கிறிஸ்தவ ஒன்றிப்பு சாத்தியமா?
கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில் தடம்பதித்த ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965). இச்சங்கம் 16 ஏடுகளை வெளியிட்டது. அதில் ஒன்றுதான் ‘கிறிஸ்தவ ஒன்றிப்பு’ பற்றிய விதித் தொகுப்பாகும். இன்று ஏறக்குறைய 40,000 கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்குள் கொண்டு வருவதென்பது ஓர் இமாலயப் பணியாகும்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு - தடைகள்
• “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா 17:21) என்று இயேசு அனைத்து மக்களின் ஒற்றுமைக்காகவும் வேண்டல் செய்தார். ஆனால், 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து பல பிரிவுகளும் பிளவுகளும், கோட்பாடுகள், வாய்ப்பாடுகள், சொல்லாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வந்திருக்கின்றன.
• அன்னை மரியா பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பக்தி முயற்சிகள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்குப் பெரிய தடையாக இன்றுவரை இருந்து வருகிறது.
• புனிதர்கள் வணக்கம் ஆலயங்களுக்குள் புனிதர் ஒருவரின் (அன்னை மரியா உள்பட) திருவுருவம் ஒன்றுக்குமேல் இருக்கக்கூடாது என்கிறது உரோமைத் திருப்பலி நூல் 2000, எண் 318. ஆனால், சில இடங்களில் ஆலயத்திற்கு உள்ளேயும் திரு உருவங்கள் உள்ளன. ஆலயத்திற்கு வெளியே எண்ணற்ற திரு உருவங்கள் இருக்கின்றன. இது எதைக் காட்டுகிறது? இதன் பின்னால் உள்ள கத்தோலிக்க மனநிலை என்ன?
• கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வெளியே பொதுவான ஒரு திருச்சிலுவை மட்டும் போதாதா?
• இன்னும் சில இடங்களில் திங்கள் (சகாய மாதா), செவ்வாய் (அந்தோணியார்), புதன் (யோசேப்பு), வியாழன் (குழந்தை இயேசு), வெள்ளி (இறை இரக்கம்), சனி (ஆரோக்கிய மாதா) எனப் புனிதர்களின் நவநாள்கள் இடம்பெறுகின்றன; தேர்ப்பவனிகளும் இடம்பெறுகின்றன. இவைகளுக்கு வந்துவிட்டு, திருப்பலியில் பங்கேற்காது போகும் சில பக்தர்களும் இங்குள்ளனர். இது குறித்துச் சிந்திப்போம்.
• திருப்பலியின் இறுதி ஆசீரில் மூவொரு இறைவனின் பெயருக்குப் பதிலாக மரியா, புனிதர்கள் பெயர் சொல்லி ஆசீர் வழங்குவது சரியா?
• புனிதரைக் குலதெய்வம் போல பாவித்து வழிபடுகிற சிலரும் உண்டு.
• ‘என்னிடம்தான் முழு உண்மை உள்ளது; மற்றவர்கள் என்னிடம் வரவேண்டும்’ என்ற ஆணவம் பிடுங்கி எறியப்பட வேண்டும் என்கிறார் திருத்தந்தை 11-ஆம் பயஸ் (1928-இல் வெளிப்படுத்திய மனநிலை).
கிறிஸ்தவ ஒன்றிப்பு - ஏதுவானவை
கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவாக ‘தலத் திரு அவையின் ஒன்றிப்பு’ எனும் நூலின் ஆசிரியர் சில அருமையான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்:
• இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘திரு அவை’ என்ற ஏடு மரியா குறித்த மிகைப்படுத்தல்களை ஒருபுறமும், பிற கிறிஸ்தவர்களிடையே நிலவும் குறுகிய பார்வையை மறுபுறமும் தவிர்க்கச் சொல்கிறது. தொடர்ந்து மரியன்னை பக்தி முயற்சிகள் கிறிஸ்துவை மையப்படுத்தி அமையும்படிப் பணிக்கிறது (யோ 2:5 - ‘அவர் (இயேசு) உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்றார் மரியா. ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்’ (மாற் 8:7) என்ற இறைத்தந்தையின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா?
• உலகத் திரு அவைகளின் பேரவையில் (World Council of Churches) 325 திரு அவைகள் உறுப்பினர்களாக உள்ளன (கத்தோலிக்கத் திரு அவை இதில் உறுப்பினராக இல்லை?!). ஆனால், இவைகளோடு ஒத்துழைத்து, உரையாடி வருகிறது.
• திருமுழுக்கு அருளடையாளத்தில் கத்தோலிக்கமல்லாத ஒரு திரு அவைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்ற ஒருவரை, ஒரு கத்தோலிக்க ஞானப்பெற்றோருடன் சேர்த்துச் சாட்சியாக அனுமதிக்கலாம் (திரு அவைச் சட்டம் - 872/2).
• ஒரு கிறிஸ்தவரைக் கத்தோலிக்கத் திரு அவையின் முழு உறவு ஒன்றிப்பில் ஏற்கும் பொழுது, எவ்விதமான வெற்றி அக்களிப்பின் சாயலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் (காண்: விதி முறை ஏடு, 193, எண் 99).
• 1990-ஆம் ஆண்டின் கீழைத் திரு அவைச் சட்டத் தொகுப்பை அடியொற்றி, 2016-இல் திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் அருள்பணியாளரை அணுக முடியாத சூழ்நிலையில், ஒரு கத்தோலிக்க அருள்பணியாளரிடமிருந்து சட்டப்படி திருமுழுக்குப் பெறலாம்.
• இதுபோல அணுக இயலாத சூழலில் ஒரு கத்தோலிக்கர், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ அருள்பணியாளரிடமிருந்து (அவர் சபையில் நற்கருணை செல்லத்தக்க விதத்தில் இருந்தால்) சட்டப்படி நற்கருணை பெறலாம் (திச.844/2).
• சீர்திருத்தத் திரு அவை நிகழ்த்தும் வழிபாடுகளில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பங்கேற்கலாம்.
• சீர்திருத்தத் திரு அவை வழிபாடுகளில் கத்தோலிக்கப் பணியாளர் மறையுரை ஆற்றலாம்.
• சனவரி 18-25 கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செப வாரம் ஊக்குவிக்கப்படலாம், ஊக்குவிக்கப்படவேண்டும்.
• சீகன் பால்க், கால்டுவெல், ஜி.யு. போப் போன்றோரின் நினைவு தினங்கள் கொண்டாடப்படலாம்.
• பிற சபைகளோடு கூடிய உரையாடலை ஓர் உத்தியாக மட்டும் கொள்ளாமல், வாழ்வின் வழிமுறையாக்கலாம்.
• அனைத்துத் திரு அவைகளுக்குமான பொதுக் கல்லறைகளை உருவாக்கலாம். இக்கல்லறைகளில் இணைந்து இறைவேண்டல் செய்யலாம்.
ஆழ்நிலை கிறிஸ்தவ ஒன்றிப்பு
• கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது ஏதோ பல கிறிஸ்தவ சபைகள் ஒன்றுகூடி வழிபாடு நடத்துவதும், இறைவேண்டல் செய்வதும் என்பதற்குள் முடக்கப்படும் ஒன்றுபோல் தெரிகிறது. இது மேலோட்டமான கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகும். இது தேவைதான்; ஆனால் போதாது.
• “தந்தையே நீர் என்னுள்ளும், நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா 17:21). இதுவே வேரோட்டமான, ஆழமான அக உறவு ஒன்றிப்பு. இதுதான் கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடித்தளம், அடிப்படை. இதன்மேல் எழுப்பப்படுவதுதான் கூட்டுத் தொழுகை மற்றும் பல இறை ஒன்றிப்புக் கொண்டாட்டங்கள், செயல்பாடுகள்.
• இத்தகைய கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு ஆழமான அருள்வாழ்வு தேவைப்படுகிறது. அதாவது மோதல், எதிர்மறை மனநிலைகளைக் களைய வேண்டும்; ஆவியாருக்குத் திறந்த மனதும், உண்மையைப் பிற சபைகளோடு இணைந்து தேடும் தாழ்ச்சியும், கிறிஸ்தவர்கள் உள்பட அனைவரும் இறைச்சாயலில் படைக்கப்பட்டவர்கள் என ஏற்கும் மனப் பக்குவமும் வேண்டும்.
• இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்வது போல மானிட வாழ்வை வளப்படுத்தும் அனைத்தையும் (யோவா 10:10) இணைந்து தேடும் புதிய மனநிலை (எபே 4: 23-24) தேவை.
• ஒன்றிப்பு என்பது (Unity) ஒருமைப்பாடு அல்ல; Uniformity என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘நம் வாழ்வு’ வாசகத் தோழர்களே! இது குறித்து ஒட்டியோ, வெட்டியோ கருத்துகளைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்; ஒரு தொடர் உரையாடலை உருவாக்குவோம்.
Comment