No icon

புதிய மரியியல் தொடர் 04-மரியா அன்றும் இன்றும்

புதிய ஏற்பாடு காட்டும் “வரலாற்று” மரியா

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆய்வில் ஈடுபடக்கூடியவர்கள் எவ்வாறுவரலாற்றுஇயேசுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களோ, அவ்வாறே, “வரலாற்றுமரியாவைத் தேடும் முயற்சியில் இன்று மரியியலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் மரியாவை அவர் வாழ்ந்த சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, சமய, பண்பாட்டுப் பின்னணியில் காண முயலுகின்றார்கள். இவர்களின் இந்த முயற்சி, எபேசு சங்கம் தொடங்கி, பெண்ணிய இறையியல் மலரத் தொடங்குவதற்கு முன்புவரை ஆண்கள் உருவாக்கியிருந்த மரியா பற்றிய பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வை கொண்டதாகும். இந்த அலகில், திரு அவை மரபில் ஆண்கள் உருவாக்கிய மரியா யார்? பெண்ணிய இறையியலாளர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன? இன்று பெண்ணிய இறையியலாளர்கள் படம்பிடித்துக் காட்டும்வரலாற்றுமரியா யார் என்பவற்றைக் காண்போம்.

. ஆண்கள் உருவாக்கிய மரியா பற்றிய பார்வை

திரு அவை மரபில் உருவான மரியா பற்றிய பார்வை என்பது, ஆண்கள் எவ்வாறு மரியாவைப் பார்த்தார்களோ, அது மட்டுமின்றி, அவர்கள் எவ்வாறு பெண்களைப் பார்த்தார்களோ அவற்றையெல்லாம் பிரதிபலிப்பதாக இருந்தது என்கின்றார் கார்ல் ரானர். மரபில் மரியாவை மிகவும் உயர்வான இடத்தில் வைத்துப் பெருமைப்படுத்தினாலும், அவரைப் பெரும்பாலும் கீழ்ப்படிதல் உள்ளவராய், தாழ்ச்சியின் அடையாளமாய், பொறுமையுடையவராய், துன்பங்களை ஏற்பவராய், இறைத்திட்டத்திற்குத் தம்மை ஆட்படுத்தியவராய், எவ்விதத் தீமையும் அணுகாதத் தூயவராய், உடலை மறுத்து வாழ்ந்த ஆன்மீகப் பெண்ணாய், பிறருக்காகப் பரிந்து பேசுபவராய் மட்டுமே கண்டார்கள். எதிர் எதிர் பண்புகளாகக் கருதப்படும் இரண்டு பண்புகளையும் கூட, மரியாவுக்கு ஏற்றிக் கூறினர்: ஒருபுறம் மரியாவைஆண்டவரின் அடிமைஎன்றும், மறுபக்கம் அவரைவிண்ணக, மண்ணக அரசிஎன்றும் கூறினர். ஒருபுறம் மரியாவைக்கன்னிஎன்றும், மறுபக்கம் அவரைத்தாய்என்றும் கூறினர். ஒருபுறம் அவரை அனைவருக்கும்மாதிரிஎன்றும், மறுபக்கம்யாரும் அடைய முடியாத் தூயவர்என்றும் உரைத்தனர். மேலும், திரு அவையின் மரபில் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பண்புகளை மரியாவுக்கு அடையாளப்படுத்தினார்கள். கான்ஸ்டன்டைன் காலத்தில் உடல்சார்ந்த இன்பங்களைத் தவிர்த்து வாழ்ந்த, அன்றைய தன்னொறுப்பு இயக்கத்தினர், மரியாவைக்கன்னியர்களின் அரசியாகப்பார்த்தார்கள். இவ்வாறு, தன்னொறுப்பாளர்களுக்கும், மணத்துறவு பூண்டவர்களுக்கும், பாதுகாவலியாக மரியா பார்க்கப்பட்டார். மரியாவைக் கன்னிமை வார்த்தைப்பாடு எடுத்தவராகச் சித்தரித்தார்கள். 12 ஆம் நூற்றாண்டு என்பது, மரியா திரு அவையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஒரு காலக்கட்டம். இக்காலக்கட்டத்தில் நில பிரபுத்துவம் நடைமுறையில் காணப்பட்டது. இக்காலக்கட்டத்தில், வசதி படைத்த, செல்வாக்குள்ள பெண்கள் துறவற சபைகளில் சேர்ந்தார்கள். இப்பெண்களின் வாழ்வுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில்தான், மரியாவையும் கண்டார்கள். இக்காலக்கட்டத்தில் மரியாவை ஒரு சாதாரணப் பெண்ணாகப் பார்க்கும் பார்வை காணப்படவில்லை; மாறாக, அவரைவிண்ணக அரசியாகக்கண்டார்கள். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில், கணவருக்குப் பணிவிடை புரியும் ஒரு நல்ல குடும்பப் பெண்ணாகவும், பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, பாதுகாக்கும் தாயாகவும் மரியாவைக் கண்டார்கள். இவ்வாறாக, ஆணாதிக்கம் மேலோங்கியிருந்த பல்வேறு காலக்கட்டங்களில், ஆண்கள் தங்களின் பண்பாட்டில் பெண்களை எவ்வாறு கண்டார்களோ அவ்வாறே மரியாவையும் பார்த்தார்கள். இதன்மூலம் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு மரியாவைப் பற்றிய பல்வேறு படிப்பினைகளை ஆண்கள் பயன்படுத்தினார்கள். ஆகவே, ஆண்கள் கட்டமைத்தபெண்மைப் பண்புகளைஒரு பெண் கொண்டிராத சூழலில், அவரைப் பெண் என்றே அழைக்க முடியாது. மாறாக, ஆண்கள் கட்டமைத்தபெண்மைப் பண்புகளைக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணே சிறந்த பெண்ணாக ஆண்களால் கருதப்பட்டார். அத்தகைய ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண்மைப் பண்புகளையெல்லாம் மரியாவுக்கும் ஏற்றிக் கூறினார்கள்.

. ஆணாதிக்க மரியியலுக்கு எதிர்ப்பு

மரபில் உருவான ஆண்கள் உருவாக்கிய மரியா பற்றிய பார்வைகள் அனைத்தும் ஆண்களின் அனுபவத்திலிருந்து உருவானவையாகும். அது பெண்களின் நலிவிற்குத்தான் பெரும்பாலும் இட்டுச்சென்றது. எனவே, மரியா பற்றி ஆண்கள் உருவாக்கிய பார்வைகளை இன்று பெண்ணிய இறையியலாளர்கள் பொருள்கோளியல் முறையைப் பயன்படுத்திக் (Hermeneutics of Suspicion) கேள்விக்குள்ளாக்குகின்றார்கள். மேலும், மரியா பற்றிய புதிய பார்வை உருவாக வேண்டும் என விரும்புகின்றார்கள். எனவே, மரியாவைப் புனிதமானவராக, யாரும் அணுகமுடியாத உயர்ந்த இடத்தில் இருப்பவராய், ஒருவகையில்கடவுளாகக் காணும் நிலையை இவர்கள் கேள்விக்கு உட்படுத்துகின்றார்கள் மரியாவை. இன்று வாழும் பெண்களின் அனுபவத்திலிருந்து, அவர்களின் விடுதலைக்கு மிகச் சிறந்த அடையாளமாகக் காட்ட விரும்புகின்றார்கள்.

எலிசபெத்து ஜான்சன் மரியாவைப் புனிதர்களின் கூட்டத்தில் ஒருவராய் சுட்டிக்காட்டி, அவரை நம் தோழராக, நண்பராக, சகோதரியாகக் காண்கின்றார். மரியா கடவுளுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உறவைச் சுட்டிக்காட்டி அவரைக்கடவுளின் நண்பராகச்சித்தரிக்கின்றார். மரியா, அன்றைய அநீதச் சூழலுக்கு எதிராகத் தமது பாடல் மூலமாகக் குரல் எழுப்பியதைச் சுட்டிக்காட்டி, அவரைஇறைவாக்கினர்என வருணிக்கின்றார். இவ்வாறாக, “வரலாற்றுமரியாவின் வாழ்வு நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருவதாய், தூண்டுகோலாய் அமைந்துள்ளது என்கிறார் எலிசபெத்து ஜான்சன்.

கத்தரீனா கால்கஸ் என்பவர் மரியாவைநம்பிக்கையாளர்களில் எல்லாம் முதன்மையானவர்என்கின்றார். மேலும், அவரை ஒரு தாயாகப் பார்ப்பதற்கும் மேலாக அவரை நம் சகோதரியாக முதன்மைப்படுத்த வேண்டும் என்கின்றார். மரபில் ஆண்கள், குறிப்பாக அருள்பணியாளர்கள், உருவாக்கிய மரியா பற்றிய பார்வையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். அதுதான் பெண் விடுதலைக்கு வழிவகுக்கும் என்கின்றார். காரணம், மரியாவைப் பெரும்பாலும்ஆண்கடவுளைச் சார்ந்திருந்த நபராகவே - தந்தையின் மகனாக, இயேசுவின் தாயாக, தூய ஆவியாரின் துணையாளராக - ஆண்கள் சித்தரித்துள்ளார்கள். அவ்வாறே, கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் உள்ள உறவை விளக்கும்போதும், இயேசு கிறிஸ்துவுக்கும், திரு அவைக்குமுள்ள உறவை விளக்கும்போதும், மரியாவை இஸ்ரயேல் மக்களுக்கும், திரு அவைக்கும் ஒப்புமைப்படுத்திப் பேசியுள்ளார்கள். இத்தகைய உருவக ஒப்பீடுகளில் மரியாவுக்கு இரண்டாம் இடத்தையே வழங்கியுள்ளார்கள். ஆண்கள்தான் முதன்மையான இடத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். மரியா பற்றிய இத்தகைய ஒப்பீடுகள் அனைத்தும், இன்று வாழும் பெண்கள், ஆண்களைச் சார்ந்து வாழ்வதற்குத்தான் வழிவகுக்கும் எனவும், பெண்கள் தங்களிலேயே முழுமையானவர்கள், தனியாக வாழும் திறன்படைத்தவர்கள் என்பதை இவை மறுக்கின்றன எனவும், கத்தரீனா கால்கஸ் சுட்டிக்காட்டுகின்றார். இத்தகையோரின் சிந்தனை அடிப்படையில், புதிய ஏற்பாடு காட்டும்வரலாற்றுமரியா யார்? என்பதை அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

Comment