No icon

புதிய தொடர்

இறைவேண்டலின் பரிமாணங்கள்

1. இறைவேண்டல்

ஆர்வம்!

திருத்தந்தை பிரான்சிஸ் 2025-ஆம் ஆண்டை, இயேசு கிறிஸ்து பிறந்த 2025-ஆம் ஆண்டு யூபிலியாகக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு ஆயத்தமாக இந்த 2024-ஆம் ஆண்டைஇறைவேண்டல் ஆண்டாககடைப்பிடிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்பது யூபிலி ஆண்டின் இலக்காகத் தரப்பட்டுள்ளது. இத்திருப் பயணத்துக்கு ஆற்றல் தரும் அருமருந்தே இறை வேண்டல்.

இந்த ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணிகளான நாம் அனைவரும் தனியாகவும், குடும்பமாகவும், திரு அவையாகவும் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைவேண்டல் என்பது பன்முகத்தன்மை கொண்டது. இறைவேண்டலில் பல வகைகள், பல தளங்கள், பல கூறுகள், பல வெளிப்பாடுகள் எனப் பற்பல பரிமாணங்கள் இருக்கின்றன. இந்த இறைவேண்டல் ஆண்டை இறைவன் தந்த வாய்ப்பாகக் கருதி, இறைவேண்டலின் அத்தனை பரிமாணங்களையும் நாம் திருவிவிலியம், திரு அவையின் மறைக்கல்வி, போதனைகள், திரு மரபுகள் ஆகியவற்றின் ஒளியில் அலசி, ஆய்வு செய்து, நம் வாழ்வோடு இணைத்துக்கொள்ளலாம். இந்த இறைவேண்டல் பயணத்தின் முதல் படியாக அமைவது இறைவேண்டல் ஆர்வம். ஆம், அதுதான் நம் செப வாழ்வின் அடித்தளம்.

இறைவேண்டலுக்கான ஆர்வம்

முப்பத்தெட்டு ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த ஒரு மனிதரை இயேசு சந்தித்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ‘நலம்பெற விரும்புகிறீரா?’ (யோவா 5:6) என்று கேட்டு அந்த மனிதரை மட்டுமல்ல, நம்மையும் வியப்படையச் செய்கிறார். ஆம், நலம் பெறுவதற்கான முதல் படி அதற்கான விருப்பம்தான். அதுபோலவே, இறைவேண்டலுக்கான முதல் படி செப ஆர்வமே.

எனவே, இந்த ஆண்டில் நம் முதல் கவனம் செப ஆர்வத்தை நோக்கித் திரும்பட்டும். நம்மில் பலருக்கும் செபம் என்றாலே சலிப்பு, சோர்வு, ஆர்வமின்மை வந்துவிடுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இறைவேண்டல் செய்ய முதன் முதலில் தேவையானது ஆர்வமும், விருப்பமுமே.

கடவுளை விட்டு அகன்று செல்வதில், முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதைவிடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள்” (பாரூக் 4:28) என்ற இறைவாக்கினர் பாரூக்கின் அழைப்பு நம் கவனத்தை ஈர்க்கிறது.

இறைவனைத் தேடுவதுதானே இறைவேண்டலின் இலக்கு? எனவே, தொலைக்காட்சி, இணைய தளம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றைவிட பன்மடங்கு ஆர்வத்துடன் நாம் இறைவனைத் தேடவேண்டும். அதுவே நம் இறைவேண்டலின் முதல் படியாகும்.

குறிப்பேடு இரண்டாம் நூலில் யூதா மக்களின் இறையார்வம் பற்றிய செய்தி ஒன்றை வாசிக்கிறோம். அவர்கள் எருசலேமில் கூடிதங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடுவோம்” (2குறி 15:12) என்று உடன்படிக்கை செய்து கொண்டார்கள். எக்காளங்களும், கொம்புகளும் முழங்க, மிகுந்த ஆரவார ஆர்ப்பரிப்புடன் ஆண்டவரிடம் ஆணையிட்டார்கள். இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஏனெனில், “அவர்கள் தங்கள் முழு இதயத்தோடு ஆணையிட்டனர். ஆர்வத்துடன் அவரை நாடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்” (2 குறி 15:15). இத்தகைய ஆர்வமே நமக்கும் தேவை.

யோபுவின் வாழ்வில் துன்பியல் நிகழ்வுகள் பல நடந்த பிறகு, அவரைக் காண வந்த நண்பர்களுள் ஒருவரான சூகாயனான பில்தாது யோபுவிடம்நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால், எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால், நீர் மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தால், இப்பொழுதுகூட அவர் உம் பொருட்டு எழுந்திடுவார். உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்” (யோபு 8:5) என்று ஊக்குவித்தார். இறைவன்மீது ஆர்வம் கொண்டவர்கள் அனைத்து ஆசிகளையும் பெற்றுக் கொள்வர்.

இறைவேண்டல் ஆர்வத்திற்குத் திருப்பாடல்களில் ஓர் எடுத்துக்காட்டை நாம் காண்கிறோம். “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்” (திபா 122:1) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். அழைப்பைக் கேட்டபோதே அவர் அகமகிழ்ந்தாராம். நாம் எப்படி?

சிலருக்குக் கோவில் மணியோசை கேட்டாலே சலிப்பாக, பாரமாக இருக்கும். இத்தகையோர் இத்திருப்பாடல் வரிகளை மனத்தில் கொள்ள வேண்டும். அதே திருப்பாடல் நூல்ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்” (திபா 100:2) என்று அழைப்பதையும் நாம் நெஞ்சில் பதிப்போம்.

நாம் ஆர்வமுடன் இறைவேண்டல் செய்ய ஒருவரின் உதவி அவசியம் தேவை. அவர்தாம் தூய ஆவியார். ஆம், தூய ஆவியார்தாம் நம் சலிப்பை, சோர்வை, ஆர்வமின்மையை நீக்கி, நமக்கு ஆர்வமூட்டுபவர். எனவே, “தூய ஆவியின் துணையுடன் இறைவேண்டல் செய்யுங்கள்” (யூதா 1:20) என்னும் இறைவாக்கின்படி, தூய ஆவியாரின் துணையுடன் நாம் ஆர்வத்தோடு இறைவேண்டல் செய்வோமாக!                        

(தொடரும்)

Comment