தமிழகத்தில் கிறிஸ்தவம் – 27
இந்து சிலைகளுக்குப் பூசை செய்து வந்த மற்றொரு கிராமத்தில் ஒரு முதியவர், அவரது மகன் மற்றும் அவரது மருமகன் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இதனால் அக்கிராமம் அவர்களுக்கெதிராக வெகுண்டெழுந்தது. கிறிஸ்தவத்தை மறுத்து பழைய சிலை வழிபாடுகளுக்குத் திரும்புமாறு அச்சுறுத்தினர். முதியவர் மட்டும் வேதனை தாங்க இயலாமல் அந்நேரத்தில் அவர்களுக்குக் கட்டுப்பட்டார். அவரது மகனோ, தானும் ஒரு வேளை கிறிஸ்தவத்தை மறுக்கக்கூடும் என அஞ்சி ஊரை விட்டு வெளியேறினார். 19 வயது நிரம்பிய அவரது மருமகன் ஊரை விட்டு நீங்காமல், எத்தனை துயரம் வந்தாலும் கிறிஸ்துவை மறுப்பதில்லை என உறுதியோடு இருந்தார். இயேசுவை நிந்திக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால், தன் நாக்கை வெட்டி எறிய துணியும் அளவிற்கு அவ்விளைஞன் கிறிஸ்துவின் மீது பற்றுறுதி கொண்டிருந்தான். அவனைச் சாட்டையால் அடித்தனர். அவனோ சிரித்துக்கொண்டே அந்த அடிகளைத் தாங்கிக் கொண்டான். இதனால், சினங்கொண்டு அவனை இரும்புக் கம்பிகள், சங்கிலியால் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தினர். மேலும், மரண வலிகளைத் தருகின்ற கொடிய தண்டனைகளை அவ்விளைஞனுக்குத் தந்தபோதும், அனைத்து வேதனைகளையும் தாங்கி, தனது விசுவாசத்தில் உறுதியோடு இருந்தான். எனவே, இவ்வரிய நிகழ்வைக் கண்ட அக்கொடுமைக்காரர்கள் அச்சமுற்று அவனை விடுதலை செய்தனர். இதனைப் பற்றிக் கேள்விப்பட்ட பலர் கிறிஸ்தவத்தை ஏற்று மறைசாட்சியாக மரிக்கவும் முன்வந்தனர். இவ்வாறு புதிய கிறிஸ்தவர்களின் வழியாக இறைவன் பல அரும்பெரும் செயல்களை ஆற்றினார். இதனால் பட்டிதொட்டியெல்லாம் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது.
1663-இல் தென்காசி பாளையம் முதல் மீன்குளம் வரை 252 பேர்கள் திருமுழுக்குப் பெற்றனர். 1665-இல் தந்தை பல்தசார் தென்காசி, திருநெல்வேலி, பாளையம், மாரந்தை பகுதியில் 485 பேர்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். இவர்களில் 20 பேர் நாயக்கர்கள் ஆவர். தங்களின் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட யோகிகள் கிறிஸ்தவ மிஷனரிகளை விரட்ட நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். ஞானப்பிரகாசம், பீட்டர், தாமோதராஜ், மெய்யப்பன் போன்ற உபதேசிமார்கள் இப்பகுதியில் மிகச் சிறப்பாக நற்செய்திப் பணி ஆற்றினர். சாந்தாயி என்ற மற்றொரு பெண் கயத்தார் வெள்ளாளர்கள் மத்தியில் ஆன்ம வேட்கையுடன் மறைப்பணியாற்றி பலர் கிறிஸ்தவராகிடத் துணை நின்றார்.
காமநாயக்கன்பட்டியில் கிறிஸ்தவத்தின் எழுச்சி
கி.பி 1688-ஆம் ஆண்டறிக்கையில் காமநாயக்கன்பட்டியின் பெயர் முதல்முறையாக வருகின்றது. புனித அருளானந்தர் திருவருள் சாதனங்களை வழங்குவதற்காக அடிக்கடி இங்கு வந்து சென்றார். 1700-களில் மதுரைக்குத் தெற்கே காமநாயக்கன்பட்டி மற்றும் வடக்கன்குளம் புகழ் பெற்ற மறைத் தளங்களாகத் திகழ்ந்தன.
தந்தை போர்ச்சிஸ் மற்றும் நான்கு உபதேசிமார்கள் 40 நாள்கள் திருநெல்வேலி சிறையில் வாடினர். தந்தை புசே, இராணி மங்கம்மாளைச் சந்தித்து விடுதலைக்கு உதவி, தந்தை போர்ச்சிஸை வடக்கன்குளத்திற்கு அனுப்பினார். 1708-11 ஆகிய ஆண்டுகளில் தந்தையர் பெர்னார்டு தெசா மற்றும் லூயி நட்டால் 1000-க்கும் மேற்பட்டோருக்குத் திருமுழுக்கு தந்தனர். இந்நாள்களில் தந்தை வீரமாமுனிவர் குருக்கள்பட்டி மற்றும் காமநாயக்கன்பட்டியில் பணியாற்றினார். உலகநாதன் கயத்தார் பாளையக்காரராக இருந்தபோது கிறிஸ்தவர்களைச் சொல்லொண்ணா துன்பத்திற்கு உள்ளாக்கினான். ஆலயத்தை இடித்துத் தள்ளி உபதேசிமார்களை அவமானப்படுத்தினான். இத்தனை இடர்ப்பாடுகளின் மத்தியிலும் 1714-இல் 575 பேர்கள் திருமுழுக்குப் பெற்றனர்.
சேந்தமரம் இந்து சாணார்களுக்குக் கிறிஸ்தவச் சாணார் பெண்களை மணமுடிக்க வேண்டும் என அவ்வூரின் தலைவர் கட்டளை பிறப்பிக்க, அதைக் கிறிஸ்தவர்கள் எதிர்த்து ஒரு வழக்குத் தொடுத்தனர். 1716-இல் தந்தை பிரான்தோலினி ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாட சேந்தமரம் புனித பேதுரு-புனித பவுல் ஆலயத்திற்கு வந்தார். அப்போது பெண்கள் பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த கதியைச் சொல்லி, கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அவர்களை மரியன்னையின் சுரூபத்திற்கு முன்பாக அழைத்துச் சென்று அவர்களின் வழக்கு வெற்றி பெற ‘ஆவே மரியா’ என அழைத்துக் கண்ணீரோடு செபிக்கச் செய்தார். இரவு முழுவதும் செபித்தனர். மறுநாள் கிறிஸ்தவர்கள் சார்பாக அவ்வழக்கு வெற்றி பெற்றது. கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய உலகநாதன் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அரண்மனையிலிருந்து அமைச்சர்களால் விரட்டியடிக்கப்பட்டு, உபதேசிமார் வீட்டில் தஞ்சமடைந்தான். அவனைக் கிறிஸ்தவர்கள் பரிவுடன் நடத்தினர். இவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயல்பட்ட மூன்று நபர்கள் கொடூரமான சாவினைச் சந்தித்தனர். 1727, 1728 ஆகிய ஆண்டுகளில் தந்தையர் அலெக்சிஸ் பிண்டோ, புராஸ்பர் ஜூலியானி 950 பேர்களுக்குக் காமநாயக்கன்பட்டியில் திருமுழுக்களித்தனர்.
1729-இல் காமநாயக்கன்பட்டி கிராமம் மற்றும் ஆலயத்தில் திருட வந்தனர். அப்போது ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவர் கண்ட நிகழ்வு: உள்ளே நுழைந்த திருடன் புனித மரியன்னை சுரூபத்தை எடுத்துச் செல்ல முற்பட்டான். உடனே அவனுக்குப் பார்வை போயிற்று. எனவே, அச்சுரூபத்தைப் பீடத்திலே வைத்துவிட்டு, செய்வதறியாது திகைத்துப் போய் தனக்கு உதவிடுமாறு கத்திக்கொண்டே தட்டுத் தடுமாறி ஆலயத்தை விட்டு வெளியேறினான். 1731-ஆம் ஆண்டு தகவலின்படி மறு சீரமைக்கப்பட்ட காமநாயக்கன்பட்டி ஆலயம் புனித விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்ற தகவலை வீரமாமுனிவர் தருகின்றார். 1746 - இல் சேதுவாய்க்கால் மற்றும் இராஜபாளையம் அருகேயுள்ள வாணியம்பட்டியில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. 1729-1756 வரையுள்ள 25 ஆண்டுகளில் காமநாயக்கன்பட்டி, குருக்கள்பட்டி, கயத்தார் மற்றும் சேந்தமரம் பகுதிகளில் 5592 பேர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.
மறவ நாட்டில் மறைப்பணி
முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர்கள், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அவர்களது தலைமையில் 17-ஆம் நூற்றாண்டு முதல் இந்நிலம் ஆளப்பட்டு வந்ததால் ‘மறவ நாடு’ எனப் பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும், இங்கு வெள்ளாளர்கள், உடையார், பறையர், பள்ளர், அகமுடையார், நாடார், இடையர், பரதவர், கடையர் போன்ற தமிழ்சாதியினரும் இந்நிலப்பரப்பில் பரவி வாழ்கின்றனர். ‘இராமநாடு’ ஆவணக் குறிப்பின்படி மறவ நாட்டின் முதல் சேதுபதி (குறுநில மன்னன்) சடையக்க தேவர் உடையான். இவர் 1605 முதல் 1621 வரை ஆட்சி செய்தார். இவரது மூத்த மகன் கூட்டன் சேதுபதி,1622-1635 வரை மறவ நாட்டை ஆண்டார். இவருக்குப் பிள்ளைகள் இல்லாததால் இவரின் தம்பி தளவாய் சேதுபதி என்ற 2-ஆம் சடையக்க தேவர் 1635 முதல் 1646 வரை ஆட்சி செலுத்தினார். மேலும், தனக்குப் பிறகு தனது சகோதரி காத்தாலி நாச்சியாரின் மகன் இரகுநாதத் தேவனைத் தனது வாரிசாக அறிவித்தார்.
காளையார்கோவில் பாளையத்தை ஆண்ட தளவாயின் தம்பி, தம்பித் தேவர் வெகுண்டெழுந்து, மதுரை நாயக்கர் படையுடன் சென்று இராமநாதபுரத்தைக் கைப்பற்ற, சேதுபதி தளவாய் தப்பித்து, பாம்பன் தீவில் தஞ்சம் புகுந்தார். இதனால் மதுரை இரங்கன நாயக்கர் மற்றும் இராமைய்யா பாம்பன் தீவை நோக்கி ஒரு கட்டுமரப் பாலத்தை எழுப்பி வீரர்களை அனுப்பினர். சேதுபதிக்கு உதவிக்கு வந்த ஐந்து போர்த்துக்கீசிய கப்பற்படைகள் மற்றும் சேதுபதியின் படைகளை வீழ்த்தி, அவரை மதுரை சிறையில் அடைத்தனர். பெருமாள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருமலைநாயக்கர் தளவாய் சேதுபதியை விடுதலை செய்தார். ஆனால், தம்பித் தேவர் மீண்டும் போர் தொடுத்து 1646-இல் தன் அண்ணன் சேதுபதி தளவாயைக் கொலை செய்தான்.
இந்நிகழ்விற்குப் பிறகு மன்னர் திருமலை நாயக்கர் மறவ நாட்டைப் பிரித்து இராமநாதபுரத்தைத் திருமலை இரகுநாதத் தேவருக்கும், சிவகங்கையைத் தம்பித் தேவருக்கும், திருவாடானையை இரகுநாததேவரின் தம்பிமார்கள் தனகத் தேவருக்கும், நாராயணத் தேவருக்கும் அளித்து ஆட்சி புரியச் செய்தார். குறுகிய காலத்திலே தம்பித் தேவர் இறந்துவிட, தனகத் தேவர் சிவகங்கைச் சீமையின் பாளையக்காரராக 1672 வரை மதுரை நாயக்கர் கீழ் இல்லாமல் சுதந்திரமாக ஆட்சி செய்தான். இவன் காலத்தில் கிறிஸ்தவர் சொல்லொண்ணாத் துன்பத்திற்குள்ளாகினர்.
(தொடரும்)
Comment