
முத்துக்குளித்துறை விழா
தமிழகத்தில் கிறிஸ்தவம்
புனித பனிமய அன்னை பெருவிழா
முத்துக்குளித்துறை விழாக்கள் பலவிதமான அலங்காரம், இசை வாத்தியங்களுடன் எப்போதும் தடபுடலாக நடைபெற்றது. கிறிஸ்தவ நாடகங்களின் அரங்கேற்றமும், பாஸ்கா நாடகமும் ஆண்டு தோறும் நடந்தேறின. பின்னாட்களில், இந்த பாஸ்கா நாடகங்கள் மதுரை மறைத்தளம் முழுவதும் பாஸ்கா காலங்களில் அரங்கேறின. இயேசுவின் பிறப்பு, வாழ்வு, புதுமைகள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய மீட்பின் நிகழ்வுகள் மக்களின் மனதில் பதியும்வண்ணம், தத்ரூபமாக நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஆவூர், மலையடிப்பட்டி, மேட்டுப்பட்டி (திண்டுக்கல்), சருகணி, இடைக்காட்டூர் பங்குத்தளங்களில், பழைய பாரம்பரியப் பின்னணியோடு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 1579 ஆம் ஆண்டு, தகவலின்படி திருவிழா நாட்களில் ஏராளமான மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றுக் கொண்டனர். பெண்கள் தங்கள் கணவர்களைக் கட்டாயப்படுத்தி, இவ்வருள்சாதனைத்தை பெற்றுக் கொள்ள உதவினர். நற்கருணை திருவிழா மிக கோலாகலமாக பல மறைத்தளங்களில் கொண்டாடப்பட்டது. இவ்விழாக்களில், குருக்கள் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று உதவினர்.
மக்கள் ஆலயங்களைச் சந்தித்து, மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டனர். எழில்மிகு வடிவத்தில் பெருந்தொகை கொண்டு கட்டப்பட்ட, மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்திற்கு மக்கள் திருப்பயணமாகச் சென்றனர். புன்னைக்காயல் - இராஜ கன்னி மாதா, மணப்பாடு - தூய ஆவி மற்றும் திருத்தூதர் யாக்கோபு, தூத்துக்குடி - புனித இரக்கத்தின் (பனிமய) அன்னை போன்ற ஆலயங்கள், அந்நாட்களில் புகழ்பெற்று திகழ்ந்தன. தூத்துக்குடியில் முதல் ஆலயம் 1538 இல், புனித பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1579 இல், புன்னைக்காயலிலிருந்து, தூத்துக்குடிக்கு இயேசு சபையினர், தங்கள் மறைத்தளத்தின் தலைமையிடத்தை மாற்றினர். தங்கள் துறவற இல்லத்தில் இரக்கத்தின் அன்னை என்ற பெயரில் ஒரு சிற்றாலயத்தை நிறுவினர். இவ்வாலயம் 1582 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் நாள், புனித பனிமய அன்னை திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. இரக்கத்தின் அன்னை ஆலயம் அர்ப்பணிக்கப்பட்ட நாளை, ஆண்டுதோறும் முத்துக்குளித்துறையில் பெருவிழாவாகக் கொண்டாடினர். காலப்போக்கில் இவ்வாலயம் புனித பனிமய அன்னை ஆலயமாக அறியப்பட்டது. இத்திருத்தலப் பேராலயத்தில் வீற்றிருக்கும் புனித பனிமய அன்னை சுரூபம், 16 ஆம் நூற்றாண்டில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலுள்ள அகஸ்தீனிய அருட்சகோதரிகள் துறவு மடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தனது மறைப்பணி பயணத்தில் இம்மடத்திற்குச் சென்ற புனித பிரான்சிஸ் சவேரியார், இரக்கம் நிறைந்த அன்னையின் சுரூபத்தை தூத்துக்குடியில் நிறுவிட கேட்டார். ஆனால், அவர்கள் அப்போது மறுத்து விட்டார்கள். பின்னர், சவேரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னையின் சுரூபத்தை முதலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். இலங்கையின் கலி துறைமுகத்திலிருந்து ஒரு தோணியில், தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, 1600 ஆம் ஆண்டு, ஜூன் 9 ஆம் நாளன்று, வெகு ஆடம்பரமாக நிறுவினர். தற்போதைய பேராலயம், 1712 இல், தந்தை விஜிலியுஸ் அவர்களால் எழுப்பப்பட்டது. மக்கள் இவ்வாலயத்தை அன்புடன் “மாதாக்கோவில்” (அ) “பெரியக்கோவில்” என அழைக்கின்றனர். தூத்துக்குடி மறைமாவட்ட திருஇருதய ஆண்டவர் பேராலயம் “சின்னக்கோவில்” என அழைக்கப்படுகிறது. புனித பனிமய அன்னையின் முதல் தேர்பவனியானது 1702 இல் நடைபெற்றது. முதல் தங்கத் தேர்பவனி, 1806 இல் எடுக்கப்பட்டது. அன்று முதல் சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் இத்தேர்பவனி நடைபெறுகிறது. முத்துக்குளித்துறை மக்கள் இவ்வாலய விழாவை, தங்கள் விசுவாசம், பண்பாட்டின் அடையாளமாக முன்னிறுத்துகிறார்கள். புனித பனிமய அன்னையை இலத்தீன் மொழியில் “சாந்த மரிய தஸ்நேவிஸ்” என அழைக்கின்றனர். வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரப்பாண்டியன்பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு என்ற ஏழு கடற்கரைகளின் தாய் எனவும் போற்றப்படுகின்றார்.
முத்துக்குளித்துறையை டச்சுப்படைகள் கைப்பற்றல்
போர்த்துக்கீசிய தொடர்பால் பொருளாதாரத்தில் முன்னேறிய பரதவர்கள்மீது, விஜயாபதி பாளையக்காரர், ஆரிய பெருமாள் வன்மம் கொண்டு அவர்களைத் துன்புறுத்தினான். உவரியை தீக்கிரையாக்கி, ஆலயங்களை அவமதித்தும், இடித்துத் தள்ளி, பெண்களை கவர்ந்துச் சென்றான். இதனால் கோபமுற்ற மணப்பாட்டின் 300 இளைஞர்கள், ஓர் இரவு திடீரென விஜயாபதியின் கோட்டையைத் தாக்கி, ஆரிய பெருமாள் மற்றும் குடும்பத்தார் அனைவரையும் வாள்முனையில் நிறுத்தினர். பரதவர்களின் எழுச்சியை ஏற்றுக்கொள்ளாத மதுரை நாயக்கர் 1601 - 1602 ஆகிய ஆண்டுகளில் அதிக வரி விதித்து, இம்மக்களை கொடுமைபடுத்தினான். அநீதியான இந்நிகழ்வுகளை கேள்விப்பட்ட மன்னர், போர்த்துக்கீசிய தலைமை மாலுமி, முத்துக்குளித்துறையில் புகழ்பெற்றுத் திகழும் இந்துக்கோவிலை தரைமட்டமாக்குவேன் என மிரட்ட, மதுரை நாயக்கர் அடிபணிந்தார். கயத்தார், பாளையக்காரரும் அதிக வரிகளை விதித்து, மக்களை கொடுமைப்படுத்தினர். இத்தகைய தொடர் துன்பங்களிலிருந்து தூத்துக்குடி கிறிஸ்தவர்களை விடுவித்திட போர்த்துக்கீசியரின் அனுமதியைப் பெற்று, இயேசு சபையினர் அருகிலுள்ள அரசத்தீவிற்கு கிறிஸ்தவர்களை குடியமர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால், இந்நிகழ்வை தவறாகப் புரிந்துகொண்ட கொச்சின் ஆயர், தன்னுடைய ஞான அதிகாரத்திலிருந்து விடுபடவே இந்நிகழ்வு நடப்பதாக கோபம் கொண்டார். மீனவ பட்டங்கட்டிகளும் நிலைமையை எடுத்துரைத்தும் ஆயர் ஏற்கவில்லை. இயேசு சபையினரை முத்துக்குளித்துறையின் மறைப்பணியிலிருந்து விடுவிப்பதாக ஆணைப் பிறப்பித்தார். அரச தீவிற்கு சென்று, மக்களை மீண்டும் முத்துக்குளித்துறைக்கு போகச் செய்தார்.
பட்டங்கட்டிகளின் முதன்மையான ஜாதித் தலைவன் மற்றும் சில பட்டங்கட்டிகளும் ஆயரை ஆதரிக்க, கொச்சி மறை ஆயர், தனது மறைமாவட்ட குருக்கள் சிலரை முத்துக்குளித்துறைக்கு அனுப்பினார். வைப்பார் மற்றும் வேம்பார் மக்கள் இம்மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தனர். பல கிறிஸ்தவ குடும்பங்கள் மன்னார் மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழப்பமான சூழ்நிலையைப் போக்க, இயேசு சபையினர் முத்துக்குளித்துறை மறைத்தளத்திற்கு திரும்ப வேண்டுமென போர்த்துக்கல் அரசர் 1614 இல், உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அவ்வுத்தரவு 1621 இல் தான் நடைமுறைக்கு வந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் இயேசு சபையின் மறைப்பணியின்றி, முத்துக்குளித்துறை ஆன்மீகம் மற்றும் பொருளாதாரத்திலும் தடுமாறியது. பரதவர்களிடையே சண்டை, சச்சரவுகள், மீன்பிடிப்பு அதிகம் நடைபெறாதது ஆகியவை பட்டினி நிலைக்கு மக்களைத் தள்ளியது. இயேசு சபையினர் மீண்டும் வந்தாலும், மக்களிடம் பழைய நற்பெயர் கிடைக்கவில்லை. மக்கள் விரும்பாத ஹென்றி தெ குருஸ் என்பவனை, ஜாதித் தலைவனாக தூத்துக்குடி அதிபர் தந்தை ஆன்ரூ பெரைரா நியமித்தார். மக்களின் எதிர்ப்பைக் கண்டு மாற்றினார். ஆனால், அவனோ இயேசு சபையினருக்கு பெரும் எதிரியாக மாறிட, நாகப்பட்டினம் முன்னாள் தலைமை மாலுமி அவனை கொலை செய்து விடுகிறார். இதனால் பதற்றம் பற்றிக் கொண்டு, இயேசு சபையினர் புன்னைக்காயலில் தஞ்சமடைந்தனர். 1626 இல், மீண்டும் தூத்துக்குடி திரும்பி, 4000 பேருக்கு திருமுழுக்களித்தனர். தந்தை அந்தோனி ரூபினோ, மதுரையின் திருமலை நாயக்கரைச் சந்தித்து, பரதவ மக்களுக்கு வரிவிலக்குப் பெற்றார். போர்த்துக்கீசியர் மீது கொண்ட கோபத்தால், 1634 இல், திருமலை நாயக்கர் தூத்துக்குடியை தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். 1644 ஆம் ஆண்டு, இயேசு சபைக்குரு ஆன்ரூ லோபேஸ் ஆண்டறிக்கையின்படி, முத்துக்குளித்துறையில் 26,218 கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழ்ந்தனர். இயேசு சபை மறைமாநில அதிபர் இக்னேஷியஸ் புருனோ 1648 இல், மரியாயின் சேனையை நிறுவினார். அதில் பட்டங்கட்டிகள் முதல் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். இக்குழு மறைப்பணிக்கு பேருதவியாக இருந்தது.
1658 இல், டச்சுப்படைகள் முத்துக்குளித்துறையை கைப்பற்றி, போர்த்துக்கீசியர்களை விரட்டியடித்தனர். பிரிவினை சபையாளராகிய டச்சுக்காரர்கள், மதுரை நாயக்கரின் உதவியுடன், இயேசு சபையினரையும் வெளியேற்றினர். முத்துக்குளித்துறை மக்கள் பிரிவினை சபையை பின்பற்ற கட்டாயப் படுத்தப்பட்டனர். ஒரு சில வசதி படைத்த வணிகர்கள் மட்டும்தான் டச்சுக்காரர்களுக்கு அஞ்சி, அவர்களின் பிரிவை ஏற்றுக் கொண்டனர். பிரிவினை சபையாளருக்கு எதிராக நின்ற ஜாதி தலைவனை டச்சுக்காரர்கள் கொன்றனர். 1685 இல் கத்தோலிக்க ஆலயங்களை, இராணுவத் தளங்களாகவும், இராணுவ குடியிருப்புகளாகவும் மாற்றினர். இயேசு சபையினர் முகமதியர்களைப் போல, உடையணிந்து கொண்டு, மக்களின் ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்தனர். கத்தோலிக்க குருக்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்த டச்சுக்காரர்கள், மதுரை நாயக்கரிடம் எடுத்துச் சென்றனர். அவரோ இதில் தலையிட மறுத்துவிட்டார். மக்கள் தங்கள் விசுவாசத்தைக் காக்க பல இடங்களுக்குச் சென்றனர். இதனால், 25000 கத்தோலிக்கர் மட்டும் 1715 இல் இப்பகுதியில் வாழ்ந்தனர். ஏறக்குறைய 12 குருக்களும், 30 வேதியர்களும் இன்னல்களுக்கு மத்தியில் பரதவர் ஊர்களுக்கு வெளியே தங்கி, பணியாற்றினர்.
இயேசு சபையினர் தங்களது மறைப்பணி தலைமையகத்தை தூத்துக்குடியிலிருந்து, மணப்பாட்டிற்கு 1713 இல் மாற்றினர். இந்நகரில் 3500 கிறிஸ்தவர்களும், தூத்துக்குடியில் 8520 கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர். பாளையங்கோட்டை அருகே புதுச்சந்தையில் தங்களுக்கென வணிக மையத்தை பரதவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். இங்குள்ள புனித சவேரியார் ஆலயம், 30 கிராமங்களின் மறைத்தளமாக திகழ்ந்தது. இறை மக்களிடையே போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் கிறிஸ்தவத்திற்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தின. ஆனால், அவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டன என்கின்றார் தந்தை தார்ட். 1710 இல், பெரியப்பட்டினத்தில் 3583 பேர், திருமறையைத் தழுவினர். 1708 இல், அமந்தலை கடையர்கள் 1000 பேருக்கும் மேல் திருமுழுக்குப் பெற்றனர். நாடார்கள் கத்தோலிக்க திருமுறையை தழுவியது 1700 முதல் பதிவாகியுள்ளது. கன்னங்குளம், இராஜ கிருஷ்ணபுரம், ஆலயபுரம் ஆகிய பகுதிகளின் நாடார்கள் பெருமளவில் திருமுழுக்குப் பெற்றனர். இப்பகுதிகளில் வாழ்ந்த வண்ணார் இன மக்களும் கத்தோலிக்க மறையைத் தழுவினர். டச்சுக்காரர்களின் அடாவடியால் பரதவர்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் புன்னைக்காயல், பழையக்காயல், முக்கூர், வைப்பார், வேம்பார், வீரப்பாண்டியன்பட்டினம், ஆலந்தலை, பெரியதாழை, கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், பெரியப்பட்டினம் போன்ற கடலோர கிராமங்களில் 1733 ஆம் ஆண்டு, பஞ்சம் தலைவிரித்தாடியது. இயேசு சபையினருக்கும், கொச்சின் ஆயர்களுக்குமான புரிந்துணர்வில் அவ்வப்போது பல்வேறு பிணக்குகள் ஏற்பட்டன. போர்த்துக்கல்லில் இயேசு சபையின் முடக்கத்தையொட்டி 1765 ஆம் ஆண்டே, 3 பிரான்சிஸ்கன் துறவிகள் முத்துக்குளித்துறைக்கு வந்து, இயேசு சபையினரின் பணியை ஏற்று, செயலாற்றினர். பின்னாட்களில் கோவா, மயிலை மறைமாவட்டக் குருக்களும் உதவிக்கு வந்தனர்.
(தொடரும்)
Comment