள்ளார். புனித தோமாவின் கல்லறையை ஐந்து மறைமாவட்டக் குருக்கள் பராமரிப்பதாக அறிகின்றோம். மறைப்பணிக்கெதிரான விஜய நகர அரசின் கட்டுப்பாடுகளைக் கடந்தும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் தொடர்ந்து ஏற்றம் கண்டது. இந்தியக் கிறிஸ்தவர்கள் திருமுழுக்கு யோவான் ஆலய வழிபாடுகளில் பங்கேற்றனர். இவ்வாலயம் கொச்சின் ஆயர் ஜார்ஜ் தெ தெமுரோ அவர்களால் இயேசு சபையினருக்கு வழங்கப்பட்டது. மயிலையில் இயங்கியமிரிஷகோர்தியாஎன்ற இரக்கத்தின் இல்லம், ஒவ்வொரு ஆண்டும் சில ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவியது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 200 குழந்தைகள் 1577 ஆம் ஆண்டு, பயின்றதாக அறியமுடிகின்றது. இந்தியக் கிறிஸ்தவர்களின் நலனுக்காக, இயேசு சபையினரின் கண்காணிப்பில் இறை அன்னை ஆலயம் 1575 இல் எழுப்பப்பட்டது. இங்கு ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் தமிழில் மறையுரை வழங்கப்பட்டது. மேலும், மறைக்கல்வி நாளும் குழந்தைகளுக்கு தமிழில் பயிற்றுவிக்கப்பட்டது.

1644 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, 1700 கிறிஸ்தவர்கள் இவ்வாலய உறுப்பினர்கள் ஆவர். பிரான்சிஸ்கன் குருக்கள் பொறுப்பிலிருந்த லஸ் ஆலயத்தில் 1630 ஆம் ஆண்டு, தகவலின்படி 1500 பங்கு மக்கள் இருந்தனர். டச்சு ஆளுகையின்கீழ் இருந்த, புலிகாட் என்ற பழவேற்காட்டிலும் ஏறக்குறைய 120 குடும்பங்கள் இக்காலக்கட்டத்தில் வாழ்ந்தனர். மயிலையில் போர்த்துக்கீசியரும், இந்தியக் கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்தனர். புனித சாந்தோம் பகுதிக்கு வெளியே இசுலாமியர்களும், சைவ, வைணவ சமயத்தாரும் வாழ்ந்தனர். 1646 ஆம் ஆண்டு முதல் 1680 ஆம் ஆண்டு வரை, மயிலை பல்வேறு படையெடுப்புகளால் பாதிக்கப்பட்டது. 1646 - 1662 இல், கோல்கொண்டா படைகள் சாந்தோம் மற்றும் போர்த்துக்கீசிய வாணிபக் கழகத்தினை தாக்கி, அழிக்க முயற்சித்தனர். 1672 ஆம் ஆண்டு முதல் 1674 ஆம் ஆண்டு வரை, பிரெஞ்சு படைகள் சாந்தோமிலும் நுழைந்து, கைப்பற்ற முயற்சித்தனர். இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டபோதும், பல்வேறு உடன்படிக்கைகளால் சாந்தோம் நகரும், வாணிபக் கழகமும் காப்பாற்றப்பட்டன.

(தொடரும்)

Comment