No icon

‘தம்பிரான் வணக்கம்’

தமிழகத்தில் கிறிஸ்தவம்

2.4 தமிழ் அச்சுப்பணியில் ஹென்றி ஹென்றிகஸ்

தமிழ் அச்சுத்துறையின் தந்தை எனப் போற்றப்பெறும் இயேசு சபைக்குரு ஹென்றி ஹென்றிகஸ், 1520 இல், போர்த்துக்கல் விலாவிக்கோசா என்ற நகரில் பிறந்தார். மறைப்பணி வாழ்வில் ஆர்வம் கொண்டு, பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஆனால், இவர் ஒரு யூதவழி மரபினர் என்பதால் வெளியேற்றப்பட்டார். கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தில் 1545 ஆம் ஆண்டு, திருஅவை சட்டப்படிப்பை முடித்தார். 1540 இல், துவங்கப்பட்டு, வேகமாக வளர்ந்து வரும் இயேசு சபையில் சேர்ந்து, 1546 இல், குருவாக அருட்பொழிவுப் பெற்றார். இந்திய மறைப்பணிக்காக 1546 இல், 26 குருக்களில் ஒருவராக ஹென்றிகஸ் கோவா வந்தடைந்தார். இவர் முத்துக்குளித்துறையில் பணியாற்றிட, அந்தோனி கிரிமினாலிக்கு உதவியாக சவேரியாரால் அனுப்பி வைக்கப்பட்டார். அந்நேரத்தில், மலாக்காவில் மறைப்பணியில் ஈடுபட்டிருந்த சவேரியார், தமிழ் படிக்க தடுமாறிய ஹென்றிகஸை நல்ல தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ளவும் உற்சாகப்படுத்தினார். அவரின் ஆலோசனையை ஏற்று, புன்னைக்காயல் மக்களோடு நெருங்கிப்பழகி, தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு, அவர்களின் வழக்கிலே தமிழை அழகாக உச்சரித்தார். இவ்வாறு, தமிழ் மொழியில் தேர்ச்சிப்பெற்ற முதல் ஐரோப்பியர் என்ற பெருமையை பெற்றார். தந்தை கிரிமினாலியின் மறைசாட்சி மரணத்திற்குப்பிறகு, 1549 இல், முத்துக்குளித்துறை மறைத்தளத்தின் தலைவராக ஹென்றிகஸ் பொறுப்பேற்றார். துவக்கத்தில் போர்த்துக்கீசிய மொழியை கலந்து பேசியவர், காலப்போக்கில் நற்றமிழில் பேசுவதில் தேர்ச்சிப் பெற்றார்.

தமிழில் முதலில் அச்சிடப்பட்டதம்பிரான் வணக்கம்

அச்சு இயந்திரம் கோல்டுசிமித் ஜோகன்ஸ் குட்ன்பர்க் என்ற ஜெர்மானியரால் 1440 இல், கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் அச்சகம் போர்த்துக்கீசியர்களின் முயற்சியால் ஏப்ரல் 30, 1556 இல், கோவாவின் புனித பவுல் கல்லூரியில் நிறுவப்பட்டது. ஜோவ் தெ பஸதாமந்தே இந்த அச்சகத்தின் பொறுப்பை ஏற்று, முதலில் மெய்யியல் சார்ந்த நூலை 1557 இல் வெளியிட்டார். இந்நூல் இலத்தீன் மற்றும் போர்த்துக்கீசிய மொழியில் வெளியிடப்பட்டது. தமிழர்கள் காலந்தொட்டு தங்கள் எண்ணங்களை, வரலாற்றை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். போர்த்துக்கீசியரின் வருகைக்குப் பிறகு, அச்சகம் இந்தியாவில் நிறுவப்பட்டப்பிறகு, தமிழன் தொன்மையான நூல்கள் அச்சிலேற்றப்பட்டன. ஐரோப்பிய அருள் தந்தையர்கள், தங்கள் கிறிஸ்தவ மறைப்பணியின் வசதிக்காக அச்சகத்தை நிறுவி, பல கையேட்டுப் பிரதிகள், நூல்கள் வெளியிட்டனர். “தம்பிரான் வணக்கம்தமிழில் முதலில் அச்சிடப்பட்ட நூல் என்ற பெருமையை பெறுகின்றது. இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் முதலில் அச்சிலேறியது என்ற சிறப்பை பெற்றது. தம்பிரான் வணக்கம் என்ற நூலை, தந்தை ஹென்றிகஸ் 1578 இல், தமிழில் வெளியிட்டார். தம்பிரான் என்றால் கடவுள். ஆகவே, தம்பிரான் வணக்கம் என்பது, இறைவணக்கமாகும். இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும். 1554 இல், மார்கோசி சொரிசி, தமிழ் சொற்களை பயன்படுத்தி, இலத்தீன் மொழி வரிவடிவத்தில் 38 பக்கங்களில்டாக்ட்ரினா கிறிஸ்டம்’’ (திரு அவையின் மறையுண்மைகள்) என்ற நூலை, லிஸ்பன் நகரில் வெளியிட்டார். இது மக்கள் வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் செபங்களை உள்ளடக்கிய நூலாகும். இந்நூலை தமிழ் மொழி வரிவடிவத்தில் கொண்டு வெளியிட விரும்பிய ஹென்றிகஸ், பீட்டர் மனுவேல் துணையுடன் தமிழாக்கம் செய்து, 1578 இல், தம்பிரான் வணக்கம் என்ற பெயரில், இயேசு சபை கல்லூரி கொல்லத்தில் வெளியிட்டார். கோன்சால்வசு என்பவர்தான் தமிழ் அச்சுக்களை உருவாக்கிட பெரிதும் உழைத்தார். பரதவர்கள் பணமுடிச்சுகளை தந்து உதவினர். இதற்காக பெரும் தொகையை திரட்டி, தமிழ் அச்சுப் பலகையை உருவாக்கி, தந்தை ஹென்றிகஸ் தமிழ் இலக்கிய உலகத்தில் முத்திரை பதித்தார். தம்பிரான் வணக்கம் நூலானது, திருச்சிலுவை அடையாளம் வரைதல், நம்பிக்கை அறிக்கை, மிகவும் இரக்கமுள்ள தாயே மன்றாட்டு, திரு அவைக் கட்டளைகள், திருவருட்சாதனங்கள் ஆகிய செபங்களை உள்ளடக்கிய 16 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் அமெரிக்காவின் ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஹென்றிகஸின் இலக்கியம் மற்றும் மருத்துவப் பணிகள்

கிறிச்சிதியானி வணக்கம்என்ற நூல், தமிழில் இரண்டாவதாக அச்சிடப்பட்டது. கிறிச்சிதியானி என்றால், கிறிஸ்தவம் அதாவது, கிறிஸ்தவர் வணக்கம் எனப் பொருள்படும். 122 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 1579 இல், கொச்சியில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்விப்பதில் நடையில், தூத்துக்குடி வழக்கில் ஆசான்-சீடன் உரையாடலாக அமைந்துள்ளது. “அடியார் வரலாறுஎன்ற புனிதர்களின் வரலாற்று நூலையும் வெளியிட்டார். 1552 இல், இலத்தீன் இலக்கண முறைகளோடு ஒப்பிட்டு, தமிழில் ஓர் இலக்கண நூல், ஓர் அகர முதலி மற்றும் தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி, கிறிஸ்தவத்தின் தத்துவம், கிறிஸ்துவின் வரலாறு போன்ற நூல்களையும் வெளியிட்டார். மூன்றாவது நூல் முதல் புன்னைக்காயலில் அச்சிடப்பட்டது. 1572 இல், கோவாவில் முதல் தமிழ் அச்சகத்தை நிறுவினார். இதுவே, இந்திய மொழிகளுக்காக நிறுவப்பட்ட முதல் அச்சகமாகும். இந்த அச்சுக்கூடங்கள் மூலம் ஓலைச்சுவடிகளையும் வெளியிட்டது, ஹென்றிகஸ் தமிழுக்கு ஆற்றிய பெருந்தொண்டாகும். இவ்வாறு, சமய நூல்கள் வழியாக தமிழ்ப்பணியை செம்மையுற ஆற்றினார். மேசை, துப்பாக்கி, ரசீது, சாவி, அலமாரி, பொத்தான், பிஸ்கோத்து, வராண்டா, பேனா, ஜன்னல் போன்ற போர்த்துக்கீசிய சொற்களை தமிழில் புதிய கலைச் சொற்களாக உருவாக்கினர்.

உலகப் படைப்பு, வானதூதர்கள், மனிதர்கள், கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்ப்பு போன்ற விசுவாச படிப்பினைகளை, மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், ஒரு நூலை இயற்றினார். மேலும், துணிகளில் இவைப் பற்றிய ஓவியங்களை வரைந்து, கிராமம் தோறும் எடுத்துச் சென்று, மக்களுக்கு போதித்தார். மறைப்பணி தோழமைக்குழுவும் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். ஒப்புரவின் மகத்துவத்தைப் புரிந்துக் கொள்வதற்கும் ஒரு நூலையும் எழுதினார். தந்தை ஹென்றிகஸ் அச்சிடுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழறிஞர் என அறியப்பட்ட போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் குரு ஜோவ் தெ வில்லா தெ கோந்தே, “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, அருள் நிறை மரியே, நம்பிக்கை அறிக்கை மற்றும் வேறு சில தமிழ் செபங்களையும்இலத்தீன் வரிவடிவத்தில் அச்சிட்டிருந்தார். இச்செபங்கள் பெரும்பாலும் பேச்சுவழக்கில் இருந்தன. இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு அச்சடிக்கப்பட்ட இந்நூலே தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட நூலாகும். அந்நாட்களில், இந்நூல் ஐரோப்பிய மறைப்பணியாளர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

தந்தை ஹென்றிகஸ் 1587 இல், சுதேசிக் குருக்களை உருவாக்க தூத்துக்குடியில் 26 மாணவர்களைக் கொண்டு, ஒரு குருமடத்தை நிறுவினார். 1589 இல், குருமாணவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது, இவர்களில் 22 பேர் இலத்தீன் மொழியிலும் பயிற்சிப் பெற்றனர். தமிழ், இலத்தீன், ஒழுக்கநெறி, இறையியல், பாடல்கள் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இயேசு சபையினருக்கு மொழிப் பெயர்ப்பாளராக உதவிட போர்த்துக்கீசிய மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது. 1601 இல், 8 தமிழ் குருக்கள் முத்துக்குளித்துறையில் ஒப்புரவு திருவருட்சாதனத்திற்கு, இயேசு சபையினருக்கு பெரும் உதவியாக இருந்தனர். 1603 இல், கயத்தார், பாளையக்காரர், மதுரை நாயக்கர்களுடன் தூத்துக்குடியைத் தாக்கியபோது, இக்குருமடம் அழிக்கப்பட்டது. ஏழைகளின் நலனுக்காக தந்தை ஹென்றிகஸ் 1550 இல், புன்னைக்காயலில் முத்துக்குளித்துறையின் தலைமை மாலுமி பொருளுதவியால் ஒரு மருத்துவமனையை அமைத்தார். இதைத் தொடர்ந்து, மணப்பாடு, வீரப்பாண்டியன் பட்டினம், தூத்துக்குடி மற்றும் வைப்பாரில் மருத்துவமனைகள் 1571 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே நிறுவப்பட்டன. தூத்துக்குடி மற்றும் புன்னைக்காயல் மருத்துவமனைகள் பெரியளவில் இயங்கின. மக்களின் தாராள நிதியுதவியால் இம்மருத்துவமனைகள் பராமரிக்கப்பட்டன.

53 ஆண்டுகள் (1547-1600) முத்துக்குளித்துறையில் சமயப்பணி, அச்சுப்பணி, தமிழ் இலக்கியப்பணிகள், மருத்துவப்பணி என மகத்தான சேவை புரிந்த தந்தை ஹென்றிகஸ், தனது 80 ஆவது வயதில், 1600 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22 அன்று மரித்தார். கிறிஸ்தவர்களால் புனிதராக போற்றப்பெற்ற தந்தையின் மரணம் கேட்டு, முத்துக்குளித்துறையே கண்ணீர் கடலில் மூழ்கியது. இந்துக்களும், காயல்பட்டினம் இசுலாமியர்களும் தங்கள் கடைகளை அடைத்து, இரண்டு நாட்கள் உபவாசம் இருந்து, துக்கம் அனுசரித்தனர். தந்தை ஹென்றிகஸ் உடல் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(தொடரும்)

Comment